Saturday, May 28, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

522-

உரையாடல்
முடியும்முன்
உதிர்ந்தது இலை

இறங்கிக்கொண்டிருக்கும்
இலையின் மீது
விழுகின்றன
மரத்தின்
மீதிச்சொற்கள்

523-

கையள்ளிப்போனது
கடலானது
இறைத்தபோது

524-

எனக்கான மன்னிப்புகளை
எனக்கான தவறுகள்
வழங்கிக்கொண்டிருக்கின்றன

Friday, May 27, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

518-

நரை வீதிகளில்
ஞாபகம் மறந்து திரியும்
நினைவுகள்

519-

புள்ளிகளில் நெரிசல்
தாளில் தடம் தேடும்
வார்த்தைகள்

520-

கேட்டவனுக்குத்
தர எதுவுமில்லை
பிரபஞ்சத்தைப்
போட்டுவிட்டு நடந்தேன்

521-

ஏதோ ஒரு
இருளும்
வழி காட்டும்

தூறல் மேகங்கள்

மழை வர
பிரார்த்திக்கும்
குழந்தையின் கண்களில்
தூறல் மேகங்கள்

கண்ணீரின் புன்னகை

கண்ணீரின் புன்னகை
என்று எழுதிய பின்
துடைத்துக்கொண்டேன்
அதுவாய் வந்த கண்ணீரை
அதுவாய் வந்த புன்னகையுடன்

திரும்புதல்கள்

ஊர் திரும்ப வேண்டும்
நகரத்தை
எடுத்துக்கொண்டு

நகரம் திரும்ப வேண்டும்
ஊரை
எடுத்துக்கொண்டு

Wednesday, May 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

511-

ஊசிக்குள்
நான் நுழைந்து
பின் வரச்சொன்னேன்
தயங்கிய நூலை

512-

இருளில்
ஒரு தவறு செய்தேன்

தவறுக்கு
இருளையும் உடந்தையாக்கியது
இன்னொரு
தவறாகிப்போனது

513-

நுனிப்புல் மேய்பவர்களிடம்
கேட்காதீர்கள்
வேரின் ருசி பற்றி

514-

அறையை
பந்தயமைதானமாக்கிய
தனிமை
தூக்கி எறிந்து விளையாடியது
என்னை

515-

போகக்காணோம்
நான்கள் துப்பி
ஏறிய கறைகள்

516-

எதுவுமற்று
முடிந்த கவிதை
அனாதையாகிவிட்டது
எதுவுமற்று

517-

காற்றே
இசைதான்

Tuesday, May 24, 2011

குறிப்பு

தற்கொலை செய்துகொண்டவன்
அருகில் இருந்த
ஒற்றை வரி குறிப்பு

சற்று நேரத்தில்
மழை வரலாம்

மீண்டும் மீண்டும்

நீங்கள் பொம்மையை
உடைத்துவிட்டதற்காக
குழந்தை அழவில்லை
தன்னை உடைத்துவிட்டதால்
அழுகிறது
அது தெரியாமல்
புதிதுபுதிதாய்
பொம்மைகளைத் தயாரிக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை உடைக்கிறீர்கள்

