Tuesday, September 29, 2009

தலைப்பு

நள்ளிரவில் எழுதிய கவிதைக்கு
பெயர் தேடிக் கொண்டிருந்தேன்
வெளிச்சத்தை தலைப்பாக
விட்டுச் சென்றது விடியல்

Sunday, September 27, 2009

மைக்கேலின் ஓவியம்

வரைந்தபடி சொல்கிறான் மைக்கேல்
தாளில் சிலுவையை
அறைந்து கொண்டிருக்கிறேன்

குழந்தையின் கடல்

கடலை வீட்டுக்கு கூப்பிட்டுப் போகலாம்
என அழுது அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிப் போனது
அலைகளின் தாலாட்டுக் கேட்டு

நாங்கள் திரும்பி வந்தோம்
கடலை விட்டு விட்டு

...இருக்கிறது

திரும்பாமல் போகலாம்
நம்பிக்கை இருக்கிறது

திரும்பிப் போகலாம்
பாதை இருக்கிறது

Tuesday, September 22, 2009

பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை

பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை

திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது

ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்

பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி

அந்தக் காகிதம்
குளிர்ச் சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்

வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்

ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக்கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்

இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது

தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்

சிலிர்த்துப் போகின்றன எழுத்துக்கள்

கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்

கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்

கூடி இருக்கிறது
கவிதையின் சுவை

Monday, September 21, 2009

சே குவாராவின் கனவில்

சே குவாராவின் கனவில்
நான் வருவது போல்
கண்ட கனவு
சொல்லிக்கொண்டே இருக்கிறது

விழித்திரு எப்போதும்

Friday, September 18, 2009

உண்மை

என் வயதைவிட
என் பொய்களுக்கு
வயது அதிகம்

என் மரணத்தைவிட
என் பொய்களுக்கு
உயிர் அதிகம்

Thursday, September 17, 2009

நீந்தும் வரிகள்

மீனாக நீந்து
இல்லை பிணமாக
கரை ஒதுங்கு

அப்பாவின் இந்த வரிகளை
நான் நினைக்க மறந்தாலும்
அவை நீந்த மறப்பதில்லை
என் செயல்களில்

காற்றின் பெருவெளி

காற்றின் பெருவெளியில்
அப்பாவின் இசை

அவர் விரல்கள் ஒற்றி எடுக்க
பரவுகிறது நாதம்
புல்லாங்குழலிலிருந்து

அருகே வரும் குழந்தை
நாய்க்குட்டி பொம்மையை
வைத்துவிட்டுப் பார்க்கிறது

வாசிப்பின் இடையே அப்பா
மெல்ல கண் திறக்கும்போது
புல்லாங்குழலைக் கேட்கிறது

வாங்கிப் போய் அதை
ஒரு பொம்மையாக்கி விளையாடுகிறது

புல்லாங்குழலைத் தூக்கி எறிகிறது

பின் ஓடிப்போய் எடுக்கிறது

பிரியமான நாய்க்குட்டியைத்
தட்டுகிறது

தன் வாயில் வைத்து
ஊதிப் பார்க்கிறது

ததும்பும் ஆனந்தத்துடன்
இரு வேறு அனுபவங்களில்
திளைக்கிறார் அப்பா

குழந்தையின் கையில்
இசை விளையாடுவது போன்றும்

தனக்குத் தெரியாத இசையை
குழந்தை கற்பிப்பது போன்றும்

Tuesday, September 15, 2009

தேவதைகளின் கணக்கு

விண்ணிலும் மண்ணிலும் உள்ள
தேவதைகளின் கணக்கு
என்னிடமில்லை

என்றாலும்
தேவதைகள் எல்லோரையும்
அடக்கிவிட முடியும்
இந்தக் குழந்தையின்
ஒற்றைப் புன்னகைக்குள்

சவப்பெட்டியின் அடியில்

சவப்பெட்டியின் அடியில்
பாதி நசுங்கிய மண்புழு
மீதி உயிரோடு போராடுகிறது
வெளியே வர

ஒரு புராதன சொல்

ஒரு புராதன சொல்
கவிதையில் புகுந்து கொண்டு
மொத்த கட்டுமானத்தையும்
கலைத்துப் போட்டது

