Thursday, May 29, 2014

ஒரு சித்திரம்

அந்த மின்விசிறி
அவளுக்கு மிகவும் பிடிக்கும்

அதை ஒரு
தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்

அது தரும் காற்று
தன்னோடு பேசுவது போல உணர்வாள்

பெஞ்ச் மேல் ஏறி நின்று
குதிகால் தூக்கி
எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல
அதை அழகாய் துடைப்பாள்

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்

குளிர் காலத்தில்
மின் விசிறி ஓய்வெடுக்கும்

ஓடாத அதன் மெளனம்
அவளை நிம்மதி
இழக்கச் செய்யும்

ஒரு முறை பழுதடைய
உடனே போன் செய்து
எலக்ட்ரீஷியனை
வர வைத்து
சரி செய்து
ஓடியவுடன்
முகம் துடைத்து
பெருமூச்சு விட்டாள்

கனவில் வரும் அம்மாவின்
கை விசிறி போல
இதன் மீதும்
அவளுக்குப் பிரியம் அதிகம்

மின்விசிறிப் பற்றி
சின்ன சின்ன கவிதைகளை
எழுதி வைத்திருக்கிறாள்

உன் காற்றைப் போல
நானும் மறைந்து போவேன்
என்ற வரியை
ஆழமாய் முணுமுணுத்தபடியே
ஒரு மழை இரவில்
அந்த மின்விசிறியில்
தொங்கிப் போனாள்



Wednesday, May 28, 2014

சொற்கள்

சொற்கள்
பாதையானதா
வாக்கியமானதா
வாக்கியத்திடம் கேட்டேன்
பாதை என்றது
பாதையிடம்  கேட்டேன்
வாக்கியம் என்றது 

Tuesday, May 27, 2014

சாய்ந்திருக்கும் சைக்கிள்

சுவரில்
சாய்ந்திருக்கும் சைக்கிள்
ஓவியம் போலிருக்கிறது
விட்டவர் வந்து
எடுத்துப் போக
எனக்கும் சுவருக்கும்
தேவைப்படுகிறது
வேறொரு ஓவியம்

Monday, May 26, 2014

இந்த அறையில்

இந்த அறையில் 
நீங்கள் என்னோடு 
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் 
ஆனாலும் ஒளிந்திருந்து 
வேறு எதையோ 
கேட்கவும் பார்க்கிறீர்கள்

Wednesday, May 21, 2014

சாம்பல்

மின் மயானத்தின் 
வெளியே 
காத்திருந்த போது 
என் உள்ளங்கையில் 
கொதித்து அடங்கியது
என் சாம்பல்

பொய்கள்

கதவடைக்கப்பட்ட அறையில் 
எல்லா நாற்காலிகளிலும் 
பொய்கள் அமர்ந்திருந்தன 
நின்றிருக்க விரும்பாமல் 
சாவி துவாரத்தின் வழியே 
உண்மை வெளியேறியது

Monday, May 19, 2014

பெரு வனம்

மகா கற்பனையில் 
ஒரு பெரு வனத்தை 
உருவாக்குகிறீர்கள் 
துளி ஒளி கூட 
விழாத வனம் அது 
அதனுள் போகிறீர்கள் 
ஏதாவது விலங்குகளால் 
வேட்டையாடப்படுவோம் 
என்று பயப்படுகிறீர்கள் 
பெயர் தெரியாத 
விலங்கொன்று அடிக்க 
இறந்து போகிறீர்கள் 

விழித்திருப்பவன்

விழித்திருப்பவன்
இரவை ஒரு
சிகிரெட்டைப் போல
பிடித்துக் கொண்டிருக்கிறான்
என்ற வரியை
நள்ளிரவில் தொடங்குகிறேன்
விடியலைக் கீறி
வெளிவரப் பார்க்கின்றன

மற்ற வரிகள்

Thursday, May 15, 2014

உள்ளே என்ன நடக்கிறது

உள்ளே என்ன நடக்கிறது
என்ற வரியை
வைத்துக் கொண்டு
நீண்ட நேரமாக
வெளியில் இருக்கிறேன்
உள்ளே செல்ல முடியாமல்

