Sunday, June 12, 2016

வானமும் தனிமையும்

நான் இருக்கும் 
இந்தச் சின்ன அறையை 
உங்கள் கையில் இருக்கும் 
மிகச் சிறிய பென்சிலால் 
மிக மிகக் குறைந்த நேரத்தில் 
நீங்கள் வரைந்து விடலாம்
அது குறித்து 
நீங்கள் பெருமைப்படத் 
தேவையில்லை 
இந்த அறையிலிருக்கும் 
வானமும் தனிமையும்
ஒருபோதும் 
உங்கள் கண்களுக்குத் 
தென்படப் போவதில்லை 


Sunday, May 22, 2016

ரயிலில் பாடிய சிறுவன்

ரயிலில் பாடிய சிறுவனை
தம்பி எனக்கூப்பிட்டு
பத்து ரூபாய் கொடுத்தேன்
தம்பி என்று
இன்னொரு முறை
சொல்லச் சொல்லி
கேட்டு விட்டு
பணத்தைக் கொடுத்துப்
போய் விட்டான்

Tuesday, May 17, 2016

வேறொரு கதை

கதை முடிந்து விட்டதா
நீங்கள் முடித்து விட்டீர்களா
கேட்டார்
அவர் கேள்வியில் தொடங்கிய
வேறொரு கதையை
முடித்த கதையில்
இணைக்கலாமா என
யோசித்துக்கொண்டிருந்தேன்


Saturday, May 14, 2016

எங்களுக்குத் தேவை

யாரோ ஒரு பெரியவர்
என் கைப் பிடித்து
அழைத்துப் போகச் சொல்கிறார்
நடுக்கத்துடன்

வழித் தெரியாமல்
தடுமாறி நிற்கும் நான்
அவரிடம்
இதை எப்படிச் சொல்வது

செய்வதறியாது
அவர் கையைப்
பற்றிக் கொள்கிறேன்

இப்போது
எங்களுக்குத் தேவை

சிறு அன்பு
சின்னப் புன்னகை
கொஞ்சம் உணவு
நிறைய நம்பிக்கை
ஒரு பாதை

Saturday, April 23, 2016

ஒரே அறையில்தான் இருந்தார்கள்

உண்மை மங்கலாகத் தெரிகிறது
பொய் தெளிவாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை தெளிவாகத் தெரிகிறது
பொய் மங்கலாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை உண்மையாகத் தெரிகிறது
பொய் பொய்யாகத் தெரிகிறது
என்றவரும்

ஒரே அறையில்தான்
இருந்தார்கள்






Monday, April 18, 2016

நந்தினியின் பொய்கள்

நந்தினியிடம்
ஒரு நாளைக்கு
எத்தனை பொய்கள் சொல்வாய்
என்றேன்

கணக்கில் வைத்துக்கொள்வதில்லை என்றாள்
புன்னகைத்தபடி

புன்னகையும் பொய்யா
என்றேன்

உதட்டைச் சுருக்கி
உற்றுப் பார்த்தாள்

Thursday, April 14, 2016

கண்களிலிருக்கும் ஆப்பிள்

கடைக்காரர்
துடைத்து வைத்த ஆப்பிளை
நீண்ட நேரமாகப்
பார்த்த குழந்தை
மெல்லப் போகிறாள்
அவள் கண்களிலிருக்கும் ஆப்பிள்
சுவையாக
நெஞ்சில் இறங்கிக் கொண்டிருக்கிறது

Monday, March 07, 2016

பொம்மையும் குழந்தையும்

குழந்தைக் கேட்ட
பொம்மை வாங்க
காசு இல்லை

பொம்மை மறக்க
வழி நெடுக
கதை சொல்லிக்கொண்டே
வருகிறார் அப்பா

உம் கொட்டுகிறது குழந்தை

கதை முடிந்து
நிம்மதி பெருமூச்சு விட்டு
அப்பா கேட்கிறார்

எப்பிடிம்மா கதை இருந்துது

குழந்தை சொல்கிறது

அப்பா இந்த கதைய
அந்த பொம்மைக்குச் சொல்ல்லாமா
போய் வாங்கிட்டு வரலாமா

Saturday, March 05, 2016

பாக்கியவான்கள்

தாளமிட்டு
வானம் பார்த்து
கை குவித்து
ஆடியபடியே
பெரு மழையில் நனையும்
பைத்தியக்காரன்
தன்னை நிறுத்தி
மூச்சிறைக்க
வேடிக்கைப் பார்ப்பவர்களைப்
பார்த்துச் சொன்னான்
என் கண்ணீரைப் பார்ப்பவர்கள்
பாக்கியவான்கள்

