Sunday, November 20, 2022

நான் எழுதிக்கொண்டிருந்தபோது

நான் எழுதிக்கொண்டிருந்தபோது

ஒரு பூனை தாவிக்குதித்து ஓடியது

மழை எட்டிப்பார்த்தது

சுவர்க் கடிகாரம் ஒழுங்குடன் ஒலித்தது

தூரத்து டீவியிலிருந்து குரல்கள்

படிக்கட்டில் யாரோ

வேகமாக ஓடினார்

ஜன்னல் திரைச்சீலை நடனமிட்டது

மேஜையை ஒரு எறும்பு

தன் ஊர்தலில் அளந்தது

பூச்சியை விழுங்கிய பல்லி

மெல்ல உள்ளே தள்ளியது

பசி வேண்டுகோள் வைத்தது

காலிங்பெல்லை யாரோ அடித்தார்கள்

நான் நிதானமாய் எழுந்து போய்

கதவைத் திறந்தேன்

அவர் வேகமாக உள்ளே வந்து

எழுத்துக்குள்

உணவை வைத்துச் சென்றார்

-         ராஜா சந்திரசேகர்

 

 

Friday, August 12, 2022

துல்லியங்களின் கடவுள்

நான் துல்லியங்களின் கடவுள்
தோராயப் பூசாரித்தனம்
என்னிடமில்லை

Tuesday, August 02, 2022

சுமப்பவர்

 இல்லாததைச்

சுமப்பவர்

இறக்கிவைக்கப்

போராடுகிறார்

அன்பு போதும்

அன்பு போதும்

என்றார்

 பசிக்கும்

அது போதுமா

என்றேன்

 அன்பான வயிறு

தேடி

எதையாவது

பெற்றுக்கொள்ளும்

சொல்லிவிட்டுப்போனார்

Friday, July 22, 2022

என் கண்களில்...

 கைதட்டிக் கூப்பிட்டவர்

அப்பா போலிருந்தார்

அருகில்போய் கேட்டேன்

ஒன்னுமில்ல தம்பி

என் பையன் சாயல்ல இருந்தீங்க

அதான் ஒருவாட்டி

பாத்துக்கலாம்னு கூப்டேன்

கண்களைத் துடைத்துக்கொண்டார்

ஏன் அழறீங்க என்றேன்

அவன்போயி சேர்ந்துட்டான் என்றார்

வேறெதும்

சொல்லிக்கொள்ளாமல்

திரும்பி நடந்தேன்

என் கண்களில்

நீர் இருந்தது

 

Friday, July 01, 2022

நம்மிடமிருந்து

உரையாடல் கனிந்து முடிய

ஒரு சிறு அணைப்பு

மிச்சமிருக்கிறது என்றாள்

சிறு முத்தமும் என்றான்

நாணித் தலைகுனிந்தாள்

பிறகு தலை நிமிர்ந்து

அவன் கண்களிடம் சொன்னாள்

முதலில் அணைப்பு

என்னிடமிருந்து வரட்டும்

பிறகு முத்தம்

உன்னிடமிருந்து…

Tuesday, April 26, 2022

ஒருவரும் இல்லை

 என்னோடு உறங்கிக்கொண்டிருந்தவர்

சொல்லிக்கொள்ளாமல்

அமைதியாகப் போய்விட்டார்

இறந்துவிட்டார்

நானும் இறந்துகொண்டிருக்கிறேன்

சொல்லிச் செல்ல

அருகில் ஒருவரும் இல்லாமல்

எப்போது பூமிக்குத் திரும்புவீர்கள்

 உங்கள் ஒப்பனையும் நடிப்பும் அருமை

உங்கள் வசனங்கள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன

மேடை முழுதும் புயல்போல் ஆக்கிரமிக்கிறீர்கள்

உங்கள் கர்ஜனை அரங்கை விழுங்குகிறது

இமைமூடாது என்னென்னவோ செய்கிறீர்கள்

சபையோரை உறங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறீர்கள்

காட்சிகளும் திரைக்கதையும் உங்களுக்கு

வளைந்துகொடுக்கின்றன

நீங்கள் நிமிர்ந்து நடிக்கிறீர்கள்

பலவிதமாய் நடிக்கிறீர்கள்

மிதக்கிறீர்கள்

பறக்கிறீர்கள்

உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்க வேண்டும்

மனிதனாக எப்போது

பூமிக்குத் திரும்புவீர்கள்

Wednesday, April 20, 2022

யாரோ

மலையுச்சிக்கு வந்து

மலையோடு

ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு

செல்போனைக் கீழே வைத்துவிட்டு

மெல்ல மூச்சை

உள்ளிழுத்து வெளிவிட்டு

குதித்துவிட்டான்

சற்று நேரம் கழித்து

மேலேறி வந்த பெரியவர்

வியர்வையைத் துடைத்து

செல்போனைக் கையில் எடுத்து

சுற்றும் முற்றும் பார்த்துச் சொல்கிறார்

“யாரோ மறந்து வச்சிட்டுப் போயிட்டாங்க’’