மலையின் கருணை

மலை உச்சி 
சொன்னது 
உன் தற்கொலையின் 
ஆழத்திற்கு 
என்னைக் கொண்டு போகப் 
பார்க்கிறாயே 
மலையின் கருணைக்கு 
நன்றி சொல்லி விட்டு 
இறங்கிப் போனான்

Wednesday, May 14, 2014

சரியான நதிகள்

மீன் தொட்டியிலிருந்து 
கடலுக்குப் 
போகும் வழியில் 
சரியான நதிகள் 
இருக்க வேண்டும் என்று 
வேண்டிக் கொள்கின்றன மீன்கள்

Tuesday, May 13, 2014

புகை

நான் புகை 
சித்திர தரிசனம் 
எனக்கில்லை

கதையிலிருந்த பாறை

கதையிலிருந்த பாறையை 
எல்லோரும் 
தள்ளிக் கொண்டிருந்தார்கள் 
பக்கங்களில் 
பறந்து கொண்டிருந்த 
பட்டாம் பூச்சி 
தூக்கிக் கொண்டு 
போய் விட்டது

Saturday, May 10, 2014

கல் புத்தகம்

எனக்குள் சிலைகள் 
எதுவுமில்லை 
நான் கல் புத்தகம்
வேண்டுமானல்
நீங்கள் படிக்கலாம் 
என்றது பாறை 
எப்படி புரட்டிப் படிப்பது 
என்று யோசித்தபடி 
பார்த்துக் கொண்டிருந்தேன்

Tuesday, May 06, 2014

பறந்து கொண்டிருக்கிறேன்

என்னிடம் 
அதிகமான ஆச்சரியக் குறிகள் 
இருக்கின்றன
உங்களிடம் 
அதிகமான கேள்விக் குறிகள் 
இருக்கின்றன
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

Saturday, May 03, 2014

நேற்றைய புன்னகை

நேற்றைய 
என் புன்னகை 
இன்றும் கிடைக்குமென்று 
வந்திருக்கிறீர்கள்
என் உதட்டில் 
கம்பளிப் பூச்சி 
ஊர்ந்து கொண்டிருப்பதைப் 
பார்க்கிறீர்கள்
என்ன சொல்வதென்று 
தெரியாமல் 
அவஸ்தையுடன் புன்னகைத்துப் 
போகிறீர்கள்

Tuesday, April 29, 2014

அவர்களுக்குத் தெரியாமல்

நமக்குத் தெரிந்தே 
நாம் திருடினோம் 
அதை அவர்களுக்குத் தெரியாமல் 
பார்த்துக் கொண்டோம்

Monday, April 28, 2014

ஒரே கிரீடம்

நாம் எல்லோரும் 
ராஜாக்கள் 
ஒரே கிரீடத்தை 
மாறி மாறி 
அணிந்து கொள்கிறோம் 
என்றார் நண்பர் 
ராஜ புன்னகையுடன் 
அப்போது கிரீடம் 
அவர் தலையில் இருந்தது 

ஆராதனை மனது

உங்களுக்கு 
ஆராதனை மனது 
சரிதான் 
அதற்காக 
கற்பூரமாக மாறியது 
தவறு 
தட்டில் எரிந்து கொண்டிருக்கிறீர்கள்


                                              

Friday, April 25, 2014

என் முகமூடி

என் முகமூடியை 
நீங்கள் அணிந்திருக்கிறீர்கள் 
வெறும் முகத்துடன் 
பேசுவது 
எனக்கு கடினமாக இருக்கிறது

உடலெங்கும் அம்புகள்

உடலெங்கும் அம்புகள் 
தைத்துக் கிடக்கின்றன 
ஒவ்வொன்றாய் 
எடுத்துப் போடுகிறேன் 
உதிரம் பாய்ந்த நிழல் 
நிமிர்ந்து நிற்கப் பார்க்கிறது 

Tuesday, April 22, 2014

சொற்கள்

துள்ளிக் குதிக்கும் 
மீன்கள் சொல்கின்றன 
நாங்கள் 
கடலின் சொற்கள் 

சேதி கேட்ட கண்ணீர்

இறந்தவனை 
தொலைந்து போனதாக 
அறிவிக்கிறார்கள் 
தொலைந்தவனை 
இறந்து போனதாக 
அறிவிக்கிறார்கள் 
செய்வதறியாது நிற்கிறது 
சேதி கேட்ட கண்ணீர் 

