Sunday, February 01, 2009

யாருக்கும் தெரியாதவன்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்

உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்

சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்

என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்

உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்

என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்

இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்

உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்

உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்

1 comment:

  1. அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,

    இன்றைய உலகின் தீவிரவாதிகள் பல உங்கள் கவிதையின் அந்நாள் கதநாயகர்கள்தான். ​நேற்று அதாவது ஞாயிற்றுகிழமை மாலை​நேரம் பீஸ் ரயிலடியின் சுரங்கப்பாதையின் அருகில் ஒருவள் ​கையில் உறங்கி​கொண்டிருக்கும் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்ெகாண்டிருந்தாள் அந்த குழந்​தையை நான் பார்க்கும்​போது மணி மாலை 5.30 மணி மீண்டும் குழந்தை​யை அவள் மடியில் பார்க்கும்​போது மணி 7.30 மணி அதேபாணியில் உறங்கி​கொண்டிருந்தது,
    அவளுடையது அல்ல அந்த குழந்தை அந்த குழந்தை அவள் அல்லது அவன் என்ற பாணியில் ஒரு தீவிரவாதியாகதான் வரும். என் பார்வையில் அக்குழந்தை ஒரு காதாநாயகி அல்லது கதாநாயகன் உங்கள் கவிதையை உள்வாங்கியவுடன்.

    ReplyDelete