Saturday, October 31, 2009

ஒருவரில் ஒருவர்

தெரியாதது போல்
கேட்டுக் கொண்டிருந்தவர்
கடைசியில் சொன்னார்
தனக்கு எல்லாம்
தெரியும் என்று

தெரிந்தது போல்
சொல்லிக் கொண்டிருந்தவர்
பிறகு சொன்னார்
தனக்கு எதுவும்
தெரியாது என்று

விளையாட்டு

அடிக்கடி நடக்கும்
விளையாட்டு
என்னைத் தொலைத்து
நானே கண்டெடுப்பது

விடுமுறை

இன்று விடுமுறை
எடுத்துக் கொண்டேன்
தூக்கத்தை
ரசிக்க வேண்டும்
தூங்கியபடி

விருந்து

பனித்துளிக்கு
விருந்து வைத்தேன்
கவிதையில்

கடிகாரம்

யாருமற்ற வெளியில்
ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரம்
தனக்கு நேரத்தைச்
சொல்லியபடி

Friday, October 30, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

09

சுருண்டு கிடக்கும் கயிறு
உங்கள் கால்களின்
மிதியைப் பொருத்து
பாம்பாய் மாறும்

சுருண்டு கிடக்கும் பாம்பு
உங்கள் கால்களின்
மிதியைப் பொருத்து
கயிராய் மாறும்

10

இல்லாத ஒன்றிலிருந்து
இருக்கும் ஒன்றுக்கு
வந்தேன்

இருக்கும் ஒன்றிலிருந்து
இல்லாத ஒன்றுக்கு
சென்றேன்

Monday, October 26, 2009

தேடி நடப்பவன்

கையில் கோடரியுடன்
தொண்டை வறள
தேடி நடப்பவன்
கனத்த மனத்துடன்
சொல்கிறான்
அய்யோ
எல்லா நிழலையும்
வெட்டிட்டனே
பாம்பாய் நீளும்
அவன் நிழலை
கொத்தி தின்கிறது
வெயில்

Sunday, October 25, 2009

மீட்சி

நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா
முள்வேலி போல் தைக்கிறது
குழந்தை கேட்பது

விடை தெரியாத தாய்
குழந்தையின்
கவனத்தை மாற்றி
கதை சொல்லி
தூங்க வைக்கப் பார்க்கிறாள்

தூங்கிய
குழந்தையின் உதடுகள்
முணுமுணுக்கிறது
நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா

Thursday, October 22, 2009

நாங்கள்

வேகமாய் வந்தும்
விட்டு விட்டோம்

ரயில் போயிடுச்சி
நான் கோபப்பட்டேன்

ரயில் போயிடுச்சே
மனைவி வருத்தப்பட்டாள்

ரயில் போயிடுச்சா
குழந்தை சிரித்தாள்

(இந்த கவிதை அலைவரிசை
என்ற தலைப்பில்,ஆனந்த விகடன்
2.12.09இதழில் வெளியானது)

தொடுவானத்தில்

தொடுவானத்தில்
எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினேன்
காத்திருப்பின் குறிப்புகளை

நாளை வந்து
பார்க்க வேண்டும்
வானம் என்னவெல்லாம்
திருத்தி இருக்கும் என்பதை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

07

உடைந்து போகாமலிருக்கிறது
உடைந்து போன
நான்கள்

08

தொடர்ந்த கேள்விகள்
சங்கிலியாகி
இழுத்து வருகிறது
பதிலை

Tuesday, October 20, 2009

பெயர்

நான் இல்லாத போது
பார்க்க வந்தவர்கள்
என் பெயரின் மேல்
நிறங்களைப் பூசி
சென்றனர்

ஒரு வண்ணத்தில்
அன்பு இருந்தது

ஒரு வண்ணத்தில்
கோபம் இருந்தது

பொறாமை,வருத்தம்,வன்மம்
இப்படி படிந்திருந்தன
நிறைய

ஒவ்வொன்றாய்
உரித்துப் பார்க்க
நிறமிழந்து போயிருந்தது
என் பெயர்

பதில்

எறும்பு
சுமந்து சென்றது
ஒரு மலையை

எப்போது இறக்கி வைப்பாய்
கேட்டேன்

மலை விரும்பும் போது
பதில் வந்தது

Sunday, October 18, 2009

மிதக்கும் இசை

படுத்திருக்கும்
வயலின் போல
மீன்தொட்டி

நகரும் மீன்களின்
லயத்திற்கேற்ப
மேலேறி
மிதக்கிறது இசை

Saturday, October 17, 2009

பார்க்கும் பொம்மை

தன் குழந்தைக்கு
பொம்மை
வாங்க முடியாது
எனத் தெரிந்து
பேரம் பேசி
வெளியேறப் பார்க்கிறார்
அப்பா

பாசம் உணர்ந்து
கட்டுபடியாகும் பேரத்துக்கு
படிய வைத்து
விற்கப் பார்க்கிறார்
கடைக்காரர்

பொம்மைப் பார்க்க
போராடுகின்றனர்
இருவரும்

Thursday, October 15, 2009

தெரிதல்

பசித்தவன்
கண்களில் தெரிந்தது
இல்லாத வயிறு

வரைதல்

வண்ணங்களிலிருந்து
இசை எடுத்து
வரைகிறேன்
ஒரு புல்லாங்குழல்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