Thursday, February 04, 2016

பூ விற்கும் சிறுமி

ரயிலில்
பூ விற்கும் சிறுமியிடம்
இந்த ரயில் நீளத்திற்கு
பூ தர முடியுமா
எனக் கேட்டேன்

கால்களுக்கிடையில்
கூடையை
ஆடாமல் வைத்துவிட்டு
கைகளை அகல விரித்து
இவ்வளவு நீளமாவா

எனக் கேட்கிறாள்

Tuesday, January 26, 2016

அடுத்த நிகழ்ச்சியில்

தற்கொலைகளுக்கு
வருத்தம் தெரிவித்தார்கள்
இனியாவது
வரும்முன் காப்போம் என்று
விவாதத்தை முடித்தார்கள்
அடுத்த நிகழ்ச்சியில்
தொடங்கியது
ஆடல் பாடல்

Tuesday, December 22, 2015

தெரியவில்லை

வட்டத்தை 
ஏன் சதுரம் போல் 
வரைகிறீர்கள் என்றவரும்
சதுரத்தை 
ஏன் வட்டம் போல் 
பார்க்கிறீர்கள் என்றவரும் 
வடிவச் சிக்கலில் 
இருந்தார்களா 
மனச் சிக்கலில் 
இருந்தார்களா 

என்று தெரியவில்லை 

Thursday, December 10, 2015

இந்தக் காத்திருப்பில்

இந்தக் காத்திருப்பில்
பொறாமை உதிர்ந்தது
வன்மம் உதிர்ந்தது
தேவையில்லாமல்
அதுவாய் சேர்ந்து போன
அத்தனையும் உதிர்ந்தன
நானும் உதிர்ந்தேன்
புதிதானேன்

Wednesday, December 09, 2015

நினைவின் ஆழத்தில்

நினைவின் ஆழத்தில்
இந்தச் சொற்கள்
என்ன செய்யும்

தவம் செய்யும்

Sunday, November 22, 2015

பழுதான கடிகாரம்

அரசு பழுதாகி விட்டதா
அரசு இயந்திரம்
பழுதாகி விட்டதா
கேட்கிறார் ஒருவர்

அது அவர்களுக்குத்
தெரியுமா தெரியாதா
கேட்கிறார் இன்னொருவர்

கேட்டபடியே
நடக்கிறேன் நான்
பழுதான கடிகாரத்தில்
மணி பார்க்க முடியாமல்

Friday, November 06, 2015

உரையாடல்

பேசுவதில் தொடங்கி
மெளனத்தில் முடிகிறது
நல்ல உரையாடல்
என்றார் ஒருவர்

மெளனத்தில் தொடங்கி
பேச்சில் முடிகிறது
சிறந்த உரையாடல்
என்றார் இன்னொருவர்

மெளனத்தில் தொடங்கி
மெளனத்தில் முடிகிறது
அழகான உரையாடல்

என்றார் மற்றொருவர்

Tuesday, November 03, 2015

உங்களை யார் சொல்லச் சொன்னது

லாவகத்துடன்
விசிலடித்தபடி
புன்னகைச் சித்திரமாய்
சைக்கிள் ஓட்டிச் செல்லும் அவரை
நான் ரசித்துக் கொண்டிருக்கும் போது
அந்த முதியவருக்கு
வயது எண்பது என்று
உங்களை யார்
என்னிடம் வந்து

சொல்லச் சொன்னது

Saturday, October 31, 2015

சாத்தானிடம் வாங்கிய கடன்

சாத்தானிடம்
கடன் வாங்கியது
தப்பாய்ப் போயிற்று
கூட்டுத் தொகையை
மாற்றி மாற்றி
இன்னும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