“யாரோ வச்சிட்டுக் குதிச்சிட்டாங்க’’

நடுக்கத்துடன் மலை சொன்னது

அவருக்குக் கேட்கவில்லை

 


Tuesday, April 19, 2022

மூதாட்டி

 ஆளரவமற்ற இடத்தில்

ஆலயத்தின் மூலையில்

இமைமூடி

தவம்போல் அமர்ந்திருக்கும்

மூதாட்டியின் கண்களிலிருந்து

வழிகிறது நீர்

அவள் மேல்

அசைகிறது ஒளிக்கீற்று

பெருவயதுக்காரி

கண் திறக்கும்போது

பிரபஞ்சம்  சிறிதேனும்

பேரன்பைத் தரக்கூடும்

Sunday, April 10, 2022

துயரமும் வலியும்

 துயரமும் வலியும்

ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டார்கள் நானும் விடைபெற வேண்டும் என்னிடமிருந்து வலியும் துயரமும்

Friday, April 01, 2022

காலம் சுழல்கிறது

அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்

இவர் பேசுவதில்லை

மற்றவர் குறுஞ்செய்திகளும் குறைந்துபோனது

இன்னொருவர் அன்பிரண்ட் செய்துவிட்டார்

உள்ளேன் அய்யா என்பது போலிருந்த அன்பும்

ஓடி எங்கோ ஒளிந்துகொண்டது

எதிர்படும் ஒருவர் தெருமாறிச் செல்கிறார்

குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்

மன்னிப்பைக் கடலில் எறிந்துவிட்டு வாக்கிங் போகிறார்

சுவரெழுப்பிக்கொண்டவர்கள் கொஞ்சம் பேர்

ஜன்னலில்லாத சுவர்கள் என்பது வருத்தமான தகவல்

விஷேசங்களில் சந்தித்தால் உண்டு

விஷேசங்களுக்கான அழைப்புகள் வருவது குறைந்துபோனது

அல்லது விஷேசங்கள் ரகசியமானது

முகம் தெரியாதவர் புன்னகைக்கிறார்

கடவுள் பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்டார்.

மற்றபடி காலம் சுழல்கிறது

இசைத்தட்டு போல

அதில் எனக்கான இசையைக் கேட்டுக்கொள்கிறேன்

குட்டிமழைக் கூப்பிடுகிறது

புழுக்கத்தை ஆற்றிக்கொள்ளக் கொஞ்சம் போய்

நனைந்துவிட்டு வர வேண்டும்.

Wednesday, December 29, 2021

எறும்பு

தனிமையின் மேல்

ஊரும் எறும்பு

மெளனத்தின் மேல்

ஊரும் எறும்பு

என் மேல்

ஊரும் எறும்பு

மொத்தம்

மூன்று எறும்புகள் என்பீர்கள்

இல்லை 

ஒன்றுதான்

 

  

 

Wednesday, November 10, 2021

மறதியின் மணம்

யாரோ மறந்துவிட்டுப்போன பூக்கள்

பேருந்தின் ஜன்னலோரத்தில் இருந்தன

எட்டிப்பார்த்த பூவிதழ்கள்

காற்றில் அசைந்தன

அது அநாதையாகிவிட்ட

குழந்தை ஏக்கம் மனதில் ஓடியது

அடுத்த நிறுத்தத்தில்

வந்து ஏறிய பெண்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

அதை மடியில் எடுத்து வைத்தாள்

அதிலிருந்து ஒரு பூவை எடுத்து

தலைக்கு வைத்துக்கொண்டாள்

புன்னகை மணக்க

எங்கேயாவது எப்போதாவது

மனதை வாடவிடாமல்

யாராவது பார்த்துக்கொள்கிறார்கள்

Thursday, October 21, 2021

கதை

 குழந்தை பசியைச் சொல்கிறது

அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்

குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது

அம்மா வேறொரு கதை சொல்கிறாள்

புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது

இன்னொரு கத சொல்லும்மா

பயணி

 “நீங்கள்”

“பயணி”

“நீங்கள்”

