Monday, November 22, 2010

எரியும் நூலகம்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

தீவைத்த சதிகாரர்கள் தப்பிவிட்டார்கள்

காலம் தீக்கனலாகிறது

ஊற்றிய நீரை வாங்கி
தன் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறது நெருப்பு

கொடும்பாவிகள் சிக்கவில்லை

ஏவப்பட்ட பேய்கள்
குற்றத்தை நிகழ்த்திவிட்டு
தடம் காட்டாதபடி பதுங்கிவிட்டன

கேட்கிறது
தீயில் வேகும்
கதாபாத்திரங்களின் அழுகுரல்கள்

வரலாற்றின் வலிகள்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

உருவான முதல் நாளிலிருந்து
நூலகத்தின் வாசனையை
உணர்ந்த பெரியவர்
அழுது கொண்டிருக்கிறார்

புத்தகங்களை வெகுவேகமாய்
படிக்கிறது நெருப்பு

உதவி மறுக்கப்பட்ட நூலகம்
அனாதையைப் போல
பார்க்கிறது

புகையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்துகொண்டிருக்கிறது

மழை வந்து
மீதி பொக்கிஷங்களைக் காப்பாற்றிவிடாதா
பிரார்த்தனைகள் காற்றில் கலக்கின்றன

வானம் அசையக் காணோம்


இறந்து கிடக்கின்றன
உள் வசித்த புறாக்கள்

சூட்சியின் வியூகம்
அறிவு ராஜ்ஜியத்தை வீழ்த்தி இருக்கிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

ஊடகங்கள் நூலகத்தின் இறுதிக் காட்சிகளை
பலகோணங்களில் காட்டுகின்றன
கண்ணீரும் கண்ணும்
அருகருகே இருப்பது போன்று
மிகத் துல்லியமாக
நேரடி ஒளிபரப்பாக

நூலகர் தப்பிவர விரும்பாமல்
நூலகத்தோடு தீ சமாதியானதாக
ஒரு தகவல் கசிகிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

மூன்று தலைமுறை கண்ட நூலகம்
முடிந்துகொண்டிருக்கிறது

சதிகாரர்கள் பிடிக்கப்படுவார்கள்
மீண்டும் இதுபோல்
நிர்மாணிக்கப்படுமென்று
செய்திகள் உற்பத்தியாகின்றன

பலூன் வார்த்தைகள்
பஞ்சமின்றி பறக்கின்றன

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி
அதைக் காப்பாற்றிவிட்ட பதட்டத்தில்
கைநடுங்க இறுக்கமாகப் பிடித்தபடி
பார்த்துக் கொண்டிருக்கிறாள்

புத்தகத்தின் அட்டையில்
ஒளிர்கிறது நூலகத்தின் பெயர்

Friday, November 19, 2010

பெயரற்ற பள்ளத்தாக்கு

இந்த பள்ளத்தாக்கில்
பனிமூடி இருக்கிறது

கை நீந்திப் பார்க்க
பூக்கள் சிக்குகின்றன

ஒரு பூவிலிருந்து
பட்டாம்பூச்சி பறந்தோடுகிறது
பிஞ்சு ஒளியை அசைத்தபடி

உள்ளிழுக்கும் மூச்சுக்கு
கிடைக்கின்றன
வனத்தின் வாசனைகள்

பழக்கமாகிவிட்டது
பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கின் பெயரை
உரக்கச்சொல்லி
மலைகளுக்கு
அறிமுகப்படுத்த வேண்டும்

இதற்கு ஒரு
பெயர் வேண்டும்

நல்ல பெயராக

நழுவி மறைகின்றன
பெயர்கள்

கிடைக்காமலாப் போகும்
ஒரு நாள்

Thursday, November 18, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

242-

மண் பூசிய
பழத்தை எடுத்து
ஊதித் தின்றேன்

அருகில் வந்தவர்
அது நான்
எறிந்த கல்
வேண்டும் என்று
வாங்கிப்போனார்
கல் மனிதராக

ஊறும் சுவையின்
உள்ளிருந்தேன் நான்
பழத்தின் மரமாக

243-

சொல்லின்
விளிம்பில்
தொங்கும்
துளி

துளியில்
ஒளிரும்
பிரபஞ்சம்

பிரபஞ்சம்
குடிக்க
நீளும்
நாவு

விழுகிறது

துளி
சொல்

சொல்
துளி

இரண்டுமற்று
நான்

Monday, November 15, 2010

வனத்தின் புகைப்படம்

மேஜை மேலிருக்கும்
வனத்தின் புகைப்படம்
பார்த்துக்கொண்டே
வேலை செய்யலாம்
சிங்கத்தின் கர்ஜனையும்
வனத்தின் உள்ளிருந்து
வரக் கேட்கலாம்

பிறகு உன் சிறகு

அலகால்
கூண்டை உடை
கிளியே

பிறகு உன் சிறகு
காற்றில் எழுதும்
சுதந்திரத்தின் பாடலை

அனுபவ சித்தனின் குறிப்புகள்

235-

பிடிபடவே
தப்பித்தேன்
பிடிபடவும்
தப்பித்தேன்

236-

இரவின் பரணையில்
புணரும்
கனவுகள்

237--

ஓயாது குடித்தோம்
ஓய்ந்து போனோம்
ஆனாலும் பேசினர்
எனது நானும்
அவனது அவனும்

238-

நீ மெளனத்தின்
எந்த புள்ளியில்
இருக்கிறாய்

சின்னத் திருத்தம்
நான் மெளனத்தின்
புள்ளியாக இருக்கிறேன்

239-

நீ படிமமா
குறியீடா

நான் குறியீட்டின்
படிமம்

படிமத்தின்
குறியீடு

240-

வேண்டாத சொற்களைத்
தவிர்த்துப் பார்த்தேன்
சொற்களின் கடைசியில்
என்னையும் பார்த்தேன்

