Tuesday, August 02, 2016

பளபளக்கும் கத்தி

பளபளக்கும் கத்தியை
காலில் வைத்துவிட்டுப் போகிறார்
அப்படியே விட்டிருக்கலாம்
கூப்பிட்டு
கையில் கொடுத்தது
தப்பாய்ப் போயிற்று
குத்திவிட்டுப் போகிறார்

Thursday, July 21, 2016

சட்டை

ஸ்டூலில்
ஏறி நின்று
அப்பாவின் சட்டைக்கு
பொத்தான்கள் போடுகிறது குழந்தை
ஒரு பொத்தான்
மாறி விட
சமநிலை மாறுகிறது சட்டை
சரி செய்துகொள்ளச் சொல்கிறாள் அம்மா
சரி என்கிறது குழந்தை
அப்படியே போகிறார் அப்பா

Monday, July 18, 2016

என்னிடம் சொற்கள் இருக்கின்றன

என்னிடம் சொற்கள் இருக்கின்றன
நான் பணக்காரன் என்று
சொன்ன நண்பர் ஒரு தேநீர்
வாங்கித் தரச் சொன்னார்
குடித்து முடித்து
நன்றியுடன் சொன்னார்
என்னிடம் சொற்கள் இருக்கின்றன
நான் ஏழையல்ல என்று
Thursday, June 30, 2016

கருப்பு வெள்ளைப் படம்

கருப்பு வெள்ளைப் படம் போலிருந்தது
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சைக்கிள்
அதற்கு வண்ணம் தீட்டிப் பார்ப்பதற்குள்
வந்து எடுத்துப் போய்விட்டார்

பந்து

மைதானத்தில்
கவனிப்பாறற்று
கிடக்கும் பந்தை
தொலைவாக அமர்ந்திருக்கும் பெரியவர்
கண் அசையாமல் பார்க்கிறார்
தன் பார்வையால்
பந்தைத் தள்ளித்தள்ளி
கொண்டு போய்
கோலில் போட்டுவிட்டு
மெல்ல எழுந்து போகிறார்

Sunday, June 12, 2016

வானமும் தனிமையும்

நான் இருக்கும் 
இந்தச் சின்ன அறையை 
உங்கள் கையில் இருக்கும் 
மிகச் சிறிய பென்சிலால் 
மிக மிகக் குறைந்த நேரத்தில் 
நீங்கள் வரைந்து விடலாம்
அது குறித்து 
நீங்கள் பெருமைப்படத் 
தேவையில்லை 
இந்த அறையிலிருக்கும் 
வானமும் தனிமையும்
ஒருபோதும் 
உங்கள் கண்களுக்குத் 
தென்படப் போவதில்லை 


Sunday, May 22, 2016

ரயிலில் பாடிய சிறுவன்

ரயிலில் பாடிய சிறுவனை
தம்பி எனக்கூப்பிட்டு
பத்து ரூபாய் கொடுத்தேன்
தம்பி என்று
இன்னொரு முறை
சொல்லச் சொல்லி
கேட்டு விட்டு
பணத்தைக் கொடுத்துப்
போய் விட்டான்

Tuesday, May 17, 2016

வேறொரு கதை

கதை முடிந்து விட்டதா
நீங்கள் முடித்து விட்டீர்களா
கேட்டார்
அவர் கேள்வியில் தொடங்கிய
வேறொரு கதையை
முடித்த கதையில்
இணைக்கலாமா என
யோசித்துக்கொண்டிருந்தேன்


Saturday, May 14, 2016

எங்களுக்குத் தேவை

யாரோ ஒரு பெரியவர்
என் கைப் பிடித்து
அழைத்துப் போகச் சொல்கிறார்
நடுக்கத்துடன்

வழித் தெரியாமல்
தடுமாறி நிற்கும் நான்
அவரிடம்
இதை எப்படிச் சொல்வது

செய்வதறியாது
அவர் கையைப்
பற்றிக் கொள்கிறேன்

இப்போது
எங்களுக்குத் தேவை

சிறு அன்பு
சின்னப் புன்னகை
கொஞ்சம் உணவு
நிறைய நம்பிக்கை
ஒரு பாதை

Saturday, April 23, 2016

ஒரே அறையில்தான் இருந்தார்கள்

உண்மை மங்கலாகத் தெரிகிறது
பொய் தெளிவாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை தெளிவாகத் தெரிகிறது
பொய் மங்கலாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை உண்மையாகத் தெரிகிறது
பொய் பொய்யாகத் தெரிகிறது
என்றவரும்

ஒரே அறையில்தான்
இருந்தார்கள்


Monday, April 18, 2016

நந்தினியின் பொய்கள்

நந்தினியிடம்
ஒரு நாளைக்கு
எத்தனை பொய்கள் சொல்வாய்
என்றேன்

கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றாள்
புன்னகைத்தபடி

புன்னகையும் பொய்யா
என்றேன்

உதட்டைச் சுருக்கி
உற்றுப் பார்த்தாள்

Thursday, April 14, 2016

கண்களிலிருக்கும் ஆப்பிள்

கடைக்காரர்
துடைத்து வைத்த ஆப்பிளை
நீண்ட நேரமாகப்
பார்த்த குழந்தை
மெல்லப் போகிறாள்
அவள் கண்களிலிருக்கும் ஆப்பிள்
சுவையாக
நெஞ்சில் இறங்கிக் கொண்டிருக்கிறது

Monday, March 07, 2016

பொம்மையும் குழந்தையும்

குழந்தைக் கேட்ட
பொம்மை வாங்க
காசு இல்லை

பொம்மை மறக்க
வழி நெடுக
கதை சொல்லிக்கொண்டே
வருகிறார் அப்பா

உம் கொட்டுகிறது குழந்தை

கதை முடிந்து
நிம்மதி பெருமூச்சு விட்டு
அப்பா கேட்கிறார்

எப்பிடிம்மா கதை இருந்துது

குழந்தை சொல்கிறது

அப்பா இந்த கதைய
அந்த பொம்மைக்குச் சொல்ல்லாமா
போய் வாங்கிட்டு வரலாமா

Saturday, March 05, 2016

பாக்கியவான்கள்

தாளமிட்டு
வானம் பார்த்து
கை குவித்து
ஆடியபடியே
பெரு மழையில் நனையும்
பைத்தியக்காரன்
தன்னை நிறுத்தி
மூச்சிறைக்க
வேடிக்கைப் பார்ப்பவர்களைப்
பார்த்துச் சொன்னான்
என் கண்ணீரைப் பார்ப்பவர்கள்
பாக்கியவான்கள்

Thursday, February 04, 2016

பூ விற்கும் சிறுமி

ரயிலில்
பூ விற்கும் சிறுமியிடம்
இந்த ரயில் நீளத்திற்கு
பூ தர முடியுமா
எனக் கேட்டேன்

கால்களுக்கிடையில்
கூடையை
ஆடாமல் வைத்துவிட்டு
கைகளை அகல விரித்து
இவ்வளவு நீளமாவா

எனக் கேட்கிறாள்

Tuesday, January 26, 2016

அடுத்த நிகழ்ச்சியில்

தற்கொலைகளுக்கு
வருத்தம் தெரிவித்தார்கள்
இனியாவது
வரும்முன் காப்போம் என்று
விவாதத்தை முடித்தார்கள்
அடுத்த நிகழ்ச்சியில்
தொடங்கியது
ஆடல் பாடல்