04

கைபிடித்த காற்றை
திறந்து பார்த்தேன்
பத்திரமாயிருந்தது
பிரபஞ்சத்தில்

05

முற்றுப்புள்ளிக்கு
முன்னால் இருக்கிறது
நான் படித்த கதை

முற்றுப்புள்ளிக்கு
பின்னால் இருக்கிறது
நீங்கள் படிக்க வேண்டிய கதை

06

நீங்கள் விரலாக
பார்ப்பதற்கு முன்
ஒரு வேண்டுகோள்

இந்த ஆறாவது விரலை
நான் வாளாகவும்
பயன்படுத்துவேன்

Wednesday, October 14, 2009

மையப்புள்ளி

வட்டத்தின் உள்ளே
சுற்றும் எறும்பு
மாற்றிக் கொண்டே இருக்கிறது
மையப்புள்ளியை

வியூகம்

நாவின் மேலே
வியூகம் அமைக்கும்
வார்த்தைகள்

நாவின் அடியில்
பதுங்கிய கோபம்

ஒற்றைச் சலங்கை

மேடையில் கிடக்கும்
ஒற்றைச் சலங்கை
ஆடியாடித் தேடுகிறது
அனாதையாய்
விட்டுப் போனவளை

ஊஞ்சல்

ஊஞ்சலில்
ஆடிய குழந்தை
தூங்கிப் போனது

தாலாட்டிய ஊஞ்சலும்
தூங்குகிறது
அசைவைக் கேட்டபடி

Friday, October 09, 2009

அனுபவ சித்தனின் குறிப்புகள்

01

எனக்குள் நேராய்
தொங்கும் வெளவால்கள்
நான் தலைகீழாய்
இருப்பதாய்
பரிகசித்துப் பறக்கின்றன

02

நான் இறந்த செய்தி கேட்டு
பார்க்க வந்த
முதல் நண்பர்
சிந்திக் கொண்டிருந்தார்
என் கண்ணீரை

03

…65…64…63
என எண்களைச்
சுருக்கிக் கொண்டே வருகிறது
வெடிகுண்டு

சீக்கிரம் ஓடிப்போய்
தொலைக்காட்சி பெட்டிமுன்
அமர்ந்து கொள்ளுங்கள்

சேதாரங்கள் சோகங்கள்
உங்களுக்கு
'லைவ்' வாக வரும்

Wednesday, October 07, 2009

எலக்ட்ரானிக் விலங்கு

கதை தட்டுப்பாடு
தடைகளைத் தாண்டி
மூன்று வருடங்களாக
எங்கள் பழைய டீவியில்
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த மெகா சீரியல்

நாங்கள் டீவி மாற்ற போட்ட
திட்டம் எல்லாம்
கை நழுவிப் போனது

அது ஒரு
இறந்து போன
எலக்ட்ரானிக் விலங்கு
என்றான் விஞ்ஞானம்
படிக்கும் மகன்

ஒரு நாள்
மெகா சீரியலில்
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும்

இந்த மங்கிப் போன டீவிய
இவுங்க எப்ப மாத்தப் போறாங்க

என் மேல்

நான் தூக்கி எறிந்த
ஒவ்வொரு கணமும்
இறந்த பழமாக
விழுந்தது என் மேல்

நிகழ்வின் முடிவில்

நிகழ்வின் முடிவில்
எப்போதும் பேசிக் கொள்கிறோம்

இந்த விபத்தை
தவிர்த்திருக்கலாம்

Tuesday, October 06, 2009

காத்திருத்தல்

காத்திருந்து
காத்திருந்து
பழகிப் போச்சி
காத்திருக்க

Monday, October 05, 2009

இல்லாதது

இல்லாத ஒரு கவிதையை
இல்லாத ஒருவன் எழுத
இல்லாத மற்றொருவன் படிக்கிறான்
இல்லாத வேறொரு இடத்திலிருந்து

அனுமதி

எனது தற்கொலைக்கு
அனுமதி கிடைத்து விட்டது
என்னிடமிருந்து

Friday, October 02, 2009

வானவில்

உதட்டில் ஊர்ந்து
போகிறது வானவில்
மெளத் ஆர்கன்
வாசிக்கும் சிறுவன்

அரங்கில் அவன்

அரங்கில் நடித்து முடித்து
பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து
மீண்டும் பார்த்து
சரி செய்கிறான்
மறுபடி பழுதின்றி தயாராக

வெறும் மேடையை
ஏன் வேடிக்கைப் பார்க்கிறாய்
என்று அவனைப் போகச் சொல்கிறான்
கதவை மூடும் காவலாளி

பூவிலிருந்து...

பூவிலிருந்து
பூக்களைக்
கிள்ளி எறிகிறது
குழந்தை

வார்த்தைகளின் தூரத்தில்

இன்னும் சில நொடிகளில்
இந்த பல்லி
அந்த பூச்சியைத்
தின்றுவிடக் கூடும்
என தட்டச்சு செய்யும் மனம்

வார்த்தைகளின் தூரத்தில்
அப்படியே இரண்டும்
பல்லி பசியற்று
பூச்சி மரண பயமற்று

நீரில் சதுரங்கம்

நீரில் சதுரங்கம் ஆடுகின்றன
சிறுவன் எறியும் கற்கள்

தோல்வியை
ஒத்துக் கொள்கிறது குளம்
வட்ட புன்னகை செய்து

ஞாபகத்திற்காக

வியந்து பார்த்து
ஏறிய மலை
திரும்பி இறங்குகையில்
கையில் சில
கற்களைத் தந்திருந்தது
ஞாபகத்திற்காக