Thursday, September 24, 2015

முதலில் மீன் தொட்டி இறந்து போனது

உங்கள் வன்மம்
கேட்டுக்கொண்டதற்கிணங்க
யாருக்கும் தெரியாதது போல்
சமயோஜிதமாக
தள்ளி உடைத்தீர்கள்
முதலில் மீன் தொட்டி
இறந்து போனது
இப்போது மீன்கள்
இறந்து கொண்டிருக்கின்றன

Tuesday, September 01, 2015

கனவில் வந்த வரிகள்

கனவில் வந்த வரிகளில்
பாடல் செய்தேன்
பாடியபடியே
உறங்கி விட்டேன்
விடிந்து எழுந்த பின்
சொற்கள் எதுவும்
நினைவில் இல்லை
இசை வடிவம் மட்டும்
அங்குமிங்குமாய்
கேட்டுக்கொண்டிருந்தது

Saturday, August 29, 2015

கருத்து

நீங்கள் முதலில்
சொன்னக் கருத்தும்
இப்போது
சொன்னக் கருத்தும்
முரண்படுகிறதே
கவனித்தீர்களா

கவலைப்படாதே
அடுத்துச் சொல்லப்போவதில்
அதைச் சரி செய்து விடலாம்

Monday, August 10, 2015

விரிந்து கிடக்கிறது கேள்வி

பறவையை விட்டு
ஏன் பிரிந்தாய்
சிறகிடம் கேட்டேன்
நீந்திப் பழக என
பதில் வந்தது
-------
கால்களின் கீழே
விரிந்து கிடக்கிறது கேள்வி
கடந்து போனால்
கண்டடையலாம்
பதிலையும் என்னையும்
--------
இந்தப் பூச்செடி
தலை அசைத்து
ஏதோ சொல்கிறது
என்ன என்றுதான்
தெரியவில்லை
-----
உன்னைப்
பார்க்க விரும்பவில்லை
உணர விரும்புகிறேன்
----
பிறந்த பூனைக்குட்டி
கண் விழிப்பதைப் போல
என் சொற்கள்
உன்னைப் பார்க்கின்றன
------
ரயில் போய்விட்டது
தண்டவாளத்தில்
ரத்தம் மின்னுகிறது
தூரத்திலிருந்து
ஆடு மேய்க்கும் சிறுமி
சத்தமிட்டபடியே
வேகமாக
ஓடி வந்துகொண்டிருக்கிறாள்
-------
வனமே
உன்னைப் பாட
ஒரு புல்லாங்குழல்
கொடு
போதும்
------
வளைந்து செல்லும்
நீண்ட கோட்டை
வரைந்து
நதி என்கிறாள் குழந்தை
இல்லை என்பது போல் பார்க்க
அதிலிருந்து நீரள்ளி
முகத்தில் தெளிக்கிறாள்
------
கிரீடம்
நசுங்கிப் போய்
துருபிடித்து விட்டது
ஆனாலும்
ராஜ ரோஷம்
குறையவில்லை
-------
கம்பியை
கிளையாக்கியது
அமர்ந்து போன பறவை
------
நான் ஓய்வெடுக்க விரும்பும்
நாற்காலியை
உங்களை யார்
இப்போதே
செய்யச் சொன்னது

-குங்குமம் இதழில் (10.8.2015) வெளியானது-

Sunday, July 19, 2015

எனது பிரார்த்தனை

கதை படிக்கும் முதியவரை
வரைந்து காட்டுகிறாள் குழந்தை
எனது பிரார்த்தனை எல்லாம்
அவர் இறந்து போவதற்குள்
அந்தப் புத்தகத்தை
படித்து விட வேண்டும்
என்பதுதான்

அம்மணமாக ஓடுகிறான்

அம்மணமாக ஓடுகிறான்
பைத்தியக்காரன் என்றவர்கள்
வேடிக்கைப் பார்த்தார்கள்
அம்மணமாக ஓடுகிறான்
மனிதன் என்றவர்
ஆடை கொடுக்க
ஓடிக்கொண்டிருந்தார்

Wednesday, July 15, 2015

அருகில்...

