Saturday, July 30, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

590-

என்னுள் நகர
கண்டேன் வானம்

என்வெளி விரிய
கொண்டேன் ஞானம்

591-

பிறகு
இரவு
அதன் பிறகு
பகல்
அவ்வளவுதான்
வேறொன்றுமில்லை

592-

மொழிக்குள் நுழைந்து
வார்த்தைகளில்
வெளியேறிவிடுவதை
எப்படி எழுத

593-

படிகளில்
இறங்கியது மழை

மழையில்
இறங்கின படிகள்

594-

சதுரத்திற்குள்
இருக்கும் சதுரங்கள்
சதுரத்திற்குத் தெரியாது

595-

பதில் கண்டெடுக்காத
கேள்விகள்
கேள்விகளே அல்ல

596-

எழுது
என்ற கட்டளையை
எழுத்தே
பிறப்பித்து விடுகிறது

597-

கண்ணீரும் மழையும்
பேசும்
புன்னகை
தள்ளி நின்று
பார்க்கும்

598-

துளிக்குள்
பதுங்கும் கடல்போல
மெளனத்திற்குள்
பதுங்குகிறது மொழி

599-

நிசப்தத்தின் கோடரி
இரவின்
மேல் விழும்
வழியும் கனவுகள்
ஒன்றிரண்டு
என் கரை வரும்

Thursday, July 28, 2011

நிகழ்தல்

மொழியில்லை
வரிகள் இல்லை
வார்த்தைகள் இல்லை
ஒரு நெல்மணி அளவு கூட
எழுத்தில்லை
ஆனாலும்
நிகழ்கிறது உரையாடல்

மலை

தன் நாவில்
மொழி அழுந்திக்கிடக்க
யார் யார் குரலையோ
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது மலை

Tuesday, July 26, 2011

கதை

உள்ளங்கை
சொற்களைக் குலுக்க
கேட்டது
புராதன கதையின்
சத்தம்

கையசைப்பு

கையசைத்து
கையசைத்து
கடைசி கையசைப்பு
ரயிலுக்கு
என்றாச்சு

Friday, July 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

584-

பிறகுதான் சொல்லப்பட்டது
பசியாறிய இறைச்சி
சமாதானப் புறாவின்
உயிர் என்று

585-

எல்லாம்
இறக்கி வைத்தாயிற்று
இனி எதுவும்
சுமையில்லையே

இந்த கேள்வியை
இறக்கி வைத்தால் போதும்

586-

எழுத்தின் பசி
எழுப்பும்
உறங்கும் வார்த்தைகளை

587-

முதுகை நோக்கி
எறியப்படும் ஈட்டிகள்
துரோகத்தின்
விஷம் தோய்ந்தவை

588-

ஏதோ ஒன்று
நம்மை விரட்டுகிறது

ஏதோ ஒன்றை
நாம் விரட்டுகிறோம்

589-

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை

என்னிடமும்
சொற்கள் இருக்கின்றன

Thursday, July 21, 2011

மழை

மழை நம்மை
குழந்தையாக்கிவிடுகிறது
சரிதானே

ஆமாம் என்கிறார் அப்பா

நனையும் மழை
இன்னும்
குழந்தையாக்கி விடுகிறது
இதுவும் சரிதானே

சொல்லி ஓடுகிறாள் குழந்தை
கூப்பிடும் மழையிடம்

Wednesday, July 20, 2011

வழியில்

உன் தடங்கள் இல்லை
ஆனாலும் நீ வந்து போன
குறிப்புகள் வழியில்

யார்

இசைக்கத் தெரியாத
இந்த மூங்கிலுக்கு
யார் இத்தனை
துளை இட்டது

Monday, July 18, 2011

தானானது

என் மேல்
பூக்கும் பனித்துளி
பிரபஞ்சம்போல்
என்னை
பெரிதாக்கி விடுகிறது

சொல்லி சிரிக்க
துளி மறைய
மீண்டும் தானானது
புல்

அறைகள்

அறை முழுதும்
அறைகள்
என எழுதியபின்
வத்திப்பெட்டி அளவு இடம்
வானமாக விரிவு கொண்டது

Saturday, July 16, 2011

நகரத்தில் சந்தித்தவன்

நகரத்தில் சந்தித்தவன்
சொன்னான்

நான் மனிதர்களை
வேட்டையாடும்
மனிதன்

கால்களில்
ஓட்டத்தை குவித்தபடி
கேட்டேன்

இப்போது
நீ என்னை
வேட்டையாடப் போகிறாயா

அது உன் மேல் கமழும்
இறைச்சி வாசனையைப்
பொறுத்தது

மூக்கை விரித்தபடி
சொன்னான்

அவனிடமிருந்து தப்பிக்க
வேகமாக ஓடுகையில்
அவனைப் போலவே
எதிர்பட்டனர்
நிறைய பேர்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

