Thursday, June 28, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

915-

பல வருடங்களாக
இந்த கல் மேல்
உட்கார்ந்திருக்கிறேன்
நான் சோம்பேறியா?

இல்லை
இன்னொரு கல்

916-

அப்படியே 
நிற்க வைத்திருக்கிறேன் 
கண்ணீர்த் துளிகளை 

கல்லாக்கி 
எறியலாம் 

விழவும் 
வைக்கலாம்

917-

என்னிடம் ஒன்றுமில்லை 
என்பதில் கூட 
ஏதோ இருக்கிறது
ஒன்றுமே இல்லை 
என்பதில்தான் 
எதுவுமே 
இல்லாமல் இருக்கிறது

918-

கடல்மனம் கொண்ட
மீன் நீந்தும்
மீன் தொட்டிக்கு
வெளியிலும்

919-

உன் பிரமிப்பைக் கண்டு
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட
உண்மை இல்லாத
உன் வரி 
உதிர்ந்து போனது
தெரியாமல்

920-

எப்போதும் எனக்குத் 
தோல்வி தேவைப்படுகிறது
எப்போதாவது 
வெற்றியும் தேவைப்படுகிறது

921-

தராசில் வைத்துப் 
பார்க்கப்படும் மனிதம் 
எடைக்கல்லாகி விடுகிறது

922-

உறைந்து போன
கேள்விகளை
உடைக்கிறேன்
பதில்கள் சிதற


உதிர்ந்து போனது


உன் பிரமிப்பைக் கண்டு 
வியக்கச் சொல்கிறாய்
புள்ளி அளவு கூட 
உண்மை இல்லாத 
உன் வரி 
உதிர்ந்து போனது 
தெரியாமல்

Wednesday, June 20, 2012

அனுவப சித்தனின் குறிப்புகள்

 906-

பின்னிரவை
நிரப்புகிறேன்
முற்பகல்
நினைவுகளால்

907-

வரிகளில்
இறக்கி வைத்த பின்னும்
கனக்கிறது சுமை

908-

உயிரின்
மேலேறி நின்று
மரணத்தைத்
தள்ளி விட்டேன்

909-

எல்லோருக்குமான கனவு 
பிரபஞ்சத்திடம் 
இருக்கிறது

910-

ஒளித்து வைத்தக் 
கண்ணீரை
ஒருபோதும்
சிந்தியதே இல்லை

911-

கரை ஒதுங்கும் நினைவுகள் 
கால் நனைக்கும்
வழிப்போக்கன்
பயணம் அதைக் கடக்கும்

912-

தூங்கும் இறைவனை
எழுப்பவில்லை
அவர் கனவில் போய்
கோரிக்கை வைத்து விட்டு
வந்து விட்டேன் 

913-

உறங்கப் போகும் 
போதெல்லாம் 
விடிந்து விடிகிறது

914-

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லை
என் மெளனத்தின் மீது 
கிரீடம் 
வைத்து விடாதீர்கள்.


Saturday, June 09, 2012

899-

எதற்கு 
இறந்த காலத்தை 
மென்று கொண்டிருக்கிறீர்கள்
துப்பிவிட்டு 
நிகழ் காலத்தை 
சுவைக்கப் பாருங்கள்


900-


நான் என்னத் 
தெரிந்து கொள்ளவில்லை 
என்பதிலும் 
அடங்கி இருக்கிறது 
நான் என்னத் 
தெரிந்துகொண்டேன் என்பது


901-


புரியவைப்பது 
என் வேலையல்ல
புரிந்து கொள்ளாதது 
உங்கள் குற்றமுமல்ல


902-


புள்ளியில் 
பூக்கும் சொல் 
புள்ளியை 
பூமியாக்கி


903-


என் மேல் 
ஏறி நின்று பார்த்தேன்
எல்லாம் தெரிந்தது


904-


யார் உன்னை
கண்ணீரைப் 
பூசிக் கொள்ளச் சொன்னது 
போய் 
முகம் கழுவி வா


905-


மேஜை மேல்
வைத்திருந்த பூஜ்யம்
உருண்டோடிப் போய் 
விழுந்து உடைய
உள்ளிருந்து
சிதறிக் கொண்டிருந்தன
எண்கள்




Saturday, June 02, 2012

கையெட்டும் தூரத்தில்

மறதியாய் 
தொலைதூரத்தில் 
வைத்துவிட்டு 
வந்த கனவை 
எடுக்கத் திரும்பினேன் 
அதுவாய் வந்து 
நின்றிருந்தது 
கையெட்டும் தூரத்தில்