அருகில் போய்
விலக்கி இருக்கலாம்
காப்பாற்றி இருக்கலாம்
ஏதேனும் செய்திருக்கலாம்
வன்மம் மோதி
மனிதம் சாய்ந்தது
என்ற வரியுடன்
தன் கடமையை
முடித்துக் கொண்டார்

Tuesday, July 14, 2015

தற்கொலைக் கவிதை

தண்டவாளத்தில்
தலை வைத்து
அவன் தற்கொலைக் கவிதையை
யோசித்துக்கொண்டிருந்தான்

Sunday, May 31, 2015

வியூகங்கள்

பாதைகளை
மாற்றி வைக்கிறீர்கள்
வியூகங்களால்
வந்தடைகிறேன் 

Saturday, May 16, 2015

ரயில்

ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்

Monday, April 27, 2015

என்னைப் பார்த்து

என்னைப் பார்த்து
கருணையோடு
புன்னகைக்கும் பெண்ணுக்கு
பார்வை இல்லை என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஒப்புக்கொள்ள முடியாது

Tuesday, April 21, 2015

எப்படி கிடைத்தாய்?

ஒரு முறை
தான் தொலைந்து போனதை
சொன்னாள் சிறுமி மன்யா

எப்படி கிடைத்தாய்?
கேட்டேன்

நானே கண்டுபிடித்து
வந்து விட்டேன்
என்று சொன்னாள்
ஆச்சரியமாக

Wednesday, April 15, 2015

நள்ளிரவில்

நள்ளிரவில்
பீடி புகைத்தபடி
போஸ்டர் ஒட்டியவரிடம்
கேட்டேன்
படம் நல்லா இருக்குமா
பசையை பிசைந்தபடி சொன்னார்
படம் ஓடனா
அவுங்களுக்கு நல்லா இருக்கும்
வாழ்க்கை ஓடன
நமக்கு நல்லா இருக்கும்

Tuesday, April 14, 2015

உணராமல் போனோம்

பேசத்தான் வந்தோம்
பேசினோம்
பிரிந்துப் போனோம்
மீதி இருக்கும்
இந்தச் சொற்களில்தான்
உண்மையான உரையாடல்
இருந்தது என்பதை
ஒருவரும்
உணராமல் போனோம்

Friday, April 03, 2015

மூன்று பொம்மைகள்

மிகப்பெரிய பொம்மையை
கேட்கிறாள் குழந்தை
மிகச்சிறிய பொம்மையை
எடுக்கிறார் அப்பா
இரண்டுக்கும் நடுவில்
இருக்கும் பொம்மையை
பார்க்கிறாள் அம்மா

Thursday, March 26, 2015

வண்ணங்கள் களைப்படையும் போது


வரைந்து முடித்து 
விழித்திருக்கும் சிங்கம் 
என்று பெயர் வைத்தாள் மான்யா

உன் சிங்கம் 
எப்போது உறங்கும் 
கேட்டேன் 

உடனே சொன்னாள் 
வண்ணங்கள் 
களைப்படையும் போது

Sunday, March 22, 2015

சுவர்

நீ ஒரு 
கல் வைத்தாய் 
நான் ஒரு 
கல் வைத்தேன் 
நமக்கிடையே 
ஒரு சுவரை 
உருவாக்கிக் கொண்டோம்

Wednesday, March 18, 2015

இருந்தது

என் ஸ்வெட்டரைப் பார்த்த
பெரியவரின் கண்களில்
நடுக்கம் இருந்தது

நடந்தேன்

இப்போது என்னிடம்
நடுக்கம் இருந்தது

பெரியவரிடம்
ஸ்வெட்டர் இருந்தது

Tuesday, March 10, 2015

கதாபாத்திரங்கள்

மது அருந்திக்கொண்டிருந்தனர் 
கதாபாத்திரங்கள் 
எனக்குக் கொஞ்சம் 
கிடைக்குமா 
கேட்டேன் 
எழுத்தின் போதை 
போதும் உனக்கு 
எனச் சொல்லி 
கதவடைத்துக் கொண்டனர்

Saturday, March 07, 2015

கூடு

கூடு விட்டு
கூடு பாயும்
ஒருவரை சந்தித்தேன்
இப்போது
எந்த கூடு என்றேன்
இதற்கு பதில்
சொல்வதற்குள்
மாறி இருக்கலாம்
கேள்வியைத்
தவிர்த்து விடலாமே என்றார்