Monday, May 23, 2011

மிதத்தல்

குழந்தையின் மழலையில்
மிதக்கிறது
பெளர்ணமி

தடங்கள்

மூன்று குதிரைகள்
ஓடின

இரண்டு குதிரைகள்
ஓடின

ஒரு குதிரை
ஓடியது

எந்த குதிரையும்
இல்லை

ஓடிக்கொண்டிருக்கிறேன்
குதிரையின்
காலடித் தடங்களுடன்

இப்போது

இந்த அழுகையை
இந்த காயத்திற்கு
பொறுத்திக்கொள்ள முடியாது

ஆனாலும்
இந்த அழுகை இப்போது
தேவையாக இருக்கிறது

Saturday, May 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

501-

யார் போட்டார்
தெரியவில்லை
உட்செவியில்
குவிந்த பொய்கள்

502-

உயிர்விடாது
நீர் துளியில்
நீந்தும் மீன்

503-

நடக்கும்போதெல்லாம்
போதிக்கும்
சாலைகள்

5O4-

இடைவெளியில்
மறைந்துகிடக்கும்
இடைவெளிகள்

505-

பிய்த்தெறியும்போது
குத்தியதைவிடவும்
வலி

506-

வழியும் கண்ணீரில்
முடிந்துபோகிறது
ஏதோ ஒரு கனவு

507-

ஊர்ந்துபோகிறது
அமைதி
அமைதியாக

508-

எடுத்துக்கொள்கிறேன்
தேவையுள்ளதில் இருந்து
மிகத் தேவையானதை

509-

துண்டு துண்டாக
உறங்கிவிடுகிறேன்
உள்சதுரங்களில்

510-

சிலர் பேச்சில்
குரைக்கும்
நாய் சத்தம்

வானத்திலிருந்து

மழை நூல் பிடித்து
ஏறிய குழந்தை
கையசைத்தது
வானத்திலிருந்து

வரச்சொன்னது
மேலேறி

என் அறியாமை கண்டு
சிரித்து
பின் இறங்கியது
மழைத்துளியாய்

நட்புடன்

குறுகிய அறையை
கண்டுபிடித்து
ஜன்னல் திறக்கும்போதெல்லாம்
வந்துவிடுகிறது குருவி

நானாய் விரட்டியதில்லை
அதுவாயும் போனதில்லை

அது இருந்துபோகும்
தருணங்களில்
விசாலமாகிவிடுகிறது
அறையும்

கைவிடப்பட்ட குழந்தை

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது
ஒரு கதையில் இடம் தேடுகிறது
வாகனங்களை பொம்மைகளைப்போல ரசிக்கிறது
அதன் சத்தங்களை தன் வாயால் எழுப்ப முயற்சிக்கிறது
விரட்டுபவரின் நிழலை மிதித்துச் செல்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
ஒரு பட்டத்தை நோக்கி ஓடுகிறது
கொஞ்சம் அழுகையை நிறுத்துகிறது
சுண்டல் விற்பவனிடம் கை நீட்டுகிறது
அம்மாவின் இடுப்பில் ஆடும் குழந்தையைத் தொடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
மணல் அள்ளிப் போடுகிறது
தன் பெயரைத் தேடுகிறது
பொம்மையைப்போல் கிடக்கிறது
கால் பரவும் சிறுநீரைத் துடைத்துவிடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தன் மழலை வழியே மேலேறுகிறது
கைகளால் வானவில்லை அசைக்கிறது
விழும் நிறங்களை அள்ளுகிறது
கடலில் தூக்கி எறிகிறது

கைவிடப்பட்ட குழந்தை
காணமல் போனவரின் போஸ்டர் அருகில் நிற்கிறது
அதிலிருக்கும் முகத்தைத் தடவுகிறது
மேல் ஊரும் எறும்பை மெல்ல எடுத்து விடுகிறது

கைவிடப்பட்ட குழந்தை
தாய்களைப் பார்க்கிறது
தந்தைகளைப் பார்க்கிறது
மனிதர்களைப் பார்க்கிறது
யாரும் தன்னைப் பார்க்கவில்லை எனினும்
ஆழ்ந்து உற்று அருகில்போய்
அதிகமாகப் பார்க்கிறது

கைவிடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச்செல்கிறது இன்னொரு குழந்தையை
தன் கைபிடித்து அழைத்துச் செல்ல


நன்றி- ஆனந்த விகடன்

*ஆனந்த விகடன் இதழில்(25.5.11)
வெளியான கவிதை.

Friday, May 20, 2011

கேட்கிறான்

நீ தின்னும் ரொட்டியில்
இறைவன் இருக்கிறான்

போதாதவன் சொன்னான்

என் பசியில்
இருக்கும் இறைவன்
இன்னும் கேட்கிறான்

Wednesday, May 18, 2011

கரித்துண்டு

குழந்தை கையில்
கரித்துண்டு
வானவில்லைப்போல
சிரிக்கிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

495-

நடந்தவர் சொன்னார்
நான் வழிகளில்
பயணம் செய்யும் போதே
வரிகளிலும் பயணிப்பவன்

496-

தூர்ந்து போன கிணறாய்
சிலர் மனம்
இறைக்க முடியாமல்
தாகம் தீர்க்க முடியாமல்

497-

திட்டம் மாற்றப்பட்டது
இன்று பயணம்
எனக்குள்தான்

498-

என்ன வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள்

எதுவுமில்லையே

உங்களுக்கு
எடுக்கத் தெரியவில்லை

அடுத்தவர் வாருங்கள்

499-

நீர் வற்றிப்போனாலும்
மணல் மிதந்து போகிறது
சொப்பனப் படகு

500-

திறக்க
உள்ளிருக்கும்
பிரபஞ்சம்

Tuesday, May 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

488-

கிளையாக
நீண்டுபோனதை
முறித்துப் போடலாம் என
முடிவு செய்தபோதுதான்
தெரிந்தது
ஆழமாக
வேர்விட்டிருப்பது

489-

உங்களிடம்
நெருப்பு இருக்கிறது
அணையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