Monday, April 21, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1101-
அவரவர் கோணத்தில் 
சரியாக இருந்தது 
மொத்தத்தில் எங்கோ 
தவறு இருந்தது

1102-
வாடகைக்கு 
வார்த்தைகள் கிடைக்கும் 
என்ற குறிப்பு 
அவர் கண்களில் இருந்தது 
அருகில் போய் பேச 
தயக்கமாக இருந்தது 

1103-
வாடகைக்கு 
வார்த்தைகள் கிடைக்கும் 
என்ற குறிப்பு 
அவர் கண்களில் இருந்தது 
அருகில் போய் பேச 
தயக்கமாக இருந்தது 

1104-
புரண்டு படுக்கிறீர்கள்
வாய்ப்பு 
கை மாறிச் செல்கிறது

1105-
வண்ணங்களை 
வீசுகிறது கனவு 
வழியும் நிறங்களில் 
ஒன்றிரண்டு 
ஓவியமாகக்  கூடும்

1106-
நான் பிழைகளால் 
உருவானவன்
நீங்கள் என்னை 
திருத்தினால் 
நான் சிதைந்து விடலாம்

1107-
கதைப்படி 
இந்த காட்சியில் 
நீங்கள் இறந்து போக வேண்டும் 
கதையைக் கொன்று 
நீங்கள் வாழப் பார்க்கிறீர்கள்

1108-
பயணத் தனிமை 
எனக்கில்லை
சொற்கள் இருக்கின்றன 

1109-
புறக்கண்ணுக்கும் 
புலப்படவில்லை 
அகக்கண்ணுக்கும் 
அகப்படவில்லை 
எங்கிருக்கிறேன் 
தெரியவில்லை

1110-

பயத்தைப் புகட்டுகிறார்கள்
தைரியமாய் 
துப்பி விடுங்கள்













Sunday, April 20, 2014

முடிந்து விட்டது

தற்கொலையை
காட்சியைப் போல
நடத்த
திட்டமிட்டான்
திரை விழுவது போல
முடிந்து விட்டது 

Friday, April 18, 2014

சொல்லிக்கொண்டே இருந்தான்

மதுக்கோப்பையில் 
கண்ணீர்துளிகள் 
மிதந்து கொண்டிருப்பதை 
அவன் எதேச்சையாக கண்டான் 
அது பிரமை என்று 
குடித்து முடிக்கும் வரை 
தனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தான்

அதற்கு முன்பே

என் குரல் வளை இறுக்கி 
என்னை கொன்றீர்கள் 
அதற்கு முன்பே 
என் சொற்கள் 
வெளியேறி இருந்தன

Monday, April 14, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1095-
 அது மலையல்ல 
நீங்கள் 
நகர்த்தி சேர்த்த 
பொய்கள்
 1096-
 தூது வந்த புறா 
ஆயுதத்தின் மேல் 
அமர்ந்திருக்கிறது

 1097-

மேல் நீந்தும் 
மீனானேன் 
ஆழம் போய் 
நீரானேன்

1098-

சாவி துவாரத்தின் வழியே 
பார்க்கும் போது 
சாவிதுவாரமும் 
சேர்ந்து பார்க்கிறது

1099-

கனவுகளில் 
அறைந்து கொள்கிறேன் 
வேண்டாம் சிலுவை

1100-


நினைவுகளே 
பரமபதம் 
பாம்பு 
ஏணி 
எல்லாம் 
ஆடத்தான் வேண்டும்


யாராவது ஒருவர்

யாராவது ஒருவர் 
உண்மை பேசுவார்கள் 
என்ற எதிர்பார்ப்பில் 
அறையிலிருந்த எல்லோரும் 
பொய் பேசிக் கொண்டிருந்தார்கள் 

இசை

கொஞ்சம் காற்றும் 
துளைகளை 
மூடித் திறக்கும் 
விரல்களும்தான் 
என்னுடையது 
இசை பிரபஞ்சத்தினுடையது 
புல்லாங்குழல் வாசித்த 
கலைஞன் சொன்னான்

Sunday, April 13, 2014

ஒவ்வொரு முறையும்

நீ இவ்வளவு
பொய் சொல்வாய்
என்று தெரிந்திருந்தால்
நான் பேசி இருக்க மாட்டேன்
நாக்கு சொன்னது