Thursday, March 05, 2015

பூங்கொத்து

பூங்கொத்து வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்
வழியில் குழந்தை வாங்கிக்கொண்டது
வெறும் கையுடன் உன்னைச் சந்தித்து
விஷயத்தைச் சொன்னேன்
குழந்தை போலச் சிரித்தாய்
அப்போது
நான் தந்தப் பூங்கொத்தை
அந்தக் குழந்தை
உன் கையில்
தந்து கொண்டிருந்தது

Wednesday, March 04, 2015

பிரியமும் விஷமும்

வேறு வழியின்றி
உன்னைக் கொல்ல
வந்திருக்கிறேன்
தேநீர் தருகிறாய்
உன் கண்களைப் பார்த்தபடி
அருந்துகிறேன்
உன்னைப் காப்பாற்ற
நீ தந்த
பிரியமும் விஷமும் கலந்த
இந்த தேநீரை
நான் அருந்திதான் ஆகவேண்டும்

Thursday, February 19, 2015

பிரபஞ்சத்திலிருந்து

பூ வரைந்தாள் மான்யா 
வாசம் 
வண்ணத்திலிருந்து வருகிறதா 
ஓவியத்திலிருந்து வருகிறதா
கேட்டேன் 
பிரபஞ்சத்திலிருந்து 
பதில் சொன்னாள்

Friday, February 13, 2015

வழியில்

வரும் வழியில்
முடிவை
மாற்றிக் கொண்டிருந்தால்
வாழ வழி இருந்திருக்கும்
விழும் வழியில்
அது தோன்றியதால்
முடியாமல் போயிற்று

Tuesday, February 10, 2015

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

நம்மிருவருக்கும் 
ஒரே பெயர் 
என் பெயரில் 
ஈக்கள் மொய்க்கின்றன 
விரட்டி விடுகிறீர்கள் 
உங்கள் பெயரில் 
பட்டாம்பூச்சி அமர்ந்திருக்கிறது 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்

Monday, February 09, 2015

அழைத்து வருகிறேன்

கிளை போல்
கிழித்தக் கோட்டில்
ஒரு பறவை வந்தமர்ந்த்து

கண் துளிர்க்கப்
பார்த்துக்கொண்டிருந்தேன்

மரம் வரை
மற்ற நண்பர்களை
அழைத்து வருகிறேன் என்று
சொல்லிவிட்டுப் போனது

Monday, February 02, 2015

பயணித்தல்

பயணிப்பது 
சுகமானதாக இருக்கிறது 
என்ற வரி 
என்னிடமிருந்தது 

நின்றுகொண்டே பயணிப்பது 
கடுமையானதாக இருக்கிறது 
என்ற வரி 
அவரிடமிருந்தது

ஒரு சீட் காலியாக 
அவரை அமரச் சொன்னேன்

இப்போது 
என் வரிக்கு 
அவர் மாறக்கூடும்

Tuesday, January 27, 2015

சாலை ஓவியக்காரன்

நேரங்களும் 
வண்ணமாய் கரைய 
சாலை ஓவியக்காரன் 
வரைந்து முடித்தான் 
அவன் முடித்த கணம் 
மழை பெய்தது 
எல்லோரும் ஓடிப்போய் 
ஒதுங்கி நின்றார்கள் 
ஓவியத்தை 
எடுத்துச் செல்ல முடியாமல் 
நனைந்தபடியே 
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்

Thursday, January 15, 2015

சந்திக்கும் புள்ளியில்

அறியாமையும் அறிவும் 
சந்திக்கும் புள்ளியில் 
நீங்கள் என்னையும் சந்திக்கலாம் 
உங்களையும் சந்திக்கலாம்

ஒற்றைச் செருப்பு

ஒற்றைச் செருப்பை
கையில் மாட்டியபடி
சிரித்துப் போகும் அவனை
பைத்தியக்காரன் என்றார்கள்
நான் இன்னொரு செருப்பைத்
தேடிப்போகும்
மனிதன் என்றேன்

Tuesday, January 13, 2015

மலைப் பிரசங்கம்

1-
உன் மலைப் பிரசங்கம் கேட்க 
ஓடி வரும் நான் 
மந்தையிலிருந்து 
பிரிந்த ஆடு

2-
மேஜையின் மேல் 
நீ வைத்துவிட்டுப் போன 
கண்ணீர்த்துளி 
இன்னும் காயாமல் 
என் பதிலுக்காக 
காத்திருக்கிறது