241-

எதுவுமில்லாதிருப்பதே
இருப்பதில் இருக்கும்
விஷேசம்

Sunday, November 14, 2010

மகளின் மெழுகுவத்தி

மெழுகுவத்தி
வரைந்து கொண்டிருந்தாள் மகள்

கண்கள் ஒளிர
வண்ணம் பூசி
அழகாய்
நேர்த்தியாய்

திரியை வரைந்தபோது
இருளானது

ஆனாலும் தொடர்ந்தாள்

மின்சாரம் வந்து
பார்க்க
மின்னியது மெழுகுவத்தி

ஆடி அழைப்பதுபோல் திரி

ஆச்சர்யத்துடன்
கேட்டேன்

சொன்னாள்

எனக்கு மட்டும்
வெளிச்சம் காட்டுச்சு
மெழுகுவத்தி
அதுலயே வரைஞ்சி
முடிச்சிட்டேன்பா

Saturday, November 13, 2010

காலம்

குவிந்து கிடந்த
புகைப்படங்களில்
கல்லெறிந்தேன்
உறைந்து போயிருந்த காலம்
அலையெழுப்பி
மறைந்து போனது

Thursday, November 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

232-

கிண்ணத்தின் விளிம்பிலிருந்து
ததும்பும் நீர் போல்
ததும்புகிறது மனது
மனதிலிருந்து

233-

உண்மைக்குள்
நுழைந்து கிடந்தேன்
பொய்கள்
மக்கி முடிய

வெளிவரலாம்
ஒரு நாள்

உண்மையின் துகளென
அல்லது
பொய்யின் உடலென

234-

வரியை
கவ்விப்போன
கனவை விரட்டினேன்
கனவைப் போட்டுவிட்டு
ஓடியது வரி

நட்பு

ஒதுங்கியபோது
பழைய நண்பனின்
ஞாபகம் வந்தது

பின் நிற்கும் வரை
மழை நண்பனாக இருந்தது

கடல் பார்த்தல்

இருளில்
கடல் பார்க்க
இருளெனக் கிடந்தது

பகலில்
கடல் பார்க்க
பகலெனத் தெரிந்தது

இரவுக்கும் பகலுக்கும்
நடுவில் வந்து
கால் நனைத்த அலை
கேட்டுப் போனது

கடலை நீ எப்போது
கடலாகப்
பார்க்கப் போகிறாய்

Tuesday, November 09, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

228-

நகர்ந்து
நகர்ந்து

வந்து சேர்ந்த
இடத்திலிருந்து

நகர்ந்து
நகர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

சென்று சேர்ந்த
இடம் நகர்த்த

நகர்ந்து
நகர்ந்து

தொடர்ந்து
தொடர்ந்து

நகர்ந்து
நகர்ந்து

229-

கவிதைக்கு
வந்து சேராத வார்த்தையை
சிலுவையில் அறைந்தேன்

கசிந்த ரத்தத்தில்
என் வன்மம் அறிந்தேன்

230-

காலத்திலிருந்து
நீ எவ்வளவு கறப்பாய்
கேட்கிறது
வைக்கோல் கன்றுக்குட்டி

231-

நான் இல்லை
என்கிற இல்லையில்
இல்லாமல் இல்லை நான்

Friday, November 05, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

226-

சுயம் பிளக்க
கிடந்தன
உடைந்த நான்கள்

227-

இருளின் கரி எடுத்து
என்ன எழுதுகிறாய்

ஒளியின் கருணையை

Thursday, November 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

224-

கேள்வியில்
தொங்கிய பதிலை
கேள்விக்குத் தெரியாமல்
எடுத்துக்கொண்டேன்

225-

இசை
எங்கிருக்கிறது
இசைக்கு வெளியில்

Wednesday, November 03, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

223-

தாவோவிடம்
என் சமநிலைப்பற்றிக் கேட்டேன்

உன் இரு முனைகளிலும்
நீ ஒத்த பலத்துடன் இரு
தன்நிலை பழகியவுடன்
எடை மாற்றிக்கொள்வது பற்றி
யோசிக்கலாம் என்றார்

Tuesday, November 02, 2010

அவனும் நீங்களும்

அவனை எல்லோரும்
கல்லால் அடித்துக் கொன்றார்கள்

கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது

அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை

தேடல்

கடலின் மேற்பரப்பில்
அமர இடம் தேடி
பறக்கிறது
ஒரு சிறு பறவை

பாவமாக இருந்தது

பின்னொரு நாள்
ஒரு மீன்குஞ்சிடம்
பேசிக்கொண்டிருந்தபோது
கவலையுடன் சொன்னேன்
அந்த பறவைப் பற்றி

நான்தான்
அந்த பறவை
அமர இடம் கிடைக்காததால்
மீனாகி
நீந்திக்கொண்டிருக்கிறேன்
எனச் சொல்லி
நீரைப் புன்னகைக்க வைத்தபடியே
மறைந்து போனது

இப்போது பார்க்க
கடலின் மேல்
எதுவுமில்லை


நடந்த போது
மனதின் இதத்தைப் போல
தொடங்கியது
மழை

மிச்ச நேரம்

பேஸ்புக்
ட்விட்டர்
வலைப்பக்கம்
இன்னபிற
இணைய தளங்களைத்
தாண்டி
மிஞ்சும் நேரம் கைப்பற்றி
அறை சிறையிலிருந்து
விடுபட்டு
காலாற நடந்து போய்
பார்த்து வர வேண்டும்
பனி பூத்த
புற்களையும்
நேசம் கலந்த
முகங்களையும்