ஒவ்வொரு முறையும்
இதையே சொல்கிறாய்
தோற்றுப் போகிறாய்
மனம் சொன்னது

Friday, April 11, 2014

உச்சியிலிருந்து

மலை உச்சியிலிருந்து 
விசிலடித்தபடி 
இறங்கி வருவதைப் போல 
கற்பனை  செய்து கொள்கிறேன் 
அது இப்போது
ஏறுவதை 
இலேசாக்கிக் கொண்டிருக்கிறது 

வெளிச்சம்

தாளில் வெளிச்சம் 
எழுதுவதைப் போல 
வெளிச்சத்தை என்னால் 
எழுத முடிவதில்லை 

Thursday, April 10, 2014

பாம்பைப் பற்றிய கவிதை

பாம்பைப் பற்றி
எழுதிய கவிதையில்
விஷம் இருந்தது
அது பாம்பின் விஷமா
என் விஷமா
தெரியவில்லை

Wednesday, April 09, 2014

பனித்துளிக் கண்கள்

புல் தன்
பனித்துளிக் கண்களால் 
மொத்த வனத்தையும்
பார்க்க நினைத்தது 
அதற்குள் காட்சி 
மறைந்து போனது 

Monday, April 07, 2014

நேரம்

பழுதடைந்த கடிகாரத்தில்
நேரம் பார்க்கிறான்
அவனுக்கு சரியாய் காட்டுகிறது
மற்றவர்களுக்கு
அவனை தப்பாய் காட்டுகிறது 

Sunday, March 30, 2014

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்

நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள்
உங்கள் கண்களிலிருந்து 
சைத்தான் வெளியே வந்து 
எட்டிப் பார்த்து 
வெறுப்பைத் துப்பி 
கதவடைத்துப் போகிறது 
நீங்கள் அங்கேயேதான் இருக்கிறீர்கள் 
இப்போது இன்னும் கொஞ்சம் 
சுகமாய் சாய்ந்து 
காது குடைந்தபடி

Wednesday, March 26, 2014

இடையில் இருக்கும் கதை

நான் சொன்ன கதைக்கும் 
நீங்கள் கேட்ட கதைக்கும் 
இடையில் இருக்கும் கதை 
நம் இருவருக்கும் 
தெரியாத கதை 

Tuesday, March 25, 2014

நதியில்

நதியில் 
மிதந்து போகும் நதியை 
எவ்வளவு பேர் 
பார்த்திருக்கக்கூடும் 

இறந்து கிடந்தேன்

எல்லா கனவுகளையும் 
வரிசையாய் 
நிற்க வைத்து 
ஒவ்வொன்றாய் 
சுட்டுக் கொன்றேன் 
கடைசியில் நானும் 
இறந்து கிடந்தேன் 

விளிம்பு நோக்கி

இந்த முறையும் விழவில்லை விளிம்பிலிருந்து திரும்புகிறேன் என்றாலும் மீண்டும் விளிம்பு நோக்கிப் போகிறேன்

Friday, March 21, 2014

வரும் வழியில்

வரும் வழியில்
யானையையும் பாகனையும் 
பார்த்தேன்
பாகனை என் பக்கத்தில் வந்து 
நிற்கச் சொன்னேன்
யானையைச் சுற்றி 
ஒரு காடு வரைந்தேன்
யானை தும்பிக்கை நீட்டி 
என்னைத் தொட்டு விட்டு 
காட்டில் ஓடி மறைந்தது
பாகனை ஒரு கடையில் 
வேலைக்கு சேர்த்து விட்டேன்
அங்கு அவன்சந்தோஷமாய் 
யானை பொம்மைகள் 
விற்றுக் கொண்டிருக்கிறான்

Tuesday, March 18, 2014

இரண்டும் சரி

அலைகள் குழந்தையுடன் 
விளையாடுகின்றன 
என்கிறார் அப்பா 

குழந்தை அலைகளுடன் 
விளையாடுகிறது 
என்கிறாள் அம்மா 

இரண்டும் சரி 
என்கிறது கடல்

குருதியை மட்டும்

எல்லா வண்ணங்களையும் 
உடனே எடுத்துக்கொண்டு 
தூரிகை வரைகிறது 
குருதியை மட்டும் 
கொஞ்சம் உணவாக 
உட்கொள்கிறது