577-

கை குவித்த
சொற்களுக்குள்
நான் குவிந்து

578-

இப்போது நான்

கிடைக்காதா என்ற
படபடப்புடனும்

கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையுடனும்

579-

சொல் கொண்ட
சூல் உடைத்து
பாய்ந்தது வரி

580-

என் மீது
சொருகப்பட்ட வாளை
எடுக்கிறேன்
என் யுத்தம்
பதில் சொல்லும்

581-

எல்லா வழிகளும்
அடைக்கப்பட்டிருக்கின்றன
என்ன செய்யப் போகிறீர்கள்

பறக்கப் போகிறேன்

582-

என் நாவால்
பேசும்
சபை

583-

நகரும் கதையில்
ஓடுகிறது குதிரை
எழுத்துக்களைப்
பின்னுக்குத் தள்ளி

மறைதல்

காமமாய்
மாற்ற நினைத்த
காதலொன்று
கைகுழந்தைபோல்
அழுதது

மெல்ல கீழிறக்கிவிட்டுப்
போகச் சொல்ல
பூப்படைந்த
புதுப்பெண் போல்
ஓடி மறைந்தது

Wednesday, July 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

572-

அழுவதைத் தவிர
வழி இல்லை
அழுதாயிற்று
இனி அழுகைக்கு
வழி இல்லை

573-

வெள்ளைத் தாளை படிப்பதற்கு
எழுத்துக்கள்
தேவையில்லை

574-

வானத்தில் விழிகள்
சதுரங்களில்
தூங்கி விடுகிறேன்

575-

பறிக்க நீளும் கரம்
பூவின் புன்னகைப் பார்த்து
தடவிவிட்டுத் திரும்புகிறது

576-

அன்பு மட்டுமே இருக்கிறது
உன்னிடம்

இதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்

அன்பு செய்யப் போகிறேன்

Sunday, July 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

568-

கதைப் புத்தகத்தில்
கலைந்து போயிருந்தது
இன்னொரு கதை

569-

நான்
கொன்று
நான் பிறந்தேன்

570-

பொருளற்ற நான்
பொருள் உள்ளவன்
சொல்லிப் பார்த்தேன்
பொருள் இருந்தது

571-

ஏதோ ஒரு விட்டில் பூச்சி
அணைத்து விடுகிறது
சுடரை

Saturday, July 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

560-

நானும் நீங்களும்
நானும் அவர்களும்
என்பது போலத்தான்
நானும் நானும்

561-

முறிந்து போன வார்த்தைகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில்

562-

யுத்தம் பழகியவன்
சத்தமில்லாமல்
கொல்வான்

563-

காற்றைத் திரித்து
கண்டேன் ஒரு வரி
அது கானம் இசைத்து
போனது பல வழி

564-

விரட்டாத பறவை
விட்டுச் சென்றது
வானத்தை

565-

இருளில்
படிக்கிறேன்
இருளை

566-

தூக்கம் கேட்கின்றன
இமைகள்

காட்சிகள் கேட்கின்றன
விழிகள்

567-

இரவும்

மதுவில் இறங்கிய
இரவும்

ஒரு இரவில்
தூங்கினேன்

ஒரு இரவில்
விழித்திருந்தேன்

Tuesday, July 05, 2011

மகளின் வரிகள்

மரங்களே
விதையிலேயே இருங்கள்
நீங்கள் வளர்ந்தால்
வெட்டித் தள்ளிவிடுவார்கள்

தான் எழுதிய வரிகளை
எடுத்து வந்து காட்டினாள் மகள்

படித்து
அவள் தலை தடவ
வெட்டப்படாத
மரங்களின் காற்று
என் மேல் வீசிச் சென்றது

Saturday, July 02, 2011

காத்திருத்தல்

என்னைப் போலவே காத்திருப்பவர்
யாருக்காக காத்திருக்கிறார்
என்று தெரியாது

என்னைப் போலவே காத்திருப்பவர்கள்
எதற்காக காத்திருக்கிறார்கள்
என்று தெரியாது

காத்திருக்கிறேன்

காத்திருக்கிறார்

காத்திருக்கிறோம்

Friday, July 01, 2011

செய்தியில்...

காலை செய்தியில்
வாகனம் ஏறி
இறந்த குழந்தை

அன்று முழுதும்
அந்த குழந்தையைக் காப்பாற்ற
மருத்துவமனைகளுக்கு
ஓடிக்கொண்டிருந்தேன் நான்

இதற்கு மேல்

இதற்கு மேல்
எழுத எதுவுமில்லை என்று
முடித்திருக்கிறாய்

உனக்குத் தெரியாது
அதற்கு மேல்
தொடர்ந்துகொண்டிருந்ததை
நான் படித்துக்கொண்டிருந்தது