“நானும் பயணி”

“எங்கு போகிறீர்கள்”

“இலக்கு நிர்ணயம் எதுவுமில்லை

போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்கள்”

“நானும் அப்படித்தான்”

“எங்கிருந்து வருகிறீர்கள்”

“என்னிடமிருந்து”

“நல்ல பதில்...நீங்கள்”

“தாயின் கருவறையிலிருந்து”

“இதுவும் நல்ல பதில்தான்”

“நாம் சேர்ந்து போகலாமா”

“மன்னிக்கவும்

 “வேண்டாம் என்கிறீர்களா”

“மறுபடியும் மன்னிக்கவும்”

“தனிமையும் பயணமும்

சரியான துணை...சரிதானே...”

“மிகச்சரி”

“நன்றி உங்கள் பதில்களுக்கு

வேறு எங்காவது

மறுபடி நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்து

அப்போது இதே கேள்வியைக் கேட்டால்

ஒத்துக்கொள்வீர்களா”

 “அந்தத் தருணத்தில்

வரப்போகும் பதிலை

இந்தத் தருணத்தில்

சொல்லும் சக்தி

எனக்குக் கிடையாது”

“பார்க்கலாம்”

“பார்க்கலாம்”

“சந்திப்போம்”

“சந்திப்போம்”

“நன்றி”

“நன்றி”

 


 

Tuesday, October 19, 2021

சதுரங்க ஆட்டக்காரர்

பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன்

தலை குனிந்தேஇருக்கும்

சதுரங்க ஆட்டத்தில்

கவனம் குவிந்திருக்கும்

காய்நகர்த்தலில்

கண் இருக்கும்

ஒருநாள் அவர் அருகில்போய்

மெல்லக் கேட்டேன்

அய்யா தனியேதான்

செஸ் ஆடுவீர்களா

புன்னகைத்தார்

பிறகு சிரிப்புக்கு மாறினார்

என்னோடு முப்பத்தி இரண்டு

தோழர்கள் இருக்கிறார்கள் என்றார்

செக் எனச் சொல்லிவிட்டு

எதிரில் இல்லாதவரைப் பார்த்தார்

வெற்றியைத் தனதாக்கினார்

உங்களோடு நான் ஆடலாமா என்றேன்

வாங்க முப்பத்து மூன்றாவது

தோழரே என்றார்

Wednesday, August 18, 2021

பதிலின்றி...

 தற்கொலை செய்துகொண்டவர்

வாழவேண்டியவர் என்றார்

வாழவேண்டியவர்களை

தற்கொலை செய்துகொள்வதிலிருந்து

பாதுகாக்கிறோமா என்றேன்

போய்விட்டார்

பதிலின்றி

Friday, August 13, 2021

கடைசிவரை

 கடைசிவரை

அம்மாவுக்கு

வாஷிங் மெஷின்

வாய்க்கவே இல்லை

கைகளால் அலசி

அடித்துத் துவைத்து

துணிகளை

அடுக்கிவைத்து

குறைசொல் எதையும்

கொட்டாமல்

புன்னகை மாறா

முகத்தோடே

போய்ச்சேர்ந்தாள்

 


Wednesday, August 11, 2021

அமுதா எனும் தேவதை

 சொர்க்கத்திலிருந்து தங்கை அமுதா போன் செய்தாள்

அண்ணா எப்பிடி இருக்க

கொரோனா எப்படி இருக்கு

எல்லாரும் நல்லா இருக்காங்களா

நல்லவேளை அம்மா அப்பா எதுவும் சிரமப்படாம

என்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க

பாண்டிச்சேரிக்குப் போனால் தன் மகள்களைப்

பார்த்துவரச் சொன்னாள்

அவர்கிட்டயும் அடிக்கடிப் பேசு என்றாள்

அந்த வயிற்றுக்கட்டி ஆப்பரேஷன் சரியாகச் செய்திருந்தால்

கேன்சரிலிருந்து தப்பித்திருப்பேன்

உங்களோடு இருந்திருப்பேன் என்றாள்

மகள்கள் கல்யாணங்களைப் பார்க்காமல் போய்விட்டதைச்

சொல்லி அழுதாள்

பேசிக்கொண்டே போனாள்

நான் புரண்டுபடுத்தேன்

ஈரமான தலையணையைத் தள்ளிவைத்துவிட்டு

கையைத் தலைக்கு வைத்துக்கொண்டேன்

விடிந்தவுடன்

சர்வீசுக்குக் கொடுத்த போனை

வாங்கிவர வேண்டும்