ஓடுகிறீர்கள்

அழகாக வருடிக் கொடுக்கிறீர்கள் 
அந்த சுகத்தில் லயித்தபடியே 
குற்றவாளி தப்பித்து விடுகிறான் 
பிறகு பதறி அடித்துக்கொண்டு 
காவல் நிலையம் ஓடுகிறீர்கள் 
புகார் கொடுக்க

Sunday, March 16, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1089-
இப்படித்தான் 
புதைந்து போயின 
எத்தனையோ சொற்கள் 
முளைக்குமென்று 
காத்திருக்கிறேன் 
நீரூற்றி

1090-
என்னைத் தேடி 
வந்தேன் 
வருகிறேன் 
வந்துகொண்டிருப்பேன் 

1091-
கண்ணீரில் 
வழிவது 
தப்பித்த கனவா

1092-
ஆசை மறந்தால் 
நிம்மதியாக வாழலாம் 
என்றார் குரு 

நிம்மதிதான் 
என் ஆசை 
என்றான் அவன் 

1093-
குழந்தை எறிந்த பந்து 
முடிவிலி நோக்கிப் போகிறது 
எடுக்க ஓடுகிறாள் 
வளர்ந்து கொண்டே

1094-
தந்திரம் பழக
அன்பு 
வெளியேறும்



Saturday, March 15, 2014

இரண்டு குழி

இந்த கோபத்தை 
வைத்துக்கொண்டு 
ஒன்றும் செய்ய முடியாது 
ஆழக்குழி பறித்து 
அதில் போட்டு மூடு என்று 
நண்பனிடம் சொன்னேன் 

வா இரண்டு குழி 
வெட்டலாம் என்று 
என்னையும் கூப்பிட்டான் 

Friday, March 14, 2014

இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
எளிமையாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
கடினமாக இருக்கிறது

இந்த குகைக்குள் பயணிப்பது 
கடினமாக இருக்கிறது

இந்த இருளுக்குள் பயணிப்பது
எளிமையாக இருக்கிறது

எதுவும் செய்யாமல்

மதம் பிடித்த 
யானையானது 
என் நிழல் 
ஒன்றும் செய்யாமல் 
பார்த்துக் கொண்டிருந்தேன் 
அதுவும் எதுவும் செய்யாமல் 
நிழலாகி விட்டது

Tuesday, March 11, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1083-
சமாதியின் மீது
விழுந்த பூக்கள் 
நகர்ந்து நகர்ந்து
இடம் மாறுகின்றன

1084-
என்னை வெல்ல 
நான் 
தோற்க வேண்டும்

1085-
விரட்டிய கையில்   
இருந்தது 
பறவைக்கான சோறு

1086-
என் கதையில் 
பெரிதாக 
எதுவும் இல்லை 
சிறிதாக 
நானிருக்கிறேன்

1087-
பசித்திருப்பவர்கள் 
வயிற்றிலிருந்தே 
ஆயுதம் எடுப்பார்கள்

1088-
உறைந்து போயிருக்கிறேன்
மீண்டு வர
உத்தேசமில்லை










Sunday, March 09, 2014

இரண்டு மெழுகுவத்திகள்

இரண்டு மெழுகுவத்திகள்
தம் சுடரில் அசையும் 
அழகு பற்றி பேசின
தம் நிழல்கள் தாளலயத்துடன் 
நடனமிடுவதை ரசித்தன
உரையாடல் 
வெளிச்சம் சார்ந்தே நீண்டது
இரண்டும் 
கடைசி வரை 
தாம் உருகுவது பற்றி 
பேசிக் கொள்ளவே இல்லை

Saturday, March 08, 2014

வேறு பொருட்கள்

வேறு பொருட்கள் இல்லை 
இந்த அறையில் 
நான்தான் இருக்கிறேன் 
ஒரே ஒரு 
பொருளைப் போல

Friday, March 07, 2014

ஒற்றைத் தீக்குச்சி

1-

உரசினால் 
இழந்து விடுவேன் 
அப்படியே இருக்கட்டும் 
ஒற்றைத் தீக்குச்சி

2-

அடுக்கி வைத்த 
கேள்விகளைத் 
தள்ளி விட்டேன் 
கலைந்து கிடந்தன 
பதில்கள்

Wednesday, March 05, 2014

முடிப்பதற்குள்

சொல்லி முடிப்பதற்குள் 
மறைந்து போனது 
பனித்துளி 
மீதிச் சொற்களை 
புல்லின் அடியில் 
கொட்டிவிட்டு வந்தேன் 

