Monday, March 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

433-

பயணம்தான்
எனது
பயணச் சீட்டும்

434-

காற்றில்
தொலைந்து போனேன்

பாடலாய்
வெளிவருவேன்

435-

கதவுக்குத் தேவையில்லை
எல்லாப் பூட்டும்
உங்களுக்குதான்

436-

நதியில் மிதக்கிறது
என் பேனா
எழுதாமல் திரும்புகிறேன்

Saturday, March 26, 2011

நீண்ட பயணத்தில்

நீண்ட ரயில் பயணத்தில்
எதையாவது பேசிக்கொண்டே
வருபவர்கள் மத்தியில்
எதுவுமே பேசாமல் வருபவர்களும்
பேசிக்கொண்டிருப்பார்கள்
தம்முடன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

430-

விளிம்பில்
வழியும் துளி
பூமியைப்
பாத்திரமாக்கிக்கொள்ளும்

431-

ஆழத்தில் உடையாமல்
நீந்துகின்றன
ஞாபகக்குமிழ்கள்

432-

தயக்கம்
தான் விழுங்கும்
காலங்களைத்
துப்புவதே இல்லை

தயங்குபவன்
தன்னைத் தின்னக்கொடுக்கும்
காலத்திடமிருந்து
தப்புவதே இல்லை

Friday, March 25, 2011

மழையுடன்

தூறலை பிடித்துவிட்டதை
குதித்தாடி
மழையிடம் சொல்கிறது
குழந்தை

தொலைபவன்

கடைக்கோடியில் அமர்ந்து
கைதட்டுபவன்
தொடர்ந்து
தொலைந்துகொண்டிருக்கிறான்
பெரும் பேச்சுகளில்

Thursday, March 24, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

425-
விதைக்குள்
என்னை அடைத்தேன்
அதனால்
நானும் முளைத்தேன்

426-

இப்படித்தான் நீங்கள்
என்னைக் கொன்றீர்கள்

இப்படித்தான் நான்
உங்களைக் கொன்றேன்

இப்படித்தான் அவர்கள்
நம்மைக் கொன்றார்கள்

427-

கூட்டத்தில்
அழுதுகொண்டே
கடந்து போகிறாள் ஒருத்தி

அவள் அழுகையோடு
நடந்து போகிறேன் நான்

428-

சிதறிக்கிடக்கின்றன
தூக்கங்கள்
இரவில் சேர்ந்தால்
இமைகள் மூடலாம்

429-

பிடிபட்டவன் சொன்னான்
உங்களில் யார் யார்
திருடர்கள் என்று
எனக்குத் தெரியும்

Saturday, March 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

419-

என் மேல்
மிருகத்தைப்போல்
படுத்துக்கிடக்கும்
அறியாமை

420-

எழுதப் பழக
நீச்சல்
வெற்றுத் தாளில்

421-

எதுவுமில்லை

அள்ளியபோது
எதுவும்
இல்லாமலில்லை

422-

தொடும்போதெல்லாம்
விரல் வழியே
உள் வரும் உலகம்

423-

உருகி வழியும் தூக்கம்
பிசின் போல ஒட்டும்
ஓடும் காலடிகளில்

424-

யுத்தம் பழகிய
உடலை
தியானத்தில்
புதைத்து வைத்தேன்

தியானம் பழகிய
அன்பை
வெளியில்
நட்டுவைத்தேன்

Wednesday, March 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

414-

ஓடும் கால்களில்
நேரம் பார்க்கும்
சாலை

415-

தனிமைக்குள்
குதிக்கும் தவளை
வாயெல்லாம்
என் பெயர்

416-

மனதில்
நகர்த்தும் காய்கள்
பேசும்போது
வார்த்தைகளாகும்

417-

நுழைபவர்களின் கைகளில்
வேறுவேறு சாவிகள்

கடவுச் சொல்லை
மாற்றிக்கொண்டிருக்கிறேன்

418-

நான் உடைந்து உடைந்து
உருவானவன்

உடைக்கப் பார்க்கிறீர்கள்

முடியாது

Tuesday, March 15, 2011

சிறுமியின் கதைகள்

சிறுமி
கதை கேட்டாள்

என்னிடம் சொல்ல
எதுவுமில்லை என்றேன்

நான் சொல்லட்டுமா
என்றாள்

உன்னிடம் கதை
இருக்கிறதா

இல்லை என்பதுபோல்
தலையாட்டினாள்

பிறகு எப்படி
சொல்வாய்

சிரித்தபடியே சொன்னாள்

இருப்பதை
சொல்வதல்ல கதை
சொல்ல சொல்ல
வருவதே கதை

Monday, March 14, 2011

காற்றில்

உங்கள் அலைவரிசையில்
என் பாடல்
வந்து சேருமா என்று
எனக்குத் தெரியாது
ஆனாலும் இது
காற்றில் இருக்கும்

Sunday, March 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

407-

ஏரியில்
எறிந்த கல்லோடு
இறங்கிக்கொண்டிருந்தேன்
என்னை மீனாக்கிவிட்டு
புதைந்து போனது கல்

