Tuesday, April 15, 2025

பசியின் குரல்

சாலையோரம்

படுத்துக்கிடப்பவன்

கொசுக்களோடு போராடுகிறான்

 புரண்டு படுக்கிறான்

 விழித்திருக்கும் பசிக்குப்

பதில் சொல்ல முடியாமல்

தவிக்கிறான்

 எனக்கு

யாருமே இல்லயா

குரல்  உள்ளிருந்து வருகிறது

 நானிருக்கிறேன்

எனச்சொல்லி

கண்ணீர் வழிகிறது

 துடைத்தபடியே

எழுகிறான்

பாதி பீடியைப்

பற்ற வைக்கிறான்

பீடியின் புகையோடு

கலக்கிறது

துயரப் புன்னகை

போலீஸ் ஜீப்

அருகில் வந்து

நிற்கிறது

அவனைக் கேள்விகளால்

குடைகிறார்கள்

பசியின் குரலில் சொல்கிறான்

அய்யா என்ன

இப்படியே விட்டுட்டுப்

போனா போங்க

இல்ல கூப்பிட்டுப்போயி

உள்ளப் போடுங்க

வேலத் தேடி

பட்டணம் வந்தேன்

நான் தொலையறதுக்குள்ள

கிடைச்சிடும் நம்பறேன்

நாளைக்கு ஒரு எடத்துல

வரச்சொல்லி இருக்காங்கா

 அவனைப் பார்க்கிறார்

இன்னும் சில நாட்களில்

ஓய்வு பெறப்போகிற போலீஸ்காரர்

குறுக்கும் நெடுக்கும்

சிந்தனைகள் ஓட

போகலாம் என

டிரைவரிடம் சொல்கிறார்

 மெல்லப் போகும்

ஜீப்பைப் பார்த்து

எதிர் திசையில் நடக்கிறான்

 எனக்கு

யாருமே இல்லையா

சத்தம் போட்டுச் சொல்கிறான்

இப்போது

கண்ணீர் இல்லை

 நகரின் மெளனத்தை

அவன் குரல் அசைக்கிறது

 

 


Sunday, March 23, 2025

மலை ஏறி இறங்குபவர்

மலை ஏறி இறங்கும்

ஒருவரை எனக்குத் தெரியும்

 

ஏறக்குறைய

என் வயது இருப்பார்

 

எனக்கு நடக்கவே

சிரமமாக இருக்கிறது

நீங்கள் எப்படி

இத்தனை மலைகள்

ஏறி இறங்குகிறீர்கள் என்றேன்

 

கண்கள் மலைபோல் விரியச் சொன்னார்

 

கால்களின் பாய்ச்சல்

ஏறி இறங்க வைக்கிறது

மலை வழிக்காட்சிகள்

களைப்பைப் போக்கும் மருந்துகள் என்றார்

 

பிறகு பல காலம் அவரைப்

பார்க்கவில்லை

 

ஒருநாள்

காணக்கிடைந்தார்

 

வயோதிகம் ஒட்டடைப்போல்

அவர் மேல் படிந்து கிடந்தது

 

மலை ஏறி இறங்குவது

குறைந்துவிட்டது என்றார்

 

தேநீர் அருந்தினோம்

உரையாடலுக்குத் தேநீரும்

தேநீருக்கு உரையாடலும் என

நீண்டது

 

கடைசியாக ஒரே ஒருமுறை

மலை ஏறுவேன்

இறங்கமாட்டேன்

குதித்துவிடுவேன்

எனச் சொல்லியபடியே

போய்விட்டார்

 

அதுதான் நான் அவரை

கடைசியாகப் பார்த்தது


அதன் பிறகு பார்க்கவில்லை

 

அவர் சொல்லிப்போனது

அடிக்கடி நினைவில் வந்து

துயரம் தரும்

உடல் நடுங்கும்

 

அவரை இன்னொரு முறை

பார்க்க வேண்டும்

என்று அப்போது தோன்றும்

 

 

 

 

