Wednesday, August 18, 2021

பதிலின்றி...

 தற்கொலை செய்துகொண்டவர்

வாழவேண்டியவர் என்றார்

வாழவேண்டியவர்களை

தற்கொலை செய்துகொள்வதிலிருந்து

பாதுகாக்கிறோமா என்றேன்

போய்விட்டார்

பதிலின்றி

Friday, August 13, 2021

கடைசிவரை

 கடைசிவரை

அம்மாவுக்கு

வாஷிங் மெஷின்

வாய்க்கவே இல்லை

கைகளால் அலசி

அடித்துத் துவைத்து

துணிகளை

அடுக்கிவைத்து

குறைசொல் எதையும்

கொட்டாமல்

புன்னகை மாறா

முகத்தோடே

போய்ச்சேர்ந்தாள்

 


Wednesday, August 11, 2021

அமுதா எனும் தேவதை

 சொர்க்கத்திலிருந்து தங்கை அமுதா போன் செய்தாள்

அண்ணா எப்பிடி இருக்க

கொரோனா எப்படி இருக்கு

எல்லாரும் நல்லா இருக்காங்களா

நல்லவேளை அம்மா அப்பா எதுவும் சிரமப்படாம

என்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க

பாண்டிச்சேரிக்குப் போனால் தன் மகள்களைப்

பார்த்துவரச் சொன்னாள்

அவர்கிட்டயும் அடிக்கடிப் பேசு என்றாள்

அந்த வயிற்றுக்கட்டி ஆப்பரேஷன் சரியாகச் செய்திருந்தால்

கேன்சரிலிருந்து தப்பித்திருப்பேன்

உங்களோடு இருந்திருப்பேன் என்றாள்

மகள்கள் கல்யாணங்களைப் பார்க்காமல் போய்விட்டதைச்

சொல்லி அழுதாள்

பேசிக்கொண்டே போனாள்

நான் புரண்டுபடுத்தேன்

ஈரமான தலையணையைத் தள்ளிவைத்துவிட்டு

கையைத் தலைக்கு வைத்துக்கொண்டேன்

விடிந்தவுடன்

சர்வீசுக்குக் கொடுத்த போனை

வாங்கிவர வேண்டும்

 

 

Wednesday, June 30, 2021

எழுதுவீர்களா

“நீங்கள் எழுதுவீர்களா ’’

“கிறுக்குவேன்’’

“ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்’’

“உடைந்த கனவை

ஒவ்வொரு கனவாக

அடுக்கிவைக்கிறேன்’’

 

“இது கிறுக்கல் அல்ல

அழகாக எழுதி இருக்கிறீர்கள்’’

“நீங்கள் ஒன்றைச் சொல்லுங்கள்’’

“உடைந்த கனவுகள் அல்ல

ஒவ்வொன்றும்

பிரிந்த கனவுகள்’’

 

“ஆஹா இது நான் சொன்னதைவிட

அழகாக இருக்கிறதே

ஆக நாம் இருவரும்

எழுதுபவர்கள்

 சரிதானே’’

 

சிரிக்கிறார்கள்

 

 

Thursday, June 17, 2021

கோமாளியும் குறுஞ்செய்தியும்

குறுஞ்செய்தி அடித்துக்கொண்டிருந்தான் கோமாளி

சர்க்கஸ் ஷோ முடித்துவந்த களைப்பு

கண்களில் ஆரம்பித்து

உடல் முழுதும் பரவி இருந்தது

அவனுக்குப் பின்கதைகள் பல உண்டு

சர்க்கஸ் பார்க்கவந்து

அவனை அநாதையாக

விட்டுப்போய்விட்ட பெற்றோர்

இங்கேயே எடுபிடியாகி

வளர்ந்து

சிரிக்கவைக்கும் சாதுர்யத்தால்

கோமாளியானது

குள்ளமாகக் குழந்தை பிறந்துவிடுமோ

என்ற பயத்துடன்

ஓடிப்போன மனைவி

பிறகு ரிங்மாஸ்டரும்

இல்லாமல்போனது

அடிக்கடி வரும் கால்வலி

வலி மறைக்க

சிரிப்பில் சேர்க்கு ஒலிகள்

சர்க்கஸ்சில் வெடிப்பும் சிரிப்புமாக இருப்பவன்

உள்ளே வந்தால்

மெளனத்தில் முடங்கிவிடுவான்

“நீளமான குறுஞ்செய்தியா”

“ஆமாம்”

“என்ன எழுதுகிறாய்

“யாருக்கு அனுப்பப்போகிறாய்”

சொன்னான்

“படித்து உள்வாங்கும்

ஒரு ஜீவனுக்கு

யாரென்று தெரியவில்லை

கடவுளின் எண் கிடைத்தால்

அவருக்கு அனுப்பிவைக்கலாம்”

Tuesday, June 08, 2021

இரவின் உரையாடல்

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

அவள் பதட்டப்பட்டு

விலகிவிட்டாள்

 

அடியேய்

சும்மா சொல்லிப்பார்த்தேன்

பயந்துவிட்டாய்

புன்னகைத்தபடிச் சொன்னான்

 

அவளும் சொல்லிப்பார்த்தாள்

 

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

பார் என்

தற்கொலையை

கொலையாக்கிவிட்டாய்

சிரித்தபடிச் சொன்னான்

 

 

 

 


Sunday, February 07, 2021

வாசம்

 கண்கள் ஒளிர

இசையழகு கெடாமல் பாடுவாள் தங்கை

அவளிடம் பாடல் வாசம்

 

விட்டுக்கொடுக்காதவர் அப்பா

அவரிடம் கண்டிப்பு வாசம்

 

மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்

அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்

 

குனிந்த தலை நிமிராமல்

நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்

செல்போன் வாசம்

 

டீவித்தொடர்களிலிருந்து

வெளிவராத பாட்டிக்கு

கதைகளின் வாசம்

 

வாலாட்டிக்கொண்டே

சுற்றி வருவான் அன்பு

அவனை நாயென்று சொல்லக்கூடாது

அவனுக்கு நன்றிதான் வாசம்

 

காலநேரத்திற்கு ஏற்றார்போல்

மாறும் வாசம் வீட்டிற்குண்டு

 

அம்மாவிற்கு

அதைத்தானே கேட்கிறீர்கள்

 

எப்போதும் மாறாத

சமையலறை வாசம்