Friday, September 27, 2024
செல்ஃபி
Sunday, September 22, 2024
சித்திரம்
மனதில்
தங்கிப்போயிருந்த
சித்திரத்தை
மறதி
கொஞ்சம்
கொஞ்சமாய்
அழித்துக்கொண்டே வர
தப்பித்த
எஞ்சிய கோடுகளை
நினைவுகள் சேர்த்து
வேறொரு
சித்திரமாக்கப் பார்க்கிறது
Tuesday, September 17, 2024
தெரியுமா உங்களுக்கு
நீங்கள் ஓட நினைத்த தூரத்தை
அவர்கள் ஓடி முடித்துவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
நீங்கள் வரைய நினைத்த ஓவியத்தை
அவர்கள்
வரைந்து பார்த்துவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
நீங்கள் எழுத நினைத்த கதையை
அவர்கள்
எழுதிப் பிரசுரித்துவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
நீங்கள்
களைப்பில்
இளைப்பாறிய
நேரத்தில்
அவர்கள்
முனைப்பில்
வென்றுவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
நீங்கள்
உறக்கத்தில்
இழந்த
வாய்ப்புகளை
அவர்கள்
விழிப்பில் வென்றுவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
நீங்கள்
காலம் கைகொடுக்கும் என்று
காத்திருந்த
நேரத்தில்
அவர்கள்
காலத்தோடு கைகோர்த்து
விரைந்துவிட்டார்கள்
தெரியுமா உங்களுக்கு
Thursday, September 12, 2024
இருள் பேசுகிறேன்
Monday, August 26, 2024
அமைதி
அமைதியாக
மனம் அலைபாய்வதைப்
பார்த்துக்கொண்டிருந்தேன்
அலைபாய்ந்தபடியே மனம்
மேலும்
அமைதியாக
என்னைப்
பார்த்துக்கொண்டிருந்தது
Friday, March 22, 2024
உணர்வின் தருணம்
வண்ணக் கொப்பரையில்
தூரிகை விழுந்து
தற்கொலை
செய்துகொள்வதுபோல்
கனவு வந்தபோது
அவன் அலறி துடித்து
எழுந்தான்
அந்த உணர்வின்
தருணம்தான்
அவனை
ஓவியனாக்கியது
Monday, March 18, 2024
பறவையின் பாடல்
பறவைபோன
தடத்தில்
மிதந்துகொண்டிருந்தன
வார்த்தைகள்
எதுவும்
பிரிந்துபோகாமல்
காற்று
மெல்ல ஊதி ஒன்றாக்கி
என்னிடம்
கொண்டுவந்து
சேர்த்தது
கவனித்து
வரிசையாக்கி
இசைலயத்தோடு
எழுதினேன்
பிறகு
பாடியபோது
அதே
பறவை
ஒரு
கிளை மீதமர்ந்து
கேட்டுக்கொண்டிருந்தது
Wednesday, February 14, 2024
எங்கேயோ...எதையோ...
சுவரில் சாய்ந்து
எங்கேயோ பார்த்து
எதையோ முணுமுணுக்கிறாய்
நான் அதற்குச்
சொற்களை யோசிக்கிறேன்
நீ கேட்டு
முணுமுணுப்பில் பொறுத்திப் பாடுகிறாய்
உயிர் பெறுகிறது
பாடல்
வியப்பு மேலிடக்
கேட்கிறேன்
இந்தப் பாடல்
எங்கிருந்து வந்தது
உன் முணுமுணுப்பிலிருந்தா
இல்லை எனத்
தலையாட்டுகிறாய்
என் சொற்களிலிருந்தா
மறுபடியும்
மறுக்கிறாய்
பிறகு எங்கிருந்து
வந்தது
கண்களைத்
துடைத்துக்கொண்டு
சொல்கிறாய்
துயரத்திலிருந்து
Wednesday, January 17, 2024
உங்களை எப்போது விடுதலை செய்யப்போகிறீர்கள்
உங்களை எப்போது
விடுதலை செய்யப்போகிறீர்கள்
நினைவுகளில்
அடைபட்டிருக்கிறீர்கள்
கனவுகளில்
சிறைபட்டிருக்கிறீர்கள்
கட்டளைகளுக்குக்
கட்டுப்பட்டிருக்கிறீர்கள்
எதிர்பார்ப்புகளில்
அகப்பட்டிருக்கிறீர்கள்
தேவைகளில்
திணிக்கப்பட்டிருக்கிறீர்கள்
ஆசைகளில்
அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்
