Tuesday, January 29, 2008

சிதையும் சொற்கள்

மறையும் சூரியன்
கவிதையில் உதிப்பது
அழகாய் இருக்கிறது

ஆனாலும்
சொற்களைச் சிதைக்கிறது
சுள்ளிப் பொறுக்கும் கிழவி
வீடு சேர வேண்டும்
என்ற யோசனை

கிழவியைப் பின்தள்ளிப்
போகிறது ரயில்
சத்தலயம் பிசகாமல்

Monday, January 21, 2008

மணக்கும் இசை

நிரம்பி வழியும்
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை

என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
மலைகளை வரைபவன்
ஏறிக்கொண்டிருக்கிறான்
கோடுகள் வழியே

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Sunday, January 20, 2008

நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...

எனது கதையில்
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்

சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்

அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்

சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்

நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது

கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்

கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி

Thursday, January 10, 2008

சிறுமியின் மரம்

தாத்தாவுடன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்

பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்

கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி

இது எந்த மரம் சொல்லுங்க

விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்

நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு

அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்

Wednesday, December 26, 2007

நான்...

நான்
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Monday, December 24, 2007

கிளியின் புன்னகை

கூண்டு கிளியுடன்
வருவேன் என்று
காத்திருக்கும்
மகளிடம் போய்
எப்படிச் சொல்வேன்
வாங்கி வரும் வழியில்
கிளியை வானம் விட்டதும்
கூண்டினை தூக்கி எறிந்ததும்

கதைபோல் மகளிடம்
சொல்லும் போது உணரலாம்
பறவையின் சுதந்திரம்

அப்போது அவள் உதட்டில்
வந்து அமரும்
அந்த கிளியின் புன்னகை

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

Wednesday, December 19, 2007

எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி
வரைந்த வீட்டில்

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Tuesday, December 18, 2007

அவருக்காக
நான் மன்னிப்புக் கேட்டேன்

எனக்காக
யாராவது கேட்பார்கள்

தவறுகள் சுற்றித்திரியும்
பயமற்று

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியானது)

Sunday, December 09, 2007

கதையின் பயணங்கள்

ரயில் பயணத்தை அழகாக்கியவர்
கதை சொல்லிக்கொண்டே வந்தார்

ஒப்பனைக் கலப்பில்லாத
அவர் சொற்களிலிருந்து
வெளியான உயிர்
எங்களோடு பயணம்
செய்வது போலிருந்தது

மலைக்குகை தாண்டியது ரயில்
சத்தமிட்டபடி

கதையை சீக்கிரம்
முடித்து விடுவீர்களா என்றேன்

நான் இறங்குவதற்கு முன்பா
நீங்கள் இற்ங்குவதற்கு முன்பா
யோசனைகளை கண்ணில்
குவித்தபடி கேட்டார்

அவரும் நானும்
இறங்கிய பின்னும்
கதை தொடர்ந்து கொண்டிருந்தது
பயணத்தை
வேறு வேறு பயணிகளோடு

நாக்குகள்

நாக்கால் மூக்கைத்தொட்டு
வேடிக்கைக் காட்டியவனை
எல்லோரும் பார்த்தார்கள்

அவன் தட்டு
காலியாக இருந்தது

சிரித்து கைதட்டி
திரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமி

சிறுமிக்காக
மீண்டும் செய்தான்

வீட்டிலிருந்த யாராலும்
முடியவில்லை

தோல்வியுடன் திரும்பின
நாக்குகள்

கடுகடுப்பாய் இருந்தவர்
நாக்கைக் கடித்துக்கொண்டார்

பசிக்கு ஏதாவது போடவா
கேட்டார்கள்

சிரித்து மகிழ்ந்த சிறுமியால்
பசியடங்கிப்போன அவன்
அவளுக்கு ஒரு முத்தம்
தர வேண்டும் என்றான்

கதவு மூடப்பட்டது

சென்று கொண்டிருந்த
அவனோடு வந்து
மறைந்து போனது
சிறுமியின் அழுகுரல்

Thursday, December 06, 2007

கேட்காதே...

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை

ரகசியமாய் பேசிச்செல்வான்

ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

அவன் வரிகளை
மெளனமாய் பார்ப்பதற்குள்
போயிருந்தான்

ஒரு மழைநாளில்
அவனுக்குத் தேநீர்
வாங்கித் தந்து கேட்டேன்

உரத்துப் பார்த்தான்

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

வாயிலிருந்து நெருப்பு
சுழன்று வந்து
அவனுள் போனது

இன்னொரு தேநீருக்குப்பின்
அதன் பொருள் கேட்டேன்

கேட்காதே
நீயே தேடு என்றான்

சிரித்தான்
சத்தமாய் சொல்லிச் சென்றான்

நீ பிறக்காதவன்
நான் இறக்காதவன்
துடைக்கும் புகைப்படம்
ஞாபக தூசிகள்
திறக்கும் காலம்