Sunday, March 02, 2014

கண்ணாடிப் பெட்டி

கண்ணாடிப் பெட்டிக்குள் 
படுத்திருக்கும் அப்பாவை 
சத்தம் போட்டு 
எழுப்புகிறது குழந்தை 
அப்பாவுக்கு கேட்கிறது 
ஆனாலும் 
அப்படியே இருக்கிறார்

Saturday, March 01, 2014

அழைத்துப் போனது

அலை வந்து 
இழுத்துப் போனது
என்று சொல்கிறார்கள் 
எல்லோரும் 
அவள் இருந்திருந்தால் 
சொல்லி இருப்பாள் 
அலை வந்து 
அழைத்துப் போனது என்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1076-
வெகு ஆழத்தில்
தியானம் செய்யும்
கனவின் ஆழத்தில்
இருக்கிறேன் நான்

1077-
பயம் 
துரத்திக்கொண்டே இருக்கிறது 

நல்லது 
ஓடிக்கொண்டே இரு

1078-
என் பிரார்த்தனை தட்டில் 
பாவங்கள்
ஆனாலும் 
கடவுள் முன் நிற்கிறேன்

1079-
நாளை நான் 
கிடைக்கக் கூடும் 
அதற்கு இன்று 
தொலைய வேண்டும்

1080-
இந்த வாக்கியம் 
உண்மையாக எளிமையாக 
இருந்தது
அழகாக்கியபோதுதான் 
பொய்யும் பூதமும் 
சேர்ந்து விட்டது

1081-
தட்டி எழுப்புகிறது 
கேள்வி
நானே பதிலாகிறேன்

1082-
நிராயுதபாணி 
நெஞ்சில் ஒலிக்கிறது 
நானே ஆயுதம்





Thursday, February 27, 2014

வேட்டை நாய்கள்

எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது

சாவி துவாரத்தில்

சாவி துவாரத்தில்
இறந்து கிடக்கிறது
ஒரு கண்
அதன் இமைகள்
துடித்தபடி

Friday, February 21, 2014

நகரும் கதை

1-
அதர்மம் 
நடிக்கிறது
தர்மம் 
பார்க்கிறது

2-
நீ எப்போது 
சைத்தான் ஆனாய் 

இரக்க மனதை 
இறக்கி வைத்தபோது 

3-
எழுத்தில் 
ஓய்வெடுக்கிறேன்
என்றாலும் எழுதுகிறேன்

4-
கதை நகர்வதைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன்
நகர்வின் 
அழகில் மயங்கி 
எழுதுவதை 
மறந்து விட்டேன்

5-
பேராசையை 
மனதிற்கு ஊட்டிவிட்டு 
அதை பசியுடனேயே இருக்க 
பழகி வைத்திருக்கிறோம்



Thursday, February 20, 2014

இழு

இழுக்க முடியுமா 
இந்த தேரை 

முடியும் 
இழு 
தேரே சொன்னது

Tuesday, February 18, 2014

கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

காட்டில் கொண்டு போய் 
விட்டுவிடலாமா 
சர்க்கஸ் சிங்கத்தை 
பார்க்க விடாமல் 
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

மறுநாள் 
அவள் வரைந்த வனத்தில் 
அந்த சிங்கம் 
உலவிக்கொண்டிருந்தது

Sunday, February 16, 2014

கொம்பு

எனக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறீர்கள் நீங்கள் 

உங்களுக்குத் தலையில் 
கொம்பு முளைத்திருக்கிறது 
என்கிறேன் நான் 

இருவரும் இல்லை 
என்கிறோம் 

கண்ணாடியில் 
பார்க்கிறோம் 

கண்ணாடியில் 
கொம்பு முளைத்திருக்கிறது 

உணர்வின் மையம்

எழுதினேன் 
சித்திரம் கிடைத்தது 

வரைந்தேன் 
சித்திரம் கிடைத்தது 

ஒன்று போலில்லை 
மற்றொன்று 

ஆனாலும் 
உணர்வின் மையம் ஒன்று