Thursday, April 29, 2010

திட்டம்

போதையின் உச்சத்திலிருந்தவன்
அங்கிருந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள
முடிவு செய்தான்

பின் திட்டத்தை மாற்றி
இன்னும்
மேலேறிப் போனான்

தப்பித்தல்

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

வீட்டிலிருந்து
வலையிலிருந்து
கசாப்புக்கடைக்காரனிடமிருந்து
கடைசியில்
கவிதையிலிருந்து

அந்த முயல்குட்டி
தப்பித்து விட்டது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

75-

ஜென் குகை
இருளுமற்று வெளிச்சமுமற்று
குகையுமற்று

76-

என் சொற்களால்
பேசிவிட்டுத்
திரும்புகிறீர்கள்
என்னையும் விட்டுவிட்டு

77-

புத்தரை வரைந்தேன்
வரைய வந்தது
புத்தரா தெரியவில்லை

Monday, April 26, 2010

தொடுதல்

ஊஞ்சல் மேலேறும் போதெல்லாம்
ஆடும் குழந்தையின் கால்கள்
தொட்டு வருகிறது வானை

Saturday, April 24, 2010

யாரோ

தெறித்து
வழிந்தோடும்
அந்த ரத்தம்

உங்களுடையதல்ல

என்னுடையதல்ல

நம் யாரோ
ஒருவருடையது

எறிதல்

நேரத்தின் மீது
கல்லெறிந்தேன்
சேர்ந்த மலையில்
நசுங்கிப் போனேன்

Thursday, April 22, 2010

இன்னொரு புத்தகம்

பக்கங்கள்
மாற்றிப் படித்த கதையில்
இன்னொரு புத்தகம்

------

முதியவர் வீடு
காற்றில் ஆடுகிறது
தேதி கிழிக்காத காலண்டர்

------

தொலைந்து போனதுண்டா
நீங்கள் உங்களில்
தொலைந்து போனதுண்டா

-------

அடை மழை
மூடிய கோயில்
கடவுளும் நானும்
மழைத்துளிகளை எண்ணியபடி

-------

விற்காத பொம்மை மீது
எடுத்துப் பார்த்தவர்களின்
விரல் ரேகைகள்

Monday, April 19, 2010

இருந்தது

கண்ணாடிக் குவளைக்குள்
இருந்த மீனுக்குள்
இருந்த கடலுக்குள்
இருந்தது மீன்

Saturday, April 17, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

75-

ஆழ்மனத்தில்
அமர்ந்திருந்தேன்
யாருமற்று
நானுமற்று

76-

மனதிற்குள் நடக்கையில்
நினைவுகளின் சத்தம்
கால்கள் மிதிபட

Monday, April 12, 2010

சுமை

கூடவே வரும் நிலா
பார்க்கமுடியவில்லை
தலைசுமை

நிலை

கட்டியிருந்த ஆடு
திரும்பி வந்தபோது
தொங்கிக் கொண்டிருந்தது

குரல் பிடித்து

அம்மா நான் இங்க இருக்கேன்
குழந்தையின் குரல் பிடித்து
இருளை கடக்கிறாள் தாய்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

70-

எறிந்த கல்
உள்ளிறங்குகிறது
சொல்லென

71-

கொன்ற எறும்பு
விரட்டுகிறது
மிருகமென

72-

வெறும் தாள்
இல்லை
ஜென் தோட்டம்

73-

வெளியேறக் காணோம்
உள்ளிருக்கும் மிருகம்
பழகியாக வேண்டும்

74-

நான் இறந்து கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
இறந்து போகும்வரை

எப்போதும் நீங்கள்

எப்போதும் நீங்கள்
யார்மேலாவது விழுகிறீர்கள்
பயணத்தில்
உரையாடலில்
சாய்மானத்தில்
அந்தரங்கத்தில்
இப்படி பல
தருணங்களில்
ஒரு முறைகூட நீங்களாய்
எழுந்து போனதே இல்லை

Saturday, April 10, 2010

அப்பாவும் மழையும்

எப்போது பெய்தாலும்
நனைந்து விட்டு
வரச் சொல்வார் அப்பா

அப்போதெல்லாம்
அப்பாவைப் போலவே
பேசும் மழையும்

Thursday, April 08, 2010

சில பார்வைகள்

உடைத்து விட்ட பொம்மை
அழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு
-------

Wednesday, April 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

66-

என்னிலிருந்து
என்னைப் பிடுங்கி
என்னில் நடுகிறேன்

67-

கண் மூடி
நான் பார்த்த மெளனமும்
கண் திறந்து
என்னைப் பார்த்த மெளனமும்
வேறுவேறாகவும்
ஒன்றாகவும்

68-

ஒரு வரியை
திரும்ப திரும்ப எழுத
அந்த ஒரே வரி
மாறிக்கொண்டிருக்கிறது
புது புது
வரிகளாக

69-

நீங்கள் புன்னகைத்தபின்
காண முடிந்தது
உங்கள்
முகத்தின் கசப்பை

Sunday, April 04, 2010

காரில் ஆடும் பொம்மை

நெருங்கிவிட்ட வீடு
குடிகாரனின் கால்கள்
குழப்பத்தில்
--
கவனமாக காலடி வைக்கிறேன்
குழந்தைகளின்
மழை கப்பல்கள்
--
பட்டாம்பூச்சி பிடிக்கிறது குழந்தை
இல்லை இல்லை
பட்டாம்பூச்சி பிடிக்கிறது பட்டாம்பூச்சி
--
கனவில்
தூங்குவதை தடுக்க
எழுகிறான் போராளி
--
நள்ளிரவு
காரில் ஆடும் பொம்மை
ஓட்டுனருடன் பேசிக்கொண்டு
--
பழைய நண்பர்கள்
காலங்களைக் கோர்க்கிறார்கள்
பார்க் பெஞ்சில்
--

அனுபவ சித்தனின் குறிப்புகள்

63-

உண்மையில்
பொய்கள் நான்தான்
தனியே எதுவுமில்லை

64-

கதவை மூடுகிறீர்கள்
சுதந்திரமாய் நான்
அடைத்துகொண்டு நீங்கள்

65-

நான் இருளை தின்பவன்
என்றவனைக் கேட்டேன்
எங்கே தின்று காட்டு

சிரித்தபடி சொன்னான்

உன்னைச் சுற்றி
இருக்கும் வெளிச்சம்
நான் இருளை தின்றதால்
முளைத்திருக்கிறது

சொல்லிவிட்டு
மென்று கொண்டிருந்தான்

எதை என்று
தெரியவில்லை