Tuesday, November 21, 2023

அம்மாவும் அம்மாவும்

அம்மா என நினைத்து

வேறு ஒரு பெண்ணின்

கையைப் பிடித்துப்போகிறது குழந்தை


அந்தப் பெண்ணும்

அதில் நெகிழ்ந்து

திரும்பிப் பார்த்துப்போகிறாள்


பின்னால்

வேடிக்கை பார்த்தபடி

வருகிறாள் அம்மா


அது அம்மா இல்லை

எனத்தெரிய

தன்னை விடுவித்துக்கொண்டு

அம்மாவிடம்

ஓடி வருகிறது குழந்தை


நன்றி சொல்லிப் போகிறாள் அம்மா

குழந்தை கையசைக்க


பிஞ்சு விரல்களின்

அன்பின் பிசுபிசுப்பைக்  

கையில் உணர

கண்களைத் துடைத்துக்கொண்டு

சிரிக்கப்பார்க்கிறாள்

சமீபத்தில்

குழந்தையை இழந்த

அந்தத் தாய்

Saturday, November 04, 2023

ஓவியப் பிரபஞ்சம்

 உணரும் அமைதியை

ஓவியமாக்க முடியுமா

வேண்டாம்

சத்தமாகிவிடும்

 

**

ஓவியன் சொன்னான்

நான் கோடுகளை

ஒழுங்குபடுத்துகிறேன்

நீங்கள்

ஓவியமென்று சொல்கிறீர்கள்

 

**

வண்ணங்களுக்கும்

தூரிகைக்கும் இடையில்

வராமல் போய்விடுகின்றன

பல ஓவியங்கள்

 

**

நான் வரைந்தது

மிகப்பெரிய பூஜ்யம்

பிரபஞ்சம் என்று

கைதட்டி ரசிக்கிறீர்கள்

 

**

வண்ணங்களில் கோப்பையைத்

தட்டிவிட்டுத்

தாண்டிப்போனது பூனை

அழிக்காமல்

பார்த்துக்கொண்டிருந்தேன்

இதுபோல் என்னால்

வரைய முடியாது

 

**

கண்ணீரை

அன்பால்

வரைந்துபார்த்தேன்

புன்னகை கிடைத்தது

 

**

தூரிகையின் காதுகளுக்கு

ஓவியம் பேசுவது

கேட்கும்                                                      

  - ஆனந்த விகடன்(8.11.23)இதழில் வெளியானது -

 

புன்னகை

நன்றியைச் சொல்கிறது புன்னகை

நட்பைச் சொல்கிறது புன்னகை

காதலைச் சொல்கிறது புன்னகை

கனிவைச் சொல்கிறது புன்னகை

துயரத்தைச் சொல்கிறது புன்னகை

துடிப்பைச் சொல்கிறது புன்னகை

நெருக்கத்தைச் சொல்கிறது புன்னகை

நினைக்கச் சொல்கிறது புன்னகை

கவனிக்கச் சொல்கிறது புன்னகை

கடக்கச் சொல்கிறது புன்னகை

ஈர்ப்பைச் சொல்கிறது புன்னகை

இருப்பைச் சொல்கிறது புன்னகை

உயிர்க்கச் சொல்கிறது புன்னகை

உதவச் சொல்கிறது புன்னகை

இணையச் சொல்கிறது புன்னகை

இயங்கச் சொல்கிறது புன்னகை

கவிதையைச் சொல்கிறது புன்னகை

எழுதச் சொல்கிறது புன்னகை

தினம் தினம் ஏதேதோ

சொல்லிச் செல்கிறது புன்னகை

 

வணங்குதல்

 தற்கொலைக்கு

மலையுச்சிக்கு வந்தவன்

காட்சிகளைப் பார்த்து வியக்கிறான்

 

தலை உரசிப்போகும்

பறவைக்கு  கையசைக்கிறான்

 

காலடியில் கிடக்கும்

கற்களை எடுத்து முத்தமிடுகிறான்

 

அமர்கிறான்

 

கண்மூடித் தியானிக்கிறான்

 

வேண்டாத எண்ணங்கள்

ஒவ்வொன்றையும் அழிக்கிறான்

 

தற்கொலை எண்ணம்

அதில் உயிரிழக்கிறது

 

மலையின் பிரமாண்டம்

அவனுக்கு வாழ்தலில்

விசாலத்தைச் சொல்கிறது

 

மலையை வணங்குகிறான்

 

அவன் நன்றியின்

கண்ணீர்த்துளி

மலை உடம்பில் விழுகிறது

அது அசைந்து

ஆசிர்வதுப்பது போலிருக்கிறது

 

மலையிலிருந்து

அருவி இறங்கிவருவதுபோல்

மெல்ல இறங்கிப் போகிறான்

 

Monday, June 26, 2023

பந்து

அநாதையான பந்து

பேருந்துக்குள்

உருண்டோடுகிறது


பெரியவர் காலடியைத் தொடுகிறது

 

அந்த மஞ்சள் நிறப் பந்தை எடுத்து

வேட்டியால் துடைத்து

பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தையிடம் தருகிறார்

 

வாங்கிக்கொண்டு

அழுகையை நிறுத்துகிறது

 

பிறகு வேகமாக எறிகிறது

 

ஜன்னல்தாண்டி பந்து

வெளியே போய்விடுகிறது

 

பேருந்து ஒரு வளைவில் திரும்பி மறைகிறது

 

சாலை விளிம்பில்

ஆடு மேய்க்கும் சிறுமியிடம்

கிடைக்கிறது பந்து

 

