Tuesday, July 24, 2012

சூதாட்டம்

மதுவோடு 
சூதாடிக் கொண்டிருந்தேன் 
போதையின் உச்சத்தில் 
என்னைப் போட்டுடைத்து 
போட்டியை 
முடித்துக்கொண்டது

பிரார்த்தனை

ஆலயமணி அடிக்கும் 
பெரியவருக்கு பெரிதாய் 
என்னப் பிரார்த்தனை 
இருந்துவிடப் போகிறது 
தினம் மணி அடிக்கும் 
சக்தி தா 
என்பது தவிர

Monday, July 23, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

941-
விழித்துக் கொள்ளும் எழுத்து 
என்னைத் 
தூங்க விடுவதில்லை


942-
முடிவாக 
என்ன சொல்கிறீர்கள்
முடிக்கச் சொல்கிறேன்


943-
பட்டாம்பூச்சி 
பறந்த தடத்தில் 
நடந்து போனேன்






கோமாளி

கோமாளி வேஷமே 
எனக்குப் பொருந்துகிறது
உள்ளிருக்கும் 
நாயகன் வண்ணம் 
அதைக் கலைக்கிறது

எதுவுமில்லை

என் எழுத்தில் 
எதுவுமில்லை 
இழுத்துச் செல்லும் 
இந்த எறும்புக்கு 
ஏதாவது கிடைக்கலாம் 
பசியாற 
உரையாட

Sunday, July 22, 2012

தொப்பி

உங்கள் தொப்பிக்குள் 
நீங்கள் இருக்கிறீர்களா 
குழந்தைக் கேட்டது 
அங்கிங்கு 
அலைந்த நான் 
உடனே ஓடிவந்து 
சேர்ந்து 
ஆமாம் என்றேன் 
தொப்பியைச் சரிசெய்தபடி

Wednesday, July 18, 2012

பிரார்த்தனை

கண் மூடிப் பிரார்த்தனை
செய்தாள் குழந்தை 

என்ன வேண்டுகிறாய் 
என்றேன் 

நனைந்து ஆட
மழை வேண்டுமென்று 

உடனே தூறியது

வியந்து பார்க்க
குதித்தபடியேச் சொன்னாள்

என் பிரார்த்தனை
கடவுளுக்குப்
போய்ச் சேரும் முன்
மழைக்கு கேட்டுவிட்டது
உடனே வந்துவிட்டது

மிதத்தல்

நினைவில் மிதந்த 
மீனை எடுத்து 
வெளியில் போட்டேன் 
பறந்து போயிற்று

Monday, July 16, 2012

தொலைந்த கடவுள்

தொலைந்த கடவுளை 
கண்டுபிடித்து 
உங்களை யாரிடம் 
ஒப்படைக்க வேண்டும் என்றேன் 

நான் உன்னை 
அடையவே வந்தேன் 
நீ என்னைத்
தொலைத்து விட்டாய் என்று 
சொல்லியபடியே 
மறைந்து போனார்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

934-

நள்ளிரவைப் 
பிளக்கும் முயற்ச்சியில் 
இன்றும்  போயிற்று
தூக்கம்


935-

விரிந்ததை 
விவரிப்பதில்லை
எந்த பூவும
ரசி

936-

சாப்பிட்டு நாளாகிறது என்று 
பசி வலியோடு 
கெஞ்சுபவன் வரியிலும்
இருக்கிறது வயிறு 

937-

அறிவு கனிந்த 
சபையில் நான்
பழம் பொறுக்குபவன்

938-

வண்ணங்களை 
சேர்த்தாயிற்று
ஓவியனை 
சேமிக்க வேண்டும்

939-

இன்னும் கொஞ்சம்
தூங்க வேண்டும்
விழிப்பிடம்
சொல்லி வைக்கிறேன்


940-


யுத்தம் பழகி வைத்திருப்பவர்கள் 
இருக்குமிடத்தை எல்லாம் 
போர்க்களமாக்கி விடுகின்றனர்









Saturday, July 14, 2012

வழி


நுழைவாயில் 
அடைக்கப்பட்டு விட்டது 
எப்படி உள்ளே வந்தீர்கள் 

சாவி துவாரத்தின் 
வழியாக 

முனையில்

நாக்கின் முனையில் 
மேய்ந்த தேளை 
தள்ளிக் கொன்றேன் 
வார்த்தைகள் 
நஞ்சிறங்கி 
நலம் பெற்றன

Friday, July 13, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

930-

இருந்தும்
இல்லாது போலிருக்கிறார்கள்
இருப்பவர்கள்

931-

விருந்து இலை 
கடைசிப் பருக்கையில் 
குவியும் கண்

932-

இளைப்பாறிய நிழலிடம் 
பிரியத்தை எப்படி 
சொல்லிச் செல்ல

933-

அவன் கிளையில் 
தொங்கிய போது 
மரத்தின் சில பழங்கள் 
கீழே விழுந்து கிடந்தன

சிறகசைப்பில்


பறவையின் சிறகசைப்பில் 
காற்றின் இசை 
உதிர்கிறது 
காற்றின் மீதே


Thursday, July 12, 2012

கர்வம்

பெரு வனத்தில் 
தொலைந்த 
புல் நான் 
வனத்தின் கர்வம் 
எனக்குண்டு

Wednesday, July 11, 2012

சொல்லின் அடியில்

சொல்லின் அடியில் 
ஓடுகிறது நதி 
மொழியின் நளினத்துடன்

Tuesday, July 10, 2012

கண்ணீரல்ல

கொடுங்கனவைத் தின்ற 
உன் கண்களிலிருந்து 
வழிவது 
கண்ணீரல்ல 
இறந்து போனவனின் 
ரத்தம்

Sunday, July 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

923-

வறண்ட நிலம் 
காத்திருக்க 
கடலில் 
பெய்கிறது மழை


924-


உணர்வுகள் 
எழுதும்போது
பேனா பார்த்துக்
கொண்டிருக்கிறது


925-


குருவே 
நான் மிதக்க 
என்ன செய்ய வேண்டும் 

பறவையாக வேண்டும் 

பறவையாக 
என்ன செய்ய வேண்டும் 

மிதக்க வேண்டும்


926-


ஒரு போதும்
என் பசிக்கு என்னை
இரையாக்கியதில்லை


927-


தயக்கம் 
வழிகளை 
மூடிவிடுகிறது

928-

பிறந்ததே பெருந்தவறு
இதில் பிழை திருத்தி 
என்ன பண்ண

929-

வழிகளைக் கிழித்து விடாதீர்கள்
வழிப்போக்கன் சொன்னான்
பார்க்கத் தொடங்கினேன்
வழிகளைப் புத்தகங்களின்
பக்கங்களைப் போல