Thursday, March 13, 2025

சிறுமி

 புறப்படப் போகிறது பேருந்து

பேருந்தில் தன் பிறந்த நாள் சாக்லெட் கொடுக்கிறாள் சிறுமி

வாய் திறந்த டப்பாவிலிருந்து

ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்கின்றனர்

கொஞ்சம் பூவை எடுத்து

சிறுமியின் தலையில் வைத்து

வாழ்த்துகிறாள்

ஜன்னலோர இருக்கையில்

அமர்ந்திருக்கும் பூக்காரம்மா

அன்பின் நறுமணம்

பரவுகிறது பேருந்தில்

முன்னேறிய சிறுமி

ஒரு சாக்லெட்டைப் பிரித்து எடுத்து

ஓட்டுநருக்கு ஊட்டுகிறாள்

பாப்பா இவ்வளவு சாக்லெட் வாங்க

காசு இருந்துதா

யாரு வாங்கிக்கொடுத்தா

எங்க அப்பாதான்

எனச்சொல்லி ஓட்டுநரைக்

கட்டிப் பிடிக்கிறாள்

அவர் கண்களைத் துடைத்துக்கொள்கிறார்

வண்டிய எடுங்கப்பா நேரமாகுது

சிறுமி ஆணையிட

நடத்துநர் விசில் அடித்து

அதை ஆமோதிக்க

ஒரு இளவரசியின்

பிறந்த நாள் ஊற்சாகத்தைச் சுமந்துகொண்டு

புறப்படுகிறது பேருந்து



Sunday, January 19, 2025

மெழுகுவத்தி அணையும் வரை...

 மெழுகுவத்தி 

அணையும் வரை

காத்திருந்து

இருளுக்கு

நன்றி சொல்லிவிட்டுப்

போக வேண்டும் என்றார்


நானும் வரவா என்றேன்


ஆழமாகப் பார்த்தார்

பிறகு கேட்டார்

எதற்கு


உங்கள் எண்ணம் பாய்ச்சும்

வெளிச்சத்தில்

என் இருளைப்

போக்கிக்கொண்டே

வரவேண்டும் என்றேன்


எதுவும் பேசாமல் 

அவர் முன்னால் போகப்

பின் தொடர்ந்தேன்

Friday, November 29, 2024

சுவரில் ஆடும் நிழல்

மழை நின்றபாடில்லை
மனதிலும் மின்னல் வெட்டியது
குற்ற உணர்வுகள் மேலெழும்பி வந்தன
மின்விசிறியை நிறுத்தினான்
புழுக்கம் குறைந்தபாடில்லை
இளைப்பாறும் தனிமை
இப்போது பாரமாகத் தெரிந்தது
அது பயத்தின் கதவுகளைத்
திறந்துவிட்டது
அங்குமிங்கும் நடந்தான்
கேள்விகளை
அமைதிப்படுத்த வேண்டும்.
தன்னைத் துன்புறுத்தாத நிம்மதி
அவனுக்குத் தேவைப்பட்டது
அது விடுபடல்
விடுதலை
அல்லது அதுபோல்
மின்விசிறியிலிருந்து
ஒரு ஓவியம் கசிந்து தொங்குவதுபோல்
அவன் நிழல்
சுவரில் ஆடிக்கொண்டிருந்தது

Friday, September 27, 2024

செல்ஃபி


மழையில் நனைந்து போகிறவரை
காரில் அமர்ந்திருப்பவர்
படம் எடுக்கிறார்
நனையும் முதுமை என்று
தலைப்பிட்டு
அதை இன்ஸ்டாகிராமில் போடுகிறார்
மனம் எதையோ
குத்திக் கேட்க
நனைந்து போகிறவர்
அருகில்போய்
காரை நிறுத்துகிறார்
அவரை ஏறிக்கொள்ளச்சொல்கிறார்
கார் நனைந்துவிடும் என்று
அவர் தயக்கம் காட்டுகிறார்
இதழ்கள் விரிய
ஏற்கனவே கார் நனைந்துகொண்டுதான்
இருக்கிறது எனச்சொல்லி
அவரை ஏறவைக்கிறார்
கார் வைப்பரின் சத்தம்
மழையின் இசைபோல் கேட்கிறது
பெரியவர் வீடு நெருங்குகிறது
அவரை இறக்கிவிடும்போது
அவர் கண்களில் இருக்கும்
துளிகளைப் பார்க்கிறார்
பெரியவர் நன்றி சொல்கிறார்
கைகளைப்பற்றி அதைப்பெற்றுக்கொள்கிறார்
அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்
பெரியவர் வேகமாய் வீடு நோக்கிப்போக
சற்றுமுன் போட்ட
போஸ்ட்டை டெலிட் செய்கிறார்
புதிய படத்தைப்போட்டு
அதற்கு ஒரு தலைப்பிடுகிறார்
மழையும் நட்பும்

Sunday, September 22, 2024

சித்திரம்

 மனதில்

தங்கிப்போயிருந்த

சித்திரத்தை

மறதி

கொஞ்சம் கொஞ்சமாய்

அழித்துக்கொண்டே வர

தப்பித்த

எஞ்சிய கோடுகளை

நினைவுகள் சேர்த்து

வேறொரு

சித்திரமாக்கப் பார்க்கிறது

 

