Thursday, December 06, 2007

கேட்காதே...

கடந்து போகும் அவனைப்
பார்த்திருக்கிறேன்
பல முறை

ரகசியமாய் பேசிச்செல்வான்

ஒரு நாள்
கேட்க நேரிட்டது
அவன் சொன்னதை

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

அவன் வரிகளை
மெளனமாய் பார்ப்பதற்குள்
போயிருந்தான்

ஒரு மழைநாளில்
அவனுக்குத் தேநீர்
வாங்கித் தந்து கேட்டேன்

உரத்துப் பார்த்தான்

பிறக்காத மனிதன் இறப்பதில்லை
இறக்காத மனிதன் பிறப்பதில்லை

வாயிலிருந்து நெருப்பு
சுழன்று வந்து
அவனுள் போனது

இன்னொரு தேநீருக்குப்பின்
அதன் பொருள் கேட்டேன்

கேட்காதே
நீயே தேடு என்றான்

சிரித்தான்
சத்தமாய் சொல்லிச் சென்றான்

நீ பிறக்காதவன்
நான் இறக்காதவன்

1 comment: