ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Monday, April 29, 2013
ஒரு பறவை
என் விரலை
கிளை என நினைத்து
வந்தமர்ந்து
உள்ளங்கை நீரைக்
குடித்துப் போகிறது
ஒரு பறவை
பறந்து போகையில்
மரமாகவும்
நினைத்திருக்கக் கூடும்
உங்களுக்குத் தெரியாது
கடைசிக் காட்சியை மட்டும்
பார்க்க அனுமதிக்கிறீர்கள்
இதுவரை நான்
உங்கள் கதாபாத்திரங்களோடு
பேசிக்கொண்டிருந்தது
உங்களுக்குத் தெரியாது
Wednesday, April 24, 2013
நினைவின் அடுக்குகளில்
நினைவின் அடுக்குகளில்
எந்த அடுக்கில்
இருக்கிறாய் என்று
தேடித் தேடி
களைத்துப் போய்
உறங்கி விட்டேன்
உறக்கத்தின் அடுக்குகளில்
விளையாடத் தொடங்குகிறாய்
ஓடுபவர்கள்
எனது கனவில்
ஓடும் குதிரையும்
குதிரையின் கனவில்
ஓடும் நானும்
வேகத்தில்
வித்தியாசப்படலாம்
ஆனால் ஓடுபவர்கள்
Tuesday, April 16, 2013
கல் சுவர்
கல் சுவரில் மோதி
கண்ணாடிப் பட்டாம்பூச்சி
உடைந்து போனது
சில சில்லுகள் கிடந்தன
பல சில்லுகள் பறந்தன
Friday, April 12, 2013
என்ன யோசனை
சட்டென நிறுத்திய நண்பர்
என்ன யோசனை என்றார்
தெரியவில்லை
என்றேன்
யோசனையா
என்னையா
கேட்டார்
சிரித்தேன்
சிரிப்பின் காரணம் கேட்டார்
தெரியவில்லை
என்றேன்
வேகமாகப் போய்விட்டார்
நடந்தேன்
என் கவலை எல்லாம்
திடீரென்று
இன்னொரு நண்பரை
இது போல்
சந்தித்து விடக்கூடாது
என்பதுதான்
தடுத்தது குரல்
கேசவா
என்ன யோசனை
Thursday, April 11, 2013
அழிந்து கொண்டே வரும் வரி
முயலைப் பார்த்தபோது
குழந்தை இல்லை
குழந்தையைப் பார்த்தபோது
முயல் இல்லை
முயல்குட்டியைப் போல்
ஓடுகிறாள் குழந்தை
என்ற வரி
அழிந்து கொண்டே வந்தது
மான்யாவின் கடல்
கடல் பாத்து முடிச்சாச்சா
போகலாமா
கேட்கிறேன் மான்யாவிடம்
சிரித்துச் சொல்கிறாள்
அய்யோ அப்பா
கடலப் பாத்துக்கிட்டே இருக்கணும்
அது முடியவே முடியாது
Tuesday, April 09, 2013
கண்ணில்
யுத்தம் பற்றி
எழுதிய கவிதையை
சமாதானப் புறாவிடம்
படித்துக் காட்டினேன்
குருதியின் வலியை
குறைத்திருக்கலாமே என்றது
அப்போது
அதன் கண்ணில்
நீர் வடிந்தது
Monday, April 08, 2013
காணவில்லை
நீல நிறப் பூனை
பக்கத்தில்
பச்சை நிற எலி
வரைந்தாள் மான்யா
நிறங்கள் சிதறிக் கிடக்க
இரண்டையும் காணவில்லை
திரை
திரை விழுந்து விட்டது
நாடகம் முடிந்து விட்டது
எல்லோரும்
வெளியேறி விட்டனர்
நான் இன்னும்
கதாபாத்திரத்தை விட்டு
வெளியேறவில்லை
Wednesday, April 03, 2013
விளையாடு
இப்படித்தான் காய்
நகர்த்துவார்கள்
வியூகம் குறித்து
விவாதிக்காதே
விளையாடு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)