Powered by Blogger.

கப்பல்கள்

Thursday, June 24, 2010

கப்பல்கள்
வழி தெரியாமல்
இருளில் நிற்கின்றன என்றேன்

தேவதை சிரிப்புடன்
பார்த்த சிறுமி
நோட்டை எடுத்து
கலங்கரை விளக்கை
வரைந்தாள்

கப்பல்கள்
ஒளி பெற்று
வழி பார்த்துப் புறப்பட்டன

பின் ஓவிய நோட்டை மூடி
பையில் வைத்து
பள்ளிக்கூடம் போனாள்

அவளுக்குத் தெரியாமல்
அவளைத் தொடர்ந்தன
கப்பல்களும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Tuesday, June 22, 2010

120-

சூன்யத்தில் சுட்டுக்கொண்ட
விரல் நுனியில்
காலத்தின் சாம்பல்

121-

எறிந்த சொற்கள்
சேர்ந்து கற்களாச்சி

கற்கள் எல்லாம்
குவிஞ்சி மலையுமாச்சி

மலையுச்சி நின்று பார்க்க
அமைதி வெளி
தெரியலாச்சி

122-

தோற்றுப் போனவன் இசைக்கிறான்
தோற்கக்கூடாது என்ற பாடலை
மேலும் சுதி சேர்த்து
தலை நிமிர்ந்து
உலகம் பார்த்து

கனவில்

Sunday, June 20, 2010

யார் கனவென்று
தெரியவில்லை
வீதியில் கிடந்து
துடிக்கிறது
விட்டுப் போனவன்
தேடக்கூடும்
இக் கனவை
வேறொரு கனவில்

(14.07.2010 ஆனந்த விகடன் இதழில்
பிரசுரமானது)

திரும்புதல்

Saturday, June 19, 2010

அடிக்கடி குழந்தை கேட்பாள்
இந்த மீன் தொட்டி மீன்களை
கடலில் விட்டுவிடலாமா என்று

கடல் மீன்களின் தாய்வீடு
மீன்களின் நீர் விளையாட்டுத் திடல்
என்று அவளுக்கு
கதை சொல்லும் போது
குறிப்பிட்டது
அப்படியே தங்கிவிட
ஒரு நாள் கேட்டாள்

மீன் தொட்டியில
நகர்ந்து போவுது
கடல்ல விட்டா
ஓடும் இல்ல

அவள் விருப்பப்படியே
முடிவு செய்து
கவனமாய் கொண்டுபோய்
மீன் தொட்டியை
கரையில் வைத்து
எல்லா மீன்களையும்
வழி அனுப்பி வைத்தோம்

ரொம்ப தூரம் போயி
விளையாடுங்க எனச்சொல்லி
குதித்தபடியே கடலுக்கு
கையசைத்தாள் குழந்தை

அலை பதிலுக்கு
தலை அசைத்தது

மீன் தொட்டியில்
நிரம்பி இருந்தது
கடலின் நன்றி

பூக்களின் வரிசை

Wednesday, June 16, 2010

குழந்தை தனக்குத் தெரிந்த
பூக்களின் பெயர்களைச்
சொல்லிக்கொண்டே வந்தது

நினைவில்
வரிசை தடுமாறியபோது
பூக்களோடு சேர்த்துக் கொண்டது
தன் பெயரையும்

சொல்லி முடித்த நிம்மதியில்
புன்னகையுடன் பார்த்தது

குழந்தையின் பெயரில்
சேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்

(கல்கி,08.08.2010 இதழில்
பிரசுரமானது)

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Friday, June 11, 2010

116-

மேலேறிச் செல்லும்
எறும்பைப் பார்க்க
மேலேறிச் செல்லும் பார்வையும்

117-

மறந்தே போயிற்று
மறந்ததை நினைக்க
மறந்தே போயிற்று

118-

கைமாறி கைமாறி
கை சேர்ந்த கனவு
கண்ணீரைப் பேசலாச்சே
கண்ணீரைப் பேசி
கண்ணீரைப் பேசி
கை கனவு கரைஞ்சிப் போச்சே

119-

விடுபட விடுபட
விடுபடும் எல்லாம்
விடுபட்டு விடுபட்டு
சிறைபடும் எல்லாம்

கிடைத்து விட்டது

இன்னும் பெயரிடாத
என் புதிய நாயுடன்
கடற்கரையில்
நடந்து கொண்டிருந்தேன்

சிநேகமாக வந்தது
கடலைப் பார்த்தது
கை கயிற்றை
சற்றே விட
கூடுதல் சுதந்திரத்துடன்
ஓடிப்போய்
மண்ணைக்கீறி விளையாடியது
நண்டைப் பார்த்து மிரண்டது
ஒளி வாங்கி ஓடியது
பின் என்னோடு வந்து
சேர்ந்து கொண்டது

வீடு திரும்புகையில்
உனக்கு என்ன பெயர்
வைக்கலாமென்று
அதனிடம் கேட்டேன்
குரைத்தது

அந்த சத்தத்திலிருந்து
விழுந்த சொற்களில்
எதுவும் பெயர்
ஒலிக்கவில்லை

கயிற்றின் அதிர்வு
கைக்கு இதமாக இருந்தது

நாய் கதாபாத்திரங்கள் வரும்
கதைகளினூடே போய்
ஏதாவது பெயர் கிடைக்குமா என
பார்த்து திரும்பியது மனது

வைக்கப்போகும் பெயருக்கு
ஒரு விஷேசம்
தேவைப் பட்டது

நல்ல பெயர்
கிடைக்கும் வரை
காத்திருக்க வேண்டியதுதான்

அதுவரை பெயரிடப்படாமல்
கழியட்டும் நாட்கள் என்று
நினைத்தபடி பார்க்க
வேகமாக சாலை கடந்த நாயை
டேய் அன்பு
எனச் சத்தமிட்டேன்

அழகாக ஓடி வந்து
காலை நக்கியது

கிடைத்து விட்டது

எனக்குப் பெயரும்
அதற்கு நானும்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Monday, June 07, 2010

111-

புதிய கண்ணீர்
பழைய வலிகள்
இதற்குத் தெரியாது

112-

நான்கள்
முன்னாலும் பின்னாலும்
வரிசையில் நான்

113-

மரணம் போல்
வாழ வேண்டும்
அமைதியாக

114-

எலும்புக்கூட்டை
சுடுகிறது குழந்தை
வெளியேறுகிறது உயிர்
துப்பாக்கியிலிருந்து

115-

யாருமில்லை
கனவில் நிலவுகளை
கொட்டும் இரவு

...?

அவனை கல்லால்
அடித்துக் கொல்ல வேண்டும்
தயாராக இருக்கிறீர்களா

ஆமாம்

அவன் உங்களில்தான் இருக்கிறான்
எங்கே பார்ப்போம்

மொத்த கற்களும் பாய்ந்தன
மொத்த பேரும் வீழ்ந்தார்கள்
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்