408-

காட்டிக்கொடுக்கும்
கண்ணீர்
புன்னகையில்தான்
மறைக்க வேண்டும்

409-

சிலரை நினைவிலிருந்து
தவறவே விடக்கூடாது
சிலரை தவறியும்
நினைவிற்குள்
வரவிடக்கூடாது

410-

காற்றைக்
கிழித்தது வாள்

துடித்து விழுந்தன
சொற்கள்

மூச்சற்று அடங்கினேன்
நான்

411-

பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
ஆனாலும்
பதிவு செய்யப்பட்ட குரலில்

412-

பசி உருவாக்கும்
பசிகள்
எப்பசி அடைக்க

413-

என் நிழலில்
இளைப்பாரும்
வெயில்

Saturday, March 12, 2011

ஓடும் ரயில்

தண்டவாளத்தின் மேலேறிய
ஆட்டுக்குட்டியை
தூக்க ஓடியது குழந்தை

ரயில் வந்துகொண்டிருந்தது

பயமற்று
ஆட்டுக்குட்டி விளையாடியது

அஞ்சியபடியே
ஆட்டுக்குட்டியைத்
நெருங்குகிறது குழந்தை

அப்போதுதான்
பார்த்த சிறுமி
உடனே நிறுத்தினாள்
வரைந்த ரயிலை

செல்லமாய் கோபித்தபடியே
ஆட்டுக்க்குட்டியை
தூக்கிய குழந்தை
இறங்கிப்போனாள்
தண்டவாளத்திலிருந்து

மீண்டும்
வரையத் தொடங்கினாள் சிறுமி
ஓடும் ரயிலை

நிம்மதியுடன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

401-

பெருநகர் மீதும்
என் மீதும்
பெய்கிறது மழை

நனையாத
பெருநகர் பார்க்கிறது
நனைந்து போகும்
என்னை

402-

நாகரீகம் கருதி
நமது வாள்களை
மறைத்துவைத்திருக்கிறோம்

போர் முடிந்தபின்
தெரியும்

நம் வன்மத்தின் குரூரமும்
துரோகத்தின் வேஷமும்

403-

சொல்லுக்குள்
சுழலும் ஒலி
நிற்பதில்லை

404-

பொறுமையாக படியுங்கள்
சொற்களின் மீது
பட்டாம் பூச்சி

405-

அள்ளி வந்த மணலை
தெளிக்கும்போதெல்லாம்
அலையைப் பார்க்கிறது குழந்தை

406-

எல்லா வேஷமும்
கட்டி ஆடுவேன்
மனுஷ வேஷம்
கட்டும் போது
தோற்றுவிடுவேன்

Thursday, March 10, 2011

பூங்கொத்தும் குழந்தையும்

பூங்கொத்தோடு வந்தவர்
நண்பனின் வார்டை
தேடிக்கொண்டிருக்கிறார்

நோய்மைக் குழந்தை
புன்னகைத்துப் பார்க்கிறது
முதலில் அவரை
பிறகு பூங்கொத்தை

நின்றுவிடுபவர்
அருகில் போய்
குழந்தையின் தலைதடவி
பூங்கொத்தைத் தருகிறார்

வாங்கி அணைத்து
சிரிக்கிறது குழந்தை

ஒரு பூவை
கிள்ளி எடுத்து
குழந்தையின்
கன்னத்தை தடவிவிட்டு
ஓடுகிறார்
நண்பனைத் தேடி

தூரமாகும் அவரைப்
பார்த்தபடியே
பூங்கொத்தில்
முகம் புதைக்கிறது
குழந்தை

Tuesday, March 08, 2011

பலூன்

பலூனை
ஊதுகிறது குழந்தை
பயமெல்லாம்
நமக்குதான்

Monday, March 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

400-

இறந்து போன
வாக்கியம்
அனாதையாக

பார்த்துக் கடப்பர்
எல்லோரும்
அமைதியாக

Sunday, March 06, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

396-

அசைந்த கிளையில்
அசையும் அழகு
நின்ற பின்னும்

397-

தவம்
பிசகா
தவம்
செய்

398-

பிடிக்கப் பார்த்தும்
நழுவி
நதியில் குதித்தோடும்
வார்த்தைகள்

399-

தோல் கிழிக்கும் பார்வைகள்
உள்ளிறங்கும்
கத்திகளாக

Friday, March 04, 2011

மழலை குற்றாலம்

அருவி விழுவதை
அபிநயித்து
அதில் நீராடியதை
நடித்துக் காட்டியது
குழந்தை
மழலை குற்றாலத்தில்
நானும் குளித்து
முடித்தேன்

Thursday, March 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

393-

எல்லாம் இழந்து
எதைப்பெறப்போகிறோம்
நாம்

394-

இந்த மலைஉச்சிபோல்
உன் அன்பு
உயரமானது

இங்கிருந்து தள்ளிவிடும்
துரோகத்தைப்போல்
ஆபத்தானதும் கூட

395-

இந்த முக்கோணத்தின்
மூன்று முனைகளிலும்
நான்தான்
இருக்கிறேன்

Wednesday, March 02, 2011

குழந்தையின் கதை

ஒரு காட்டுக்குள்ள
நான் போயிக்கிட்டிருக்கேன்

அம்மாவுக்கு
கதை சொல்லத்
தொடங்கியது குழந்தை

காட்டுக்குள்ள
நீ போவக்கூடாது
வேற கதை சொல்லு

காட்டில்
தொலைந்த குழந்தை
தேடிக்கொண்டிருந்தது
வேறொரு கதையை