ஒரு அகராதியின் குணம்
தன்னிடம் இருப்பதாக
சொல்லியபடி
எழுதிய காகிதங்களைத்
தின்று முடித்தது

பின் ஓடிப் போனது
புராதன வெளிக்குள்

சொல் சென்ற
வழி எங்கும்
இறைந்து கிடந்ததன
காலத்தின் தூசிகளும்
கவிதையின் சில்லுகளும்

Saturday, September 12, 2009

சாவி

திரும்பி வருகையில்
சாவியைத் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருந்தார்கள்

தன் சின்ன நோட்டில்
சாவியை வரைந்த சிறுமி
அதை எடுத்து
பூட்டைத் திறந்து
உள்ளே செல்லும்போது
சொல்லிவிட்டுப் போனாள்

உங்கள் சாவி கிடைத்தவுடன்
திறந்து கொண்டு
வாருங்கள்

முனுசாமி தாத்தா

காலில் சக்கரம் மாட்டியது போல்
சுற்றி வருவார் முனுசாமி தாத்தா

எது கேட்டாலும்
அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா
நேரம் இருக்கு என்று
சொல்லிவிட்டு பறப்பார்
இளமை சாரல் அடிக்க

பாட்டி ஒரு நாள் கோபத்தில்
கத்தினாள்

சிரித்தபடியே தாத்தா
சொல்லிவிட்டுப் போனார்

அட சாவறதுக்கெல்லாம்
நமக்கு எங்க நேரம் இருக்கு

வழிகாட்டி பலகை

வழிகாட்டி பலகை
சுழல்கிறது
காற்றின் குரலுக்கேற்ப

பயணம் விரிகிறது
எல்லா திசைகளிலும்

எதுவுமற்று எல்லாம்

நானற்று கவிதை
கவிதையற்று நான்
எதுவுமற்று எல்லாம்

Friday, September 11, 2009

குட்டிச் சித்திரங்கள்

என் ஒவ்வொரு கேள்விக்கும்
பதிலை படமாக
வரைந்து காட்டினாள் குழந்தை

அவள் பிஞ்சு விரல் பிடித்து
வெளியே வந்தன
குட்டிச் சித்திரங்கள்

வண்ணங்களில் நுரைத்து
மிதந்து போனது
குழந்தையின் மொழி

முற்றிலுமாக
என் கேள்விகள் வடிந்து விட
கடைசியாக
அவள் பெயர் கேட்டேன்

எல்லா வண்ணங்களையும் குழைத்து
என் மேல் பூசி விட்டு
வீட்டுக்குள் ஓடிப்போய்
கதவைச் சாற்றிக் கொணடாள்

இந்த வண்ணங்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
குழந்தையின் பெயரை

Wednesday, September 09, 2009

மின்னல் குட்டி

அணில் சொன்ன கதையில்
மரம் இருந்தது

மரத்தில் விளையாடிய போது
கதை மறைந்தது

ஒரு கிளையில் அணிலும்
மறு கிளையில் நானும்

எனது வார்த்தைகளை
பழங்களாகத் திருப்பித் தந்தது

ஒவ்வொரு பழமும்
ஒவ்வொரு ருசியில்

கிளை அசைத்து
ஒளியை ஆடவிட்டது

குதித்து உச்சி ஏறி
கை தட்டி சிரித்தது

பயத்தைப் போட்டு விட்டு
மேலே வா என்றது

நகராத என் மேல் இரக்கப்பட்டு
கீழிறங்கியது

ஒரு பொம்மை போல்
என்னை வைத்து
விளையாடிய அணிலுக்கு
மின்னல் குட்டி
என்று பெயர் வைத்தேன்

தன் சகாக்களுக்கு என்னை
அறிமுகம் செய்தது

நீ மாமிசம் புசிப்பவனா
வேகமாய் கேட்டது
சற்று வயதான அணில்

எனது ஆமாம்
கோபத்தை உண்டாக்கியது
அந்த மையத்தில்

விருந்தினரை நாகரீகமாக நடத்த வேண்டும்
எனக்காக வாதாடிய மின்னல் குட்டி
மறைந்தது போனது
கதையில் என்னை விட்டு விட்டு

