Sunday, September 06, 2009

தூங்காத நெடுஞ்சாலை

முன்னிரவில்
ரகசியமாய்
விசும்பி அழும் பெண்ணுக்குள்
என்ன ஓடுகிறது என்று
தெரியவில்லை

முகம் துடைத்து
நிதானித்து
மீண்டும் மெளனமாய்
அழுகிறாள்

அவள் பக்கத்து இருக்கை
காலியாக உள்ளது
பின்னால் இருக்கும் எனக்கு
எல்லாம் கேட்கிறது

என் தூக்கத்தை
களவாடி இருக்கிறது
தெரியாத ஒரு அழுகுரல்

காற்று வேண்டி
கண்ணாடியைத் திறந்து வைக்கிறேன்

வாகன ஓட்டிகளுக்கு
நட்பான
தூங்காத நெடுஞ்சாலை

இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி

பேருந்தில் சுற்றி வருகிறது
வயிறு பெருத்த கனவானின்
குறட்டை சத்தம்

என் யோசனை சிலுவையில்
ஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது

அதிகாலை நிறுத்ததில்
இறங்கிப் போனாள்
இரவின் எந்த சுவடும் அற்று
வேறொரு பெண்ணாய்
இன்னொரு நாளுக்குள்

10 comments:

  1. அருமையான பயணச்சித்திரம் இருள் வண்ணத்தில் மிளிர்கிறது சார்...
    //இலேசாக கண் மூட
    உறக்கத்தின் மீது விழுகிறது
    அவள் கண்ணீர் துளி//
    இங்கு வண்ணம் கொஞ்சம் அழுத்தமாகவே படிந்திருக்கிறது...
    //மெளமாய்//
    சரி செய்யுங்கள் சார்.. மௌனமாய்

    ReplyDelete
  2. கவிதை அற்புதமாய் நகர்கிறது காட்சிகளுடன்

    ReplyDelete
  3. தூங்காத நெடுஞ்சாலை

    //தூங்காத‌ நெடுங்சாலை நீங்க‌ளும் தானோ?//

    ReplyDelete
  4. எல்லா பெண்களும் வாழ்க்கையை இப்படித்தான் வழிநடத்துகிறார்கள் raajaa.

    ReplyDelete
  5. நல்லதொரு நாடகம் பார்த்த உணர்வு ... ஆனால் அதன் நிஜங்கள் சுடுகின்றன.

    ReplyDelete
  6. என் யோசனை சிலுவையில்
    ஆணிகள் அறைந்திருந்த
    அவள் அழுகை
    நின்றிருப்பது போல்
    தெரிகிறது

    Manam Kankinra kavidhai...

    ReplyDelete
  7. thanks ashok,uyirodai,kalyani suresh,
    dharumi,seral and yaazini,

    ReplyDelete
  8. என்னை நானே வாசிப்பது போல் இருக்கிறது
    எத்தனையோ பயணங்களில் நான் விசும்பியது உங்களுக்கு எப்படித் தெரிந்தது ராஜா?

    ReplyDelete