Sunday, December 09, 2007

நாக்குகள்

நாக்கால் மூக்கைத்தொட்டு
வேடிக்கைக் காட்டியவனை
எல்லோரும் பார்த்தார்கள்

அவன் தட்டு
காலியாக இருந்தது

சிரித்து கைதட்டி
திரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமி

சிறுமிக்காக
மீண்டும் செய்தான்

வீட்டிலிருந்த யாராலும்
முடியவில்லை

தோல்வியுடன் திரும்பின
நாக்குகள்

கடுகடுப்பாய் இருந்தவர்
நாக்கைக் கடித்துக்கொண்டார்

பசிக்கு ஏதாவது போடவா
கேட்டார்கள்

சிரித்து மகிழ்ந்த சிறுமியால்
பசியடங்கிப்போன அவன்
அவளுக்கு ஒரு முத்தம்
தர வேண்டும் என்றான்

கதவு மூடப்பட்டது

சென்று கொண்டிருந்த
அவனோடு வந்து
மறைந்து போனது
சிறுமியின் அழுகுரல்

3 comments:

  1. சென்று கொண்டிருந்த
    அவனோடு வந்து
    மறைந்து போனது
    சிறுமியின் அழுகுரல்//

    குழந்தைக்குத் தெரியுமா நாம் விதித்து காத்துவரும் சாதி பேதங்கள், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்கள்...

    "நீங்கள் அவர்களைப் (குழந்தைகளைப்) போல் ஆகாவிட்டால் உங்களுக்கு மோட்சம் கிடையாது". - பைபிள்

    ReplyDelete
  2. அருமையாக இருக்கிறது.

    -ஞானசேகர்

    ReplyDelete
  3. இந்த உலகம் திருந்தவே திருந்தாதோ?
    :(

    ReplyDelete