நான் அணைக்காமல்
பார்க்க வேண்டும்
என்பதில்லை

அதுவே அணையாமல்
பார்த்துக்கொள்ளும்

490-

முதுகு சொறிந்துவிடுபவரைப்
பார்த்தேன்

முகமே இல்லாமல்
பேசிக்கொண்டிருந்தார்


491-

அந்தரத்தில்
மிதந்துகொண்டிருந்தேன்
தள்ளிவிடுவார்களோ என்று
யோசித்தபோது
விழுந்துபோனேன்

492-

கையளவே
வார்த்தைகள்

கடலில்
எறிகிறேன்

மூழ்கி
மீன்களோடு
விளையாடிவிட்டுப்
போகட்டும்

493-

அல்லது இது
அல்லது அது
அல்லது எதுஎனினும்
என அல்லதுகளில்
கழியுது காலம்

494-

அசையும் கிளை
சொல்லெடுத்துத் தர
உரையாடுகிறேன்
வனத்துடன

Monday, May 16, 2011

கடைசி வார்த்தை

கொல்லப்பட்ட பறவையின்
கடைசி வார்த்தை
துடிக்கிறது
காற்றில் போய்
தன் குஞ்சுக்கு
எதையோ
சொல்லி விட

Sunday, May 15, 2011

ஞாபக வட்டம்

உடையும்
நீள்சதுரமாகும்
சதுரமாகும்
கூம்பாகும்
தூளாகும்
துகள்களாகும்
புள்ளிகளாகும்
வடிவம் மாறி
திரும்ப
தானாகும்
ஞாபக வட்டம்

தெய்வங்கள்

குழந்தைகள்
சிறு தெய்வங்கள்
குழந்தையிடம் சொன்னேன்
சிரித்துச் சொன்னது
தெய்வங்கள்
பெரிய குழந்தைகள் என்று

Saturday, May 14, 2011

நட்பு

மலையுச்சி தாண்டி
வரும் பறவை
நட்பாயிற்று
பல பிரயத்தனங்களுக்குப் பிறகு

அடிவாரம் தாண்டா
என்னருகில்
ஒரு நாள் அமர்ந்து
தன் கண்ணுக்குள் இருந்த
மலையுச்சியைக்
காட்டி சென்றது

Friday, May 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

477-

சுழலும் பம்பரம்
விழப்போகும் தருணம்
துயரமானது
தவிர்க்க வேண்டும்

478-

வெளவால் போல்
தலைகீழாய் நீ

வெளவால் போல்
தலைகீழாய் நீதான்

மனமும் நானும்
ஒருவருக்கொருவர்
புகார் சொல்லிக்கொண்டு

479-

முடிவோடு வந்து
தாழ்பாளிட்டவனிடம்
கோரிக்கை வைத்தது

நான் வெறும் கயிராகவே
இருக்கிறேனே

அந்தக் குரல் அவனுக்கு
கேட்கவில்லை

480-

தண்டவாளத்தில் கோழிக்குஞ்சு
வருகிறது ரயில்
உடைந்தது கனவு

481-

எதுவுமில்லை

கிடைத்துவிட்டது
என்ற வார்த்தையோடு
விளையாடுகிறேன்

482-

தனியே வந்தவன்
பேசிச்செல்கிறான்
போதையுடன்

483-

நுழைவாயிலில்
பரிசோதனைகளுக்குப் பிறகு
இந்த வார்த்தைகளோடு
செல்லக்கூடாது என்றார்கள்
ஆயுதமற்ற போராளியாய்
போக விரும்பவில்லை
திரும்பிவிட்டேன்
என்னை வளர்க்கும்
வார்த்தைகளுடன்

484-

தன் வன்மம்
உதிர்த்த பாறை ஆனது
தொன்மம் மாறா
சிலையாய்

485-

பறந்து வந்து
அமர்ந்தது இருள்
பட்டாம் பூச்சியைப்போல
வரைந்துகொண்டிருந்த
பட்டாம் பூச்சி மேல்

