Sunday, November 09, 2008

...முடிப்பதற்குள்

பறப்பேன் என்று
அடம் பிடிக்கிறது
வரைந்து முடிப்பதற்குள்
இந்த பட்டாம்பூச்சி

பறந்தோடும் நதி

கனவில் வந்த ஒட்டகம்
அழைத்துப் போய் காட்டியது
பாலைவனத்தில்
பறந்தோடும் நதியை

Monday, October 27, 2008

கண் அள்ளிய மழை

கண் அள்ளிய
மழையை எதற்கு
கவிதையில் கொட்ட
அதுவாய்
வழிந்தோடுகிறது
உள் எங்கும்
ஒரு ரீங்காரத்துடன்

Sunday, October 26, 2008

குவியும் காட்சிகள்

ஒருவர்
பலர் கடக்க
சாலை சுவரில்
சிறுநீர் போகிறார்
ஒருவர்
இலவசமாக படித்த
தினசரியை
தன்னிச்சையாக
எடுத்துப் போகிறார்
ஒருவர்
துயரம் மிகுந்த
மருத்துவமனை வராண்டாவில்
தான் பார்த்த
சினிமா கதையை
சொல்லி மகிழ்கிறார்
ஒருவர்
பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
ஏறி இறங்கியதாக
மார் தட்டுகிறார்
ஒருவர்
சாலை நிறுத்தத்தில்
விலகிய புடவையை
பார்த்த கண் எடுக்காமல்
சிக்னல் விழ கிளம்புகிறார்
ஒருவர்
நேற்றோடு நிறுத்தியதாக
சொன்ன குடியை
நண்பனின்
இலவச விஸ்கிக்காக
தளர்த்திக் கொள்கிறார்
ஒருவர்
காசு கொடுத்தால்தான்
காரியம் நடக்கும் என்று
லஞ்சத்தை
தன் வார்த்தைகளால்
அழிக்கப் பார்க்கிறார்
இப்படி
ஒருவர் ஒருவராய்
குவியும் காட்சிகள்
சில நேரங்களில்
இந்த ஒருவர் குறிப்பேட்டில்
நானும் வந்து விடுவது
சங்கடமாக இருக்கிறது
முற்றுப்புள்ளிகளை
உடைக்கிறது
குழந்தையின் மொழி

Thursday, October 23, 2008

என்றோ விதைத்த சொல்

புல் ஒற்றி எடுக்க
விரல் வந்த பனித்துளி
மாற்றிக்கொண்டிருந்தது
என்னை ஒரு
தாவரமாய்
--------------------
என்றோ விதைத்த சொல்
பெருக்கெடுத்தோடும்
அன்பாய் இன்று
--------------------
விடுபட்ட
ஒரு கண்ணீர் துளி
குதிக்கிறது
புன்னகையில்
----------------

Monday, October 13, 2008

காடும் மரமும்

ஒரு மரத்திடம் கேட்டேன்
இந்த காட்டைப்பற்றி
உன் மொழியில் சொல்
சிரித்தது மரம்
சில பூக்கள் விழ
காடு அகராதி
நான் சிறுசொல்
எனச்சொல்லி
முடித்துக் கொண்டது

பயண வழியில்

பேருந்தில் குழந்தை
எல்லோரையும் பார்த்து
சிரிக்கிறது
பேருந்தும் சிரிக்கிறது

Saturday, August 23, 2008

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
நான் எழுதியபோது
அருகில் வந்த மகள்
வரைந்த நதியைக் காட்டினாள்
தாளில் ஓடியது
பென்சில் நதி
என் கவிதையை
அதில் கரைத்துவிட்டு
மறுபடி பார்க்க
இன்னும் முடியவில்லை
எனச் சொல்லியபடியே
ஓடிய அவள்
கண்களில் மீதி நதி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)
----------------------

யாரும் படித்து
முடிக்கவில்லை
மழைபுத்தகம்
-----------------

Thursday, August 21, 2008

பெருவழி

அருகில் போய்
மிக ரகசியமாய்
பனித்துளியிடம்
சின்ன கவிதையை
சொன்னேன்
கேட்டு
புன்னகைத்தது
கவிதையில்
பனித்துளி பூத்தது
----------------
கையிருக்கும்
முகவரியிலிருந்து
நீள்கிறது பெருவழி
கால்கள் கடக்க
வழி நெடுகிலும்
சிறுசிறு முகவரிகள்
-----------------

