Monday, November 22, 2010

எரியும் நூலகம்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

தீவைத்த சதிகாரர்கள் தப்பிவிட்டார்கள்

காலம் தீக்கனலாகிறது

ஊற்றிய நீரை வாங்கி
தன் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறது நெருப்பு

கொடும்பாவிகள் சிக்கவில்லை

ஏவப்பட்ட பேய்கள்
குற்றத்தை நிகழ்த்திவிட்டு
தடம் காட்டாதபடி பதுங்கிவிட்டன

கேட்கிறது
தீயில் வேகும்
கதாபாத்திரங்களின் அழுகுரல்கள்

வரலாற்றின் வலிகள்

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

உருவான முதல் நாளிலிருந்து
நூலகத்தின் வாசனையை
உணர்ந்த பெரியவர்
அழுது கொண்டிருக்கிறார்

புத்தகங்களை வெகுவேகமாய்
படிக்கிறது நெருப்பு

உதவி மறுக்கப்பட்ட நூலகம்
அனாதையைப் போல
பார்க்கிறது

புகையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
தொலைந்துகொண்டிருக்கிறது

மழை வந்து
மீதி பொக்கிஷங்களைக் காப்பாற்றிவிடாதா
பிரார்த்தனைகள் காற்றில் கலக்கின்றன

வானம் அசையக் காணோம்


இறந்து கிடக்கின்றன
உள் வசித்த புறாக்கள்

சூட்சியின் வியூகம்
அறிவு ராஜ்ஜியத்தை வீழ்த்தி இருக்கிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

ஊடகங்கள் நூலகத்தின் இறுதிக் காட்சிகளை
பலகோணங்களில் காட்டுகின்றன
கண்ணீரும் கண்ணும்
அருகருகே இருப்பது போன்று
மிகத் துல்லியமாக
நேரடி ஒளிபரப்பாக

நூலகர் தப்பிவர விரும்பாமல்
நூலகத்தோடு தீ சமாதியானதாக
ஒரு தகவல் கசிகிறது

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

மூன்று தலைமுறை கண்ட நூலகம்
முடிந்துகொண்டிருக்கிறது

சதிகாரர்கள் பிடிக்கப்படுவார்கள்
மீண்டும் இதுபோல்
நிர்மாணிக்கப்படுமென்று
செய்திகள் உற்பத்தியாகின்றன

பலூன் வார்த்தைகள்
பஞ்சமின்றி பறக்கின்றன

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்

புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி
அதைக் காப்பாற்றிவிட்ட பதட்டத்தில்
கைநடுங்க இறுக்கமாகப் பிடித்தபடி
பார்த்துக் கொண்டிருக்கிறாள்

புத்தகத்தின் அட்டையில்
ஒளிர்கிறது நூலகத்தின் பெயர்

4 comments:

  1. padikkum pothe payamaa irukku ipdiyellaam aakidak koodathu endru. :(

    ReplyDelete
  2. அருமையா காட்சிப் படுத்தியிருக்கீங்க

    ReplyDelete
  3. "புத்தகங்களை வெகுவேகமாய்
    படிக்கிறது நெருப்பு".."புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி
    அதைக் காப்பாற்றிவிட்ட "... கதையினூடே கவித்துவமும் அழகு..

    ReplyDelete