Thursday, November 29, 2007

தற்கொலை செய்ய இருந்த
மின் விசிறியிலிருந்து வெளியேறுகின்றன
மரணத்தின் புழுக்கங்கள்

Wednesday, November 28, 2007

எறும்பின் சொற்கள்

பிரித்து வைத்திருந்த
புத்தகத்தில் நிகழ்ந்தது

எழுத்துக்கள் எல்லாம்
எறும்புகளாயின

வெள்ளையானது பக்கம்

தாளில் ஒளிந்திருக்கும்
எதையோ கண்டுபிடிப்பதுபோல்
அங்கும் இங்கும் வேகமாயின

எறும்புகளின் சந்தையானது
விரித்து வைத்த புத்தகம்

மூடினால் நசுங்கி
இறந்து போகலாம்

புத்தகம் திறந்திருக்க
அறையை மூடிவிட்டுக் கிளம்பினேன்

திரும்பியபோது
அப்படியே இருந்தன எழுத்துக்கள்

எறும்புகள் எதுவுமில்லை

பிரமிப்பிலிருத்து மீண்டு
நகர்ந்தது பார்வை
கவிதையின் தலைப்புக்கு

எறும்பின் சொற்கள்

எறும்பைக் கொல்லாத
ஒரு மனிதனை
தான் இறந்து போவதற்குள்
பார்க்க வேண்டும் என்று
ஒரு எறும்பு சொல்வதுபோல்
முடிந்திருந்த்து

புத்தகத்தை மூடாமல்
அப்படியே பார்த்தேன்

தாளை சுதந்திரவெளியாக்கி
போனது ஒரு எறும்பு

Tuesday, November 13, 2007

கனவிலிருந்து...

கனவிலிருந்து
வெளியேறிய தேள்
இரவைக் கொட்டும்
விஷமற்ற புன்னகையில்
அதிகாலை ஒளி

மழை

நான் இருந்த இடத்தில்
இல்லாதபோது
பெய்தது மழை
இல்லாத என்னை
நனைத்தபடி
பார்க்கிறது மழை
ஒதுங்கிய என்னை

Tuesday, November 06, 2007

கூட்டம் நிறைந்த பேருந்து

திரும்புகிறது பேருந்து
நின்றபடியே பெரியவர்
எழுந்து இடம்தர
யாருக்கும் இடமில்லை
மனதில்
லேசாக சாய்கிறார்
கண் மூடித் திறக்கிறார்
நெறிசலில் நெளிகிறது
நின்று நகர்கிறது
இன்னும் வீங்கிப் பேருந்து
இருமலைத் துண்டால் மூடுகிறார்
கசியும் சத்தம்
உள் முழுதும்
வருகிறது என் நிறுத்தம்
இருக்கை பெரியவருக்குதான்
புன்னகைத்து
உட்காரச்சொல்லி
இறங்குகிறேன்
போகிறது பேருந்து
பெரியவர் இல்லை
கூடவே இறங்கியவர்
சொல்லிப் போகிறார்
காலியான வாகனம்
செளகர்யமாக இருக்கும்
கூட்டம் நிறைந்த பேருந்தில்தான்
வாழ்க்கை இருக்கிறது

Saturday, September 15, 2007

குழந்தைகள் உலகம்

தாளில் வரைந்த
வட்டத்தைத்
தள்ளிவிட்டாள் அம்முக்குட்டி

வெளியேறிய வட்டம்
சக்கரமானது

சமையல் கட்டில்
நுழைந்த சக்கரத்தைச்
சத்தம் போட்டாள் அம்மா

அங்கிருந்து
திரும்பிய சக்கரம்
அப்பா காலைத் தட்டியது

பூனை என்று
பயந்த அப்பா
உடனே உதைத்தார்

அடிபட்டு
முனகிய சக்கரம் எழுந்து
வீடு முழுதும்
விளையாடியது

கைதட்டிய அம்முக்குட்டி
சக்கரத்தைக் கூப்பிட்டாள்

முகதிருத்தத்தில் காயமாகி
ரத்தம் துடைத்து
வெளியே வந்த அப்பா
கிறுக்கலை நிறுத்திப்
படிக்கும்படித் திட்டினார்

அப்பாவைப் பார்த்த
அம்முக்குட்டி
வரையத்தொடங்கினாள்
பெரிய மீசை கொண்ட
பூனையை

Saturday, September 08, 2007

துக்கம் தராத பாடல்

தூக்கமற்ற இரவில்
வயலினைப் பார்க்கிறன்
இசைக்கலைஞன்

நதி எனப்பாய்ந்த
இசை ஊற்றுகள்
மறுபடி நனைக்கின்றன

இமைகளை
சேர்க்க விடாத இரவு
சத்தமிடுகிறது

தனக்குள் விழித்திருக்கும்
முகம் தெரியாத ஒன்றை
வாசிக்க விரும்புகிறான்

குழந்தையாகிறது
கைகளில் வயலின்

அடிவானத்தில்
வண்ணங்கள் பூசும்
விடியலைப் பார்த்தபடி
இசைக்கிறான்
யாருக்கும் துக்கம் தராத
ஒரு பாடலை