Sunday, September 06, 2009

வரியின் அடியில்

என் அழுகையில்
கண்ணீர் ஞானமடைகிறது
இதை எழுதிய போது
வரியின் அடியில்
ஓடியது புன்னகை

வனம்

உள்ளங்கையில்
மரம் முளைத்தது

தலையில் பறவைகள்
கூடு கட்டின

வியர்வையில் மிதந்தன
உதிர்ந்த இலைகள்

மரங்கொத்தி கையில்
ஓட்டைகள் போட்டு
புல்லாங்குழலாக்கி இசைத்தது

மூச்சுக்குள் ஓடி
வெளி வந்து விளையாடின
பனித்துளிகள்

மயிர்கால்கள் புற்களாயின

கால்களின் ஈரத்தில் மன்புழுக்கள்
நெளிந்தன

புன்னகையைத் தடவிப்பார்த்த
குருவி நன்றி சொல்லி
சுற்றி வந்தது

காட்டின் மொழியை
பேசத் தொடங்கியது நாக்கு

விரிந்த சத்தத்தை
நனைத்தது மழை

மெல்ல நடமாடும்
வனமாகியது உயிர்

வனத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது
உடல்

தூங்காத நெடுஞ்சாலை

முன்னிரவில்
ரகசியமாய்
விசும்பி அழும் பெண்ணுக்குள்
என்ன ஓடுகிறது என்று
தெரியவில்லை

முகம் துடைத்து
நிதானித்து
மீண்டும் மெளனமாய்
அழுகிறாள்

அவள் பக்கத்து இருக்கை
காலியாக உள்ளது
பின்னால் இருக்கும் எனக்கு
எல்லாம் கேட்கிறது

என் தூக்கத்தை
களவாடி இருக்கிறது
தெரியாத ஒரு அழுகுரல்

காற்று வேண்டி
கண்ணாடியைத் திறந்து வைக்கிறேன்

வாகன ஓட்டிகளுக்கு
நட்பான
தூங்காத நெடுஞ்சாலை

இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி

பேருந்தில் சுற்றி வருகிறது
வயிறு பெருத்த கனவானின்
குறட்டை சத்தம்

என் யோசனை சிலுவையில்
ஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது

அதிகாலை நிறுத்ததில்
இறங்கிப் போனாள்
இரவின் எந்த சுவடும் அற்று
வேறொரு பெண்ணாய்
இன்னொரு நாளுக்குள்

Friday, September 04, 2009

மூவர் மற்றும் கடல்

அப்பா மீன்கள் விற்கிறார்

மகன் மீன்களைத் தூக்கி
கடலில் எறிகிறான்

அப்பா மீன்கள் விற்ற பணத்தை
எண்ணியபடி நடக்கிறார்

மகன் எறிந்த மீன்களின் கணக்கை
போட்டபடி நடக்கிறான்

சிரிக்கிறது கடல்
தந்தை மகன் மற்றும்
என்னைப் பார்த்து

நள்ளிரவில்

நள்ளிரவில் விழித்துக் கொண்டோம்

முற்பகல் நடந்த
சண்டையை நினைத்துப் பார்த்தோம்

பின் உறங்கப் போனோம்

உன் தலையணை அடியில்
கத்தி இருந்தது

என் தலையணை அடியில்
கத்திக்கான ரத்தம் இருந்தது

Tuesday, September 01, 2009

கண்ணாடி கோப்பை

ஏறக்குறைய
விழுந்து விடுவதுபோல்
மேஜை மீது
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும்
கண்ணாடி கோப்பை
விழத்தொடங்கியது
எதிர்பார்த்தது போலவே
எவரின் கையோ தீண்டி
உடைந்து நொறுங்கிய
சில்லுகளின் சத்தம்
கேட்ட கவிதை
தன் வரிகளுக்குள்
பத்திரமாய்
தள்ளி வைத்துக் கொண்டது
அதே கண்ணாடி கோப்பையை