486-

எனக்கு முன்
ஊர்போய் சேர்ந்த
எறும்பிடம் கேட்டேன்

எப்படி உன்னால் முடிந்தது

நீ கேள்வியின்
அந்த முனையில் இருக்கிறாய்

நான் பதிலின்
இந்த முனையில் இருக்கிறேன்

குரல் வந்தது

487-

மரத்திடம் சொன்னேன்

நீ இலைகளை
கொன்றுபோடுகிறாய்

உதிர்தல்
மரணம் என்று
சொல்வாய் எனில்
பூத்தலும் மரணம்தான்

சொல்லி சிரித்தது
என் மேல்
இலைகள் விழ

Tuesday, May 10, 2011

வேறு வேறு

தங்கச் சுரங்கத்தை
இழந்துவிட்டேன்
மோதிரம்
தவறிப்போனது குறித்து
வருத்தமில்லை

வேறு வேறு
இருவர்களுக்கிடையில்
இந்த வரி
வேறு வேறு
வடிவம் கொள்கிறது

Monday, May 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

472-

கடைசி ஆசையையும்
புதைத்தேன்
சவப்பெட்டியில்
பூத்திருக்கும் மலர்கள்
உதிர நாளாகும்

473-

இல்லை என்பவர்களிடம்
இருக்காது
பெரிதாக எதுவும்

474-

முதல் வார்த்தைக்கு
தவமிருந்தேன்
மற்றவை
வார்த்தைகளின் தவங்கள்

475-

வழிகளில்
தொலைபவன் நான்

வழிகளை
தொலைப்பவன் அல்ல

476-

ஒரு நூல்கண்டால்
என்னைக் கட்டிப்போட்டேன்
பின் நூல்கண்டு
அறுபடாமல் வெளியேறினேன்
அறுபட்ட காயங்களில் நான்
அங்குமிங்குமாய்
கொஞ்சம்
சிதறி இருக்கலாம்

அவன்

சூயிங்கம் மெல்கிறவன்
காட்சிகளையும் மெல்கிறான்
அதில் நசுங்கி வெளியேறுகிறாள்
ஒரு பெண்

Friday, May 06, 2011

ரயில்

அழுதது குழந்தை

நீ அழுதால்
மெதுவாக போகும் ரயில்
சிரித்தால்
வேகமாகும்
என்றேன்

அழுகை நிறுத்தி
சிரித்தது

பார் ரயில்
வேகமாகிறது


இல்லை
அப்படியேதான் போகிறது
சொல்லியபடியே அழுதது

குழந்தை பிடித்த தும்பியாய்
நெளிந்தபடி
நான்

குழந்தையின்
அழுகைக்கும் சிரிப்புக்கும் இடையில்
எந்த வேகத்தில்
செல்வது என்று தெரியாமல்
ரயில்

Thursday, May 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

467-

வேட்டைக்கு பின்
இறந்து கிடந்தோம்
மிருகமும் நானும்

வேட்டைக்கு முன்
தப்பி பிழைத்தோம்
நானும் மிருகமும்

468-

வயதானால் என்ன
அந்தரங்கத்தில்
குழந்தை நான்

469-

வேகமாக
வெளியேறி விடுகிறோம்
அதைவிட வேகமாக
சிக்கியும் விடுகிறோம்

470-

காற்றில் செய்த சாவி
கையிலுண்டு

அது வானின்
எந்த கதவையும்
திறக்கும் நன்று

471-

வார்த்தை இல்லாதபோது
வெறுமனே பார்க்கிறேன்
வேறு ஒன்றும்
செய்வதில்லை

Wednesday, May 04, 2011

கவிதைக்குள்

கவிதைக்குள்
நுழைவது என்பது
ஒரு வனத்திற்குள்
நுழைவதைப் போல

கவிதையிலிருந்து
திரும்புவது என்பது
விலங்குகள் எதையும்
வேட்டையாடாமல்
ஒரு பூவைப்
பறித்துக்கொண்டு
வருவதைப் போல

Sunday, May 01, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

460-

தன் தலையில்
ரத்தம் சூடி இருக்கும்
முள்ளுக்குத் தெரியாது
துடித்து அடங்கிய வலி

461-

துரோகங்களை
நீங்கள் மறந்துவிடலாம்
துரோகங்கள்
ஒருபோதும் உங்களை
மறப்பதில்லை

462-

நாகரீகம் கருதி
அழவில்லை
ஆனாலும் ஒரு துளி
கசியாமலில்லை

463-

பிரார்தனைகளை
மறந்துவிட்டேன்
இறைவன் ஞாபகத்தில்
வைத்திருப்பார் என்பதால்

464-

குவளை நீரை
குடித்தன பறவைகள்
தீர்ந்தது என் தாகம்

465-

என்னைத்
தின்னக் கேட்கிறது
வன்மம்
வன்மத்தை
தின்கிறேன்
நான்

466-

வாக்கியங்களின்
வார்த்தைகளுக்கிடையில்
பார்வைகள்
புத்தகம் முழுதும்
கண்கள்

நாவு

வீட்டின் நாவு
கதவு
பூட்டி
ஊர் செல்லும்போதெல்லாம்
அது சீக்கிரம்
வரச்சொல்லிக்
கேட்டிருக்கிறேன்

தெரிவதில்லை

ஒரு பூச்சியை
நசுக்கி கொல்வதைப் போல
என் பிரியத்தைக் கொல்கிறாய்
இறந்த பின்னும்
வலி தரும்
இந்த மரணம் பற்றி
உனக்குத் தெரியவாப் போகிறது