சொல்லிக்கொண்டே
வந்தவர்
சொல்லிக்கொண்டே
போனார்
அவர் சொல்லியது
கேட்டுக்கொண்டே
இருந்தது
உங்களை எப்போது
விடுதலை செய்யப்போகிறீர்கள்
Tuesday, January 16, 2024
கதையும் குழந்தையும்
கடவுளின் தோள்மேல்
அமர்ந்திருக்கிறேன்
எனச்சொன்னது
மலைமேல்
அமர்ந்திருந்த குழந்தை
எப்போது
கீழே வருவாய்
குரல் எதிரொலிக்கக் கேட்டேன்
கடவுள் எனக்குக்
கதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்
கேட்டு முடித்தவுடன்
வருவேன் என்றது
வந்தபின்
அந்த கதையை எனக்குச் சொல்வாயா
ஆர்வம் கூட கேட்டேன்
கடவுள் எனக்குச் சொன்னக்
கதையைச் சொல்ல மாட்டேன்
நான் மலைக்குச் சொன்னக்
கதையைச் சொல்கிறேன் என்றது
Tuesday, January 02, 2024
இருள்
Thursday, December 28, 2023
நகரமும் அவர்களும்
நகரத்திற்குப் புதிதாக வந்த இளைஞன் அவன்
இந்த
நகரத்துல எங்கையாவது
அன்பு
தென்படுமான்னு பாத்தேன்
அது
உங்க கண்ல இருக்கு என
எதிர்படும்
பெண்ணிடம் சொல்கிறான்
கண்டறிந்த பெருமிதத்தோடு
இதை
எதிர்பார்க்காத
நகரத்திற்குப்
புதிதாக வந்திருக்கும் பெண்
அவனைப்
பார்க்கிறாள்
அவள்
பேருந்து வருகிறது
என்ன
சொல்றதுன்னு தெரியல
உங்க
கண்ல
நம்பிக்கை
தெரியுது
சொல்லிவிட்டு
வேகமாக
ஓடிப்போய்ப்
பேருந்தில்
ஏறுகிறாள்
போ
1
வழியே
வழி
காட்டும்
போ
2
நிற்காதே
தேங்கிப்போவாய்
3
கண்களுக்கு
விழிப்பை
ஊட்டு
4
நீ
நடைப்போராளி
5
கால்களின்
பாடல்
கேள்
இசைபோல்
நட
6
தடைக்கற்களில்
வேகத்தின்
குறிப்புகள்
இருக்கட்டும்
7
மூச்சுக்காற்றுக்கு
நன்றி
சொல்
உன்னை
முந்திச்
செல்பவனை
முந்திச்
செல்
8
நேரம்
முக்கியம்
உன்னோடு
உரையாடு
போதும்
9
கேள்வி
அழைத்துப்போகும்
விடை
வேகமாக்கும்
10
களைப்படையா
கர்வம் கொள்
11
நினைவுகளில்
பயணக்குறிப்புகளை
எழுதி
வை
12
இமை
மூடித்
திறப்பதற்குள்
பாய்ந்து
பழகு
13
கால்களைச்
சிறகுகளாக்கு
பாதைகளை
வானமாக்கு
தினசரி செய்திகள்
கையிலிருந்த தினசரியில் செய்திகள் கனத்தன
எண்ணூரில்
எண்ணெய்ப் படலம்
என்னென்னவோ
சொல்கிறார்கள்
கவலை
பாரமாய் அழுத்துகிறது
ஏரிகள்
காணாமல் போய்விட்டன
கட்டிடங்கள்
முளைத்துவிட்டன
இவரைக்
கேட்டால் அவரைச் சொல்கிறார்
அவரைக்
கேட்டால் இவரைச் சொல்கிறார்
கூசாமல்
குவித்து வைத்திருக்கிறோம்
குப்பைகளையும்
பொய்களையும்
வெட்கமின்றி
உலா வருகின்றன
ஊழல்
முகங்கள்
தீர்வைத்
தர வேண்டும்
உணவுப்பொட்டலங்களோடு
முடிந்து விடுகிறது
புகைப்பட
வெளிச்சத்தில் பெருமிதங்கள்
எல்லாவற்றிற்கும்
பதில்
வைத்திருக்கிறார்கள்
கேள்வி
கேட்பவர்களின்
வாயை
மூடி விடுகிறார்கள்
இன்னொரு
தேநீர்
பெரியவரிடம்
கேட்டேன்
தலையாட்டினார்
மனுஷன்
நேர்மையா இருந்தா
நாடு
தூய்மையா இருக்கும் என்றார்
சட்டையில்
சிந்திய தேநீரைத்
துடைத்துக்கொண்டார்
அமைதியானவர்
திடீரென
வெடிப்பது
போல்
சொல்லிவிட்டுப்
போனார்
நாக்க
புடுங்கிகிட்டு சாகற மாதிரி
நாலு
வரி எழுதுங்க தம்பி
எதுவும்
தோன்றவில்லை
தினசரியில்
தொலைந்து போனவரோடு
நானும்
தொலைந்து கொண்டிருந்தேன்