கடைக்காரர்
துடைத்து வைத்த ஆப்பிளை
நீண்ட நேரமாகப்
பார்த்த குழந்தை
மெல்லப் போகிறாள்
அவள் கண்களிலிருக்கும் ஆப்பிள்
சுவையாக
நெஞ்சில் இறங்கிக் கொண்டிருக்கிறது
உங்கள் வன்மம்
கேட்டுக்கொண்டதற்கிணங்க
யாருக்கும் தெரியாதது போல்
சமயோஜிதமாக
தள்ளி உடைத்தீர்கள்
முதலில் மீன் தொட்டி
இறந்து போனது
இப்போது மீன்கள்
இறந்து கொண்டிருக்கின்றன
ஏன் பிரிந்தாய் சிறகிடம் கேட்டேன் நீந்திப் பழக என பதில் வந்தது ------- கால்களின் கீழே விரிந்து கிடக்கிறது கேள்வி கடந்து போனால் கண்டடையலாம் பதிலையும் என்னையும் -------- இந்தப் பூச்செடி தலை அசைத்து ஏதோ சொல்கிறது என்ன என்றுதான் தெரியவில்லை ----- உன்னைப் பார்க்க விரும்பவில்லை உணர விரும்புகிறேன் ---- பிறந்த பூனைக்குட்டி கண் விழிப்பதைப் போல என் சொற்கள் உன்னைப் பார்க்கின்றன ------ ரயில் போய்விட்டது தண்டவாளத்தில் ரத்தம் மின்னுகிறது தூரத்திலிருந்து ஆடு மேய்க்கும் சிறுமி சத்தமிட்டபடியே வேகமாக ஓடி வந்துகொண்டிருக்கிறாள் ------- வனமே உன்னைப் பாட ஒரு புல்லாங்குழல் கொடு போதும் ------ வளைந்து செல்லும் நீண்ட கோட்டை வரைந்து நதி என்கிறாள் குழந்தை இல்லை என்பது போல் பார்க்க அதிலிருந்து நீரள்ளி முகத்தில் தெளிக்கிறாள் ------ கிரீடம் நசுங்கிப் போய் துருபிடித்து விட்டது ஆனாலும் ராஜ ரோஷம் குறையவில்லை ------- கம்பியை கிளையாக்கியது அமர்ந்து போன பறவை ------ நான் ஓய்வெடுக்க விரும்பும் நாற்காலியை உங்களை யார் இப்போதே செய்யச் சொன்னது
அருகில் போய்
விலக்கி இருக்கலாம்
காப்பாற்றி இருக்கலாம்
ஏதேனும் செய்திருக்கலாம்
வன்மம் மோதி
மனிதம் சாய்ந்தது
என்ற வரியுடன்
தன் கடமையை
முடித்துக் கொண்டார்
ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்
நள்ளிரவில்
பீடி புகைத்தபடி
போஸ்டர் ஒட்டியவரிடம்
கேட்டேன்
படம் நல்லா இருக்குமா
பசையை பிசைந்தபடி சொன்னார்
படம் ஓடனா
அவுங்களுக்கு நல்லா இருக்கும்
வாழ்க்கை ஓடன
நமக்கு நல்லா இருக்கும்
பூங்கொத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்
வழியில் குழந்தை வாங்கிக்கொண்டது
வெறும் கையுடன் உன்னைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னேன்
குழந்தை போலச் சிரித்தாய்
அப்போது
நான் தந்தப் பூங்கொத்தை
அந்தக் குழந்தை
உன் கையில்
தந்து கொண்டிருந்தது
பார்க்காமல் போகிறார் பழைய நண்பர் அவர் கால்களில் இருப்பது தவிர்க்க நினைத்த வேகமா எதையோ தேடிய ஓட்டமா தெரியவில்லை நின்றிருக்கிறேன் நினைவின் வடுவைத் தடவியபடி
அப்பா சொன்னக் கதையில்
பாகன் யானையுடன்
நகரில் திரிந்து கொண்டிருந்தான்
குழந்தைச் சொன்னக் கதையில்
பாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்
யானைக் காட்டிற்குப் போய் விட்டது
மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்