3-
என் கையிலிருந்த 
சுடரை 
அணைத்து விட்டீர்கள் 
என்னை அணைக்கப் 
போராடுகிறீர்கள்

4-
ஆண்டாண்டு காலமாய் 
முரசை அறைகிறீர்கள் 
ஆனாலும் உங்களுக்கு 
சத்தம் எழுப்பத் தெரியவில்லை

5-
நீங்கள் திருத்திய கதை 
நான் யோசித்த 
கதை அல்ல

6-
வரிசையில் 
காத்திருக்கிறேன் 
வரிசையும் 
காத்திருக்கிறது 

Tuesday, January 06, 2015

மூன்று கவிதைகள்

1-
முடிந்த மழை 
தூறலில் 
முகம் காட்டும்

2-
நகர்ந்து நகர்ந்து 
ஓவியமாகப் பார்க்கிறது புகை 
ஓவியமாகப் பார்க்கிறேன் நான்

3-
இருளில் 
என்னைக் கண்டெடுத்தேன் 
வெளிச்சத்தில் 
தொலைத்து விட்டேன்

Monday, January 05, 2015

அழைத்துப் போகிறேன்

சொற்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
வாக்கியங்கள் உன்னை 
அழைத்துப் போகிறதா 
எதுவுமில்லை 
நான்தான் என்னை 
அழைத்துப் போகிறேன்

Sunday, January 04, 2015

உறங்கும் வட்டம்

உடல் குவித்து
மையத்தில்
உறங்கிக் கொண்டிருந்தது வட்டம்
மறுபடி வந்து
பார்த்துக் கொள்ளலாம் என்று
எழுப்பாமல் வந்து விட்டேன்

Thursday, January 01, 2015

நிசப்த தவம்

சொற்களை கற்பூரமாக்கி 
நாவின் மேல் வைத்து 
ஏற்றுகிறேன் 
அசைந்து முடிகிறது 
சுடர் 
இனி நான் 
போகலாம் 

சரியாக கேட்கவில்லை

நன்றாக காற்று வரும்படி
மின்விசிறி உள்ள அறை
வேண்டும் என்று
அவன் சொன்னதை
அவர்கள் அப்போது
சரியாக கேட்கவில்லை
காலையில்தான்
புரிந்து கொண்டார்கள் 

Monday, December 29, 2014

எனக்கும்

இறந்து போன 
தாயின் மடியிலேயே 
நீணட நேரமாக 
அழுது கொண்டிருக்கிறது குழந்தை 
யாராவது போய் 
குழந்தையைத் தூக்குங்கள் 
அப்படியே வந்து 
எழுதிய எனக்கும் 
ஆறுதல் சொல்லுங்கள்

Thursday, December 25, 2014

ஒற்றை வரி

எழுதிய ஒற்றை வரியை 
ஊதி 
நூலாக்கி விட்டேன் 
இந்த முனையை 
நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 
எதிர் முனை 
வானத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, December 24, 2014

ஏழு நிமிடங்கள்

ஏழு நிமிடங்கள் 
அந்தக் கயிறுடன் 
அவன் பேசிக் கொண்டிருந்தான் 

எட்டு 
ஒன்பது 
பத்து 

இந்த நிமிடத்தில் 
அந்தக் கயிறு பற்றிய தகவலை 
உங்களுக்குச் சொல்ல வேண்டியது 
அவசியமாகிறது 

அது 
தற்கொலைக் கயிறு 

Sunday, December 21, 2014

பழைய நண்பர்

பார்க்காமல் போகிறார் 
பழைய நண்பர்
அவர் கால்களில் இருப்பது 
தவிர்க்க நினைத்த வேகமா 
எதையோ தேடிய ஓட்டமா 
தெரியவில்லை
நின்றிருக்கிறேன்
நினைவின் வடுவைத்
தடவியபடி

Saturday, December 20, 2014

அவருடன்

கைத்தட்டிக் கூப்பிட்டவர்
அவரை என்றார்
உங்கள் கைத்தட்டலில்
என் பெயர் இருந்ததால்
திரும்பி விட்டேன் என்றேன்
சிரித்தபடி கடந்து போனார்
அவருடன் 

