Sunday, May 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

886-
தொடாத வானம்
தொடச் சொல்லும்
ஞானம்
887-
மனது
கலப்படமானது.
கலப்படம் 
பழகிப் போனது
888-
உதிர்ந்த இலையின் 
ஞாபகத்தில் மரத்தின் 
ஒன்றிரண்டு சொற்கள்
889-
குருவே நான் அமைதியாக 
யோசித்துக் கொண்டிருக்கிறேன் 
நீங்கள் 

அமைதியை 
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
890-
நன்றியால் 
நெய்த அன்பில் 
நானும் 
ஓர் இழை
891-
இருள் வனத்தில்
ஒளிக்கோலம்
மின்மினிப்பூச்சி
892-
வழி அடைக்கப்பட்டிருக்கிறது 
என்றவன் 
நின்று கொண்டிருந்தான்

பிரபஞ்சம் திறந்திருக்கிறது 
என்றவன் 
நடந்து கொண்டிருந்தான்
893-
நாடக கண்ணீர
புரிஞ்சிக்கிட்டேன்
அது வேஷம்
கலைச்சப்ப
விழிச்சிக்கிட்டேன்
894-
எதற்கு நின்றுகொண்டிருக்கிறாய் 

ஓடி வந்ததை 
அசை போடுகிறேன் 

அதை ஓடியபடியே செய் 
ஓடு
895-
பசியை இலையாய் 
விரித்து வைத்திருக்கிறேன் 
நீங்கள் என்ன 
பரிமாறினாலும் 
எனக்கு சம்மதம்
896-
என் மீதி நான்கள் 
உங்களுக்குள் 
இருக்கிறார்கள்
897-
தவமிருந்தவன் 
தூங்கிப்போனான் 
அவன் வரத்தை 
யாரோ ஒருவன் 
வாங்கிப்போனான்
898-
நினைவின்
பெரும் குகை
உள்ளிருள்
அழகு




மீனின் பொய்கள்


நீரில் தற்கொலை 
செய்து கொண்டேன் 
என்று சொன்ன 
மீனை எடுத்துக்
கரையில் போட்டேன்
இறந்து போயிருந்தது
மீனின் பொய்யும்

Friday, May 18, 2012

காகிதப் புலி

நான் எழுத்தில்
சிக்கிக்கொண்ட 
காகிதப் புலி 

என்னைக் கொண்டுபோய் 
வனத்தில் விடுவாயா

செய்வதறியாது 
திகைத்து 
ஒரு நாள் வனம் 
போய் நின்று 
தூக்கி எறிந்தேன் 
புத்தகத்தை 

எழுத்திலிருந்து 
தானே விடுதலைப் பெற்று 
புலிப்போகக்கூடும் 
கானகத்திற்கு 

திரும்ப எனக்கு 
புத்தகம் கிடைக்கக்கூடும் 
படிப்பதற்கு

Wednesday, May 16, 2012

அன்புள்ள கடவுளுக்கு

அன்புள்ள கடவுளுக்கு
என்று நான் 
எழுதத் தொடங்கிய கடிதத்தை
என்னுடன் சேர்ந்து
கடவுளும்
எழுதிக் கொண்டிருந்தார்