பந்தை முத்தமிட்டுத்

தூக்கிப்போட்டு

விளையாடுகிறாள்

அவள் சிரிப்பில்

புற்கள் அசைகின்றன

ஆடுகள் திரும்புகின்றன

 

வானிலிருந்து

சொர்க்கம் வருவதுபோல்

அவள் கைக்குத் திரும்புகிறது பந்து

 

இந்தக் காட்சி

சூரிய ஒளியில்

திரைச்சீலையில்

அசைந்தாடும்

சித்திரம்போல் தெரிகிறது

Thursday, March 23, 2023

மெளத் ஆர்கன் வாசிக்கும் பெரியவர்

 கைகள் நடுங்க

மெளத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த

முதியவரின் அருகில் போய்

அமர்ந்தேன்

 

இலைகள்

மிதந்து மிதந்து

அவர் இசை

கேட்டபடி

அருகில் வந்து விழுந்தன

 

மெளத் ஆர்கன்

ஒரு சிறு வாக்கியம் போல்

முன்பின் போய் வந்தது

 

தியானம் போல்

அவர் முடித்து

மெல்ல கண் மூடியபோது

சொன்னேன்

 

உங்கள் இசை

இளமையாக இருக்கிறது

 

கண் திறந்து

புன்னகைத்துச்

சொன்னார்

 

முதுமை இளமை

இசைக்குக் கிடையாது

பிரித்துப்பார்ப்பதெல்லாம்

நாம்தான்

 


 

Sunday, March 19, 2023

இயற்கையே...

இயற்கையே

என்னை

உதிரவை

 

அன்பின் மீது

நட்பின் மீது

அழகின் மீது

செயலின் மீது

சிந்தனை மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

 

இலக்கின் மீது

இயக்கம் மீது

பயணம் மீது

பாதை மீது

தேடல் மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை


எழுத்தின் மீது

படைப்பின் மீது

இசையின் மீது

இசைவின் மீது

மீட்சி மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

 

புன்னகை மீது

கண்ணீர் மீது

மானுடம் மீது

மனிதம் மீது

என ஒவ்வொன்றின் மீதும்

ஒவ்வொரு நாளும்

இயற்கையே

என்னை

உதிரவை

    


 

 

Friday, February 24, 2023

சுவரில்…

சுவரில்

ஒரு ஆணி அடித்து

அதில் என்னைத்

தொங்கவிட்டேன்

 

ஒருவர்

மேலும் கீழுமாகப்

பார்த்துச் சென்றார்

 

ஒருவர்

ஆணி மனிதர் என்றார்

 

ஒருவர்

தொங்கும் விசித்திரம் என்றார்

 

ஒருவர்

பாவம் தொங்குகிறது என்றார்

 

ஒருவர்

இது இவன் தண்டனைக் காலம் என்றார்

 

ஒருவர்

இவன் நேராகத் தொங்கும் வவ்வால் என்றார்

 

 

ஒருவர்

ஆணியைப் பிடுங்க

முயற்சித்துத் தோற்றுப்போனார்

 

ஒருவர்

இது ஒருவிதமான பைத்தியக்காரத்தனம் என்றார்

 

ஒருவர்

ஐஸ்கிரீம் சாப்பிட்டு

மீதியை மேலே

தடவிவிட்டுச் சிரித்தார்

 

இப்படி

ஓவ்வொருவராகப்

பார்த்தும் கடந்தும் கலைந்தனர்

 

ஒருவர் கூட

வலிக்கிறதா என்று

கேட்கவில்லை

Wednesday, February 08, 2023

உன் பேரென்ன?

 உன் பேரென்ன?

மறந்துடுச்சு.

எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்க?

அதுவும் மறந்துடுச்சு.

உனக்கு என்ன வேணும்?

தெரியல. மறந்துடுச்சு.

உண்மையச் சொல்லு?

சொல்றது உண்மை. மறந்துடுச்சு.

விளையாட்றயா?

இல்ல. எல்லா விளையாட்டும் மறந்துடுச்சு.

நீ யாரு?

மறந்துடுச்சு.

உன் ஞாபகத்துல எதுவும் இல்ல?

இல்ல. எல்லாம் மறந்துடுச்சு.

பட்டாம்பூச்சிய ஏன் பச்சக்குத்தி இருக்க?

ஏன். தெரியல. மறந்துடுச்சு.

அம்மா…

இப்ப நான் உன்ன அடிச்சேன். அம்மான்னு கத்தன. அது மட்டும் எப்படி

மறந்து போவாம இருந்துது?

அது உங்க அடியால வந்த அம்மா இல்ல. 

விபத்துல அம்மா இறந்தப்ப உயிர கிழிச்சிட்டு ஓடிவந்த அம்மா. 

பட்டாம்பூச்சி போல அம்மா பறந்து போயிட்டாங்க.


 

 

Monday, January 30, 2023

முறிந்த காதல்

முறிந்த காதலை
எழுதிப் பார்க்கிறான்
கூடிவரவில்லை
சொற்கள்
உடைந்து போகிறான்
குடிக்க வேண்டாம்
முடிவோடு
நடை மறந்து
நடந்து போகிறான்
சாலையோர பூவிலிருந்து
தேனெடுத்த பட்டாம்பூச்சி
அவனை ஒரு வட்டமடித்துவிட்டுப் போகிறது
புன்னகை சுரக்க
சொற்கள் ஓடி வர
மனதில் எழுதுகிறான்
முறிந்த காதலில்
கசியும் அன்பைப்
பருகுவது
மகாபோதை