குரூரத்தின் குருதி

நீங்கள் சுட்டப் பறவை 
என் கையில் 
விழுந்திருக்கிறது 
வழிகிறது 
பறவையின் குருதி 
என்று என்னால் எளிதாக 
சொல்ல முடியவில்லை 
உங்கள் குரூரத்தின் குருதி 
என்று சொல்லாமல் 
இருக்கவும் முடியவில்லை

Tuesday, December 16, 2014

எப்போதும் போல்

துயரம் போல் 
பெய்கிறது மழை
என்றவரும் 
சந்தோஷம் போல் 
பெய்கிறது மழை 
என்றவரும் 
எதிரெதிர் மாடியிலிருந்து 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
எப்போதும் போல்
பெய்து கொண்டிருந்தது மழை

Saturday, December 13, 2014

உங்களால் முடியுமா

கைகோர்த்து வந்தவன் 
உன் கழுத்தை 
நெரிக்கப் போகிறேன் என்றான் 

உங்களால் முடியுமா 
என்றேன் 

என் பிரேதத்தைத் தாண்டி 
இன்னொருவன் கைகோர்த்தபடி 
போய்க்கொண்டிருந்தான் 

Thursday, December 11, 2014

குழந்தைச் சொன்னக் கதை

அப்பா சொன்னக் கதையில்
பாகன் யானையுடன்
நகரில் திரிந்து கொண்டிருந்தான்
குழந்தைச் சொன்னக் கதையில்
பாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்
யானைக் காட்டிற்குப் போய் விட்டது

Wednesday, November 26, 2014

வனம்

தன் வனத்திற்கு 
வரச் சொல்கிறது 
வரைந்த பட்டாம்பூச்சி 
தன் அறைக்கு 
வரச் சொல்கிறாள் 
வரைந்த குழந்தை

Sunday, November 23, 2014

தண்டவாளம் பக்கத்தில்

அவளே கேள்விக் கேட்டு
அவளே பதிலும் சொன்னாள்

பட்டாம்பூச்சியின் மேல்
ரயில் மோதினால்
என்னாகும்

உயிர் பறந்துப் போகும்

மறுநாள் காலை
தண்டவாளம் பக்கத்தில்
அவள் சடலம் கிடந்தது

அவளைச் சுற்றி
பறந்துக் கொண்டிருந்தன
பட்டாம்பூச்சிகள்

Saturday, November 15, 2014

குட்டிப் பூனை

குட்டிப் பூனை 
உன்னைப் பார்க்க வந்துது 
நீ சத்தம் போட்டதால் 
ஓடிப் போனது 
கீழ்வீட்டுக் குழந்தையிடம் 
விளையாட்டாகச் சொன்னேன் 
பூனைக்காகக் காத்திருக்கிறாள் 
அமைதியாக

Thursday, November 13, 2014

ஒளி வட்டம்

தலைக்குப் பின்னால்
அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக் கொண்டார்
அவருக்குத் தெரிந்த
ஒளி வட்டம்
மற்றவர்களுக்குத் தெரியவில்லை

Wednesday, November 12, 2014

சொல்/வாக்கியம்

நிற்கும் போது நான் 
சொல் 
சொல்லிப் பாருங்கள் 
நடக்கும் போது நான் 
வாக்கியம் 
படித்துப் பாருங்கள்

மறந்துப் போய் விட்டது

காத்திருப்பது மட்டுமே
மனதில் உள்ளது
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

கதையில் எரிந்த மெழுகுவத்தி

கதையில் எரிந்த 
மெழுகுவத்தியை 
ஊதி அணைத்தேன் 
வார்த்தைகளில் வழிந்து 
பக்கங்களைப் 
படிக்க முடியாமல் 
செய்து விட்டது

Thursday, November 06, 2014

காயத்தின் நிழலில்

காயத்தின் நிழலில் 
வலி இளைப்பாறும் 
என்று எழுதிய வரியை 
மருந்தாக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
வலிக்கவே செய்கிறது 

பைத்தியக்காரனின் பிரியம்

மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Saturday, November 01, 2014

யாரேனும் சொல்லுங்கள்

தற்கொலைக்கு ஓடுபவனை
எதற்குக் கொலை செய்ய
ஓடுகிறீர்கள்
என்ற வரியில் இருப்பவன்
என்ன ஆவான்
யாரேனும் சொல்லுங்கள்