Tuesday, September 17, 2024

தெரியுமா உங்களுக்கு

நீங்கள் ஓட நினைத்த தூரத்தை

அவர்கள் ஓடி முடித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் வரைய நினைத்த ஓவியத்தை

அவர்கள் வரைந்து பார்த்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் எழுத நினைத்த கதையை

அவர்கள் எழுதிப் பிரசுரித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் களைப்பில்

இளைப்பாறிய நேரத்தில்

அவர்கள் முனைப்பில்

வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் உறக்கத்தில்

இழந்த வாய்ப்புகளை

அவர்கள் விழிப்பில் வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் காலம் கைகொடுக்கும் என்று

காத்திருந்த நேரத்தில்

அவர்கள் காலத்தோடு கைகோர்த்து

விரைந்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

Thursday, September 12, 2024

இருள் பேசுகிறேன்

இருளிலிருந்து
இருள்
பேசுகிறேன்
உங்களை என்னால்
பார்க்கமுடிகிறது
உங்கள் கண்ணீரில் வழியும்
சொற்கள் என் காதுகளை
வந்தடைகின்றன
அது துயரம் தருகிறது
இது வடிவதற்குள்
வேறுவிதமாக மாறிவிடுகிறீர்கள்
இருளில்
நீங்கள் செய்யும்
அனுமதிக்க முடியாத
விஷயங்களும்
மன்னிக்கமுடியாத
குற்றங்களும்
நிறைய
வெளியே
வெள்ளை மனதுக்காரராகக்
உங்களைக் காட்டிக்கொள்வது
குரூரமான நாடகக் காட்சிகளைப்போல்
இருக்கின்றன
இப்படி ஊமை இருள் நான்
உணர்வது எவ்வளவோ
ஒரு நாள்
ஒரு நண்பர்
ஒரு கோரிக்கை வைத்தார்
அது முடியாது என்றேன்
இது உங்களுக்கும்
தெரிய வேண்டும
இருளே
நீ என் மன இருளோடு
பேசவேண்டும்
என்பதுதான் அது
புன்னகையுடன்
நிராகரித்துவிட்டேன்
கூடுதல் கோபத்தோடு
என்னை மிதித்துப்
போனார்
பிடித்த சிகிரெட்டைக்
கீழே போட்டு
நசுக்கினார்
பூட்ஸ் கால்களால்
மிதித்து சத்தம்
எழுப்பியபடி கடந்தார்
இது
இருளின் வலி அல்ல
உண்மையின் வலி
தீராத வலி
வேறென்ன சொல்ல
உங்களுக்கு
ஒரே ஒரு கோரிக்கை
மன இருளிலிருந்து
வெளியே வரப்பாருங்கள்
அதை
உண்மையாக
அடையப் பாருங்கள்
உங்கள் கண்களில்
மன இருள் இல்லாத
வெளிச்சத்தை
நான் பார்க்கும்போது
நிகழலாம்
நம் உரையாடல்
See insights and ads
Like
Comment
Send
Share

Monday, August 26, 2024

காலம் மிதக்கிறது

 தேதி கிழித்ததுபோல்

நாள் போய்விட்டது

தேங்கிய நினைவுகளில்

காலம் மிதக்கிறது


உணவே

 உணவே

அருகில் வராதே

பசியோடு

உரையாட வேண்டும்


அமைதி

 அமைதியாக

மனம் அலைபாய்வதைப்

பார்த்துக்கொண்டிருந்தேன்

அலைபாய்ந்தபடியே மனம்

மேலும் அமைதியாக

என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது


Friday, March 22, 2024

உணர்வின் தருணம்

 வண்ணக் கொப்பரையில்

தூரிகை விழுந்து

தற்கொலை

செய்துகொள்வதுபோல்

கனவு வந்தபோது

அவன் அலறி துடித்து

எழுந்தான்

அந்த உணர்வின்

தருணம்தான்

அவனை

ஓவியனாக்கியது

Monday, March 18, 2024

பறவையின் பாடல்

பறவைபோன தடத்தில்

மிதந்துகொண்டிருந்தன வார்த்தைகள்

 

எதுவும் பிரிந்துபோகாமல்

காற்று மெல்ல ஊதி ஒன்றாக்கி

என்னிடம்

கொண்டுவந்து சேர்த்தது

 

கவனித்து வரிசையாக்கி

இசைலயத்தோடு எழுதினேன்

 

பிறகு பாடியபோது

அதே பறவை

ஒரு கிளை மீதமர்ந்து

கேட்டுக்கொண்டிருந்தது