அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்
இவர்
பேசுவதில்லை
மற்றவர்
குறுஞ்செய்திகளும் குறைந்துபோனது
இன்னொருவர்
அன்பிரண்ட் செய்துவிட்டார்
உள்ளேன்
அய்யா என்பது போலிருந்த அன்பும்
ஓடி
எங்கோ ஒளிந்துகொண்டது
எதிர்படும்
ஒருவர் தெருமாறிச் செல்கிறார்
குற்றப்பத்திரிக்கை
வாசிப்பவர்
மன்னிப்பைக்
கடலில் எறிந்துவிட்டு வாக்கிங் போகிறார்
சுவரெழுப்பிக்கொண்டவர்கள்
கொஞ்சம் பேர்
ஜன்னலில்லாத
சுவர்கள் என்பது வருத்தமான தகவல்
விஷேசங்களில்
சந்தித்தால் உண்டு
விஷேசங்களுக்கான
அழைப்புகள் வருவது குறைந்துபோனது
அல்லது
விஷேசங்கள் ரகசியமானது
முகம்
தெரியாதவர் புன்னகைக்கிறார்
கடவுள்
பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்டார்.
மற்றபடி
காலம் சுழல்கிறது
இசைத்தட்டு
போல
அதில்
எனக்கான இசையைக் கேட்டுக்கொள்கிறேன்
குட்டிமழைக்
கூப்பிடுகிறது
புழுக்கத்தை
ஆற்றிக்கொள்ளக் கொஞ்சம் போய்
நனைந்துவிட்டு
வர வேண்டும்.
No comments:
Post a Comment