Tuesday, August 12, 2008

வழிக்குறிப்புகள்

வந்து பார்க்காத
கடிதம் போடாத
மகனுக்கு
தந்தை எழுதினார்
ஊர் பக்கத்தில்
இருக்கிறது
நீதான் தொலைவாக
இருக்கிறாய்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------

பார்த்த வானவில்
அடுப்புக் கறியில்
வரையும் சிறுமி

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

------------------
தவறவிட்ட ரயில்
வழி அனுப்புகிறேன்
கையசைத்து
------------------
வெயிலில் நனைந்து செல்கிறேன்
என்று கதை மனோபாவத்துடன்
யோசித்தபடி
வெயிலில் காய்ந்து சொல்வது
கடினமாக இருக்கிறது
-------------------

Saturday, August 09, 2008

இரு வார்த்தைகள்

சற்று வயது கூடிய
வேலைக்காரன்
தன் நுட்பம் கலையா
விரல் பாவங்களுடன்
மிக மெதுவாய்
மரம் அறுத்து
சரி பார்த்து
தக்கபடி பொறுத்தி
வடிவம் அளந்து
ஆணிகள் அடித்து
வருடிக் கொடுத்து
தன்னையே
ஒரு முறை பெயர்த்து
கிடத்தி
பின் எடுத்து
கண்ணோரம் வந்த
ஒரு சொட்டை
போட்டுபோல் வைத்து
துக்க வண்ணம் பூசி
மரத்துகள்களை
அப்புறப்படுத்தி
மஞ்சள் வெயில் பட
உருவாக்கிய சவப்பெட்டியை
பார்த்தபடி
இருக்கும்போது
அவன் உதடு
சத்தமின்றி சொல்கிற
இரு வார்த்தைகள்
உயிர் வந்திடுச்சி

Monday, August 04, 2008

மழையின் கணங்கள்

மழையைப் பற்றி
எவ்வளவோ பேசினாய்
மழை விட்டப் பிறகும்
ஒரு மழையைப்போல

இப்போதெல்லாம்
பெய்யும்
ஒவ்வொரு மழையும்
பேசுகிறது
உன்னைப் பற்றி

Tuesday, July 15, 2008

கல் நதி

வார்த்தைகளை
மாற்றிப்பாடுகிறது குழந்தை
குழந்தையின் பாடலில்
தன்னைப் புதிது
செய்து கொள்கிறது கவிதை
----------

பிரசாதம் வாங்கிய
சிறுவனிடம்
கும்பிட்ட சாமியின்
பெயர் தெரியுமா கேட்டேன்
எனக்கு பசிக்குது சாமி
சொல்லியபடியே ஓடினான்

(26.10.08 கல்கி
இதழில் பிரசுரமானது)

-----------

உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி
------------
தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது
--------------

Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

Wednesday, June 25, 2008

நீங்களும் ஒரு பறவையும்

நீங்கள் ஒரு பறவையை
சுடும்போது
கவனத்துடன் குறிவைக்க வேண்டும்

தோட்டா பட்டதும்
செத்து விழ வேண்டும் பறவை

மீதி உயிர் இருந்து
மண்ணில் புரண்டு
மெதுவாய் போகும்படி ஆகக்கூடாது

சுடப்பட்ட பறவை
விழுந்த பிறகு
சில நொடிகள் முடிந்தால்
அஞ்சலி செய்யலாம்

பறவையின் இன்ன பிற
உறவுகளுக்காக
ஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்

பின் பறவையை
எப்படி சமைப்பது
என்னென்ன செய்வது
என்பது பற்றி பேசலாம்

மதுக் கோப்பைகளின் நடுவே
மேசை மீது
நிரப்பப்பட்டிருக்கும் கறி

நீங்கள் சுவைக்கிறீர்கள்
பற்களில் நசுங்கும்
பறவையின் சத்தம் கேட்டபடி

அப்போது உங்கள்
கண்களை கலைத்துப்
போகிறது ஒரு பறவை

உங்கள் துப்பாக்கியை
முகம் திருப்பி வைத்து
காற்றில் நீந்தி
வானத்தில் அதன் சிறகுகள்
நடனமிடுவதைப் பாருங்கள்
முடிந்தால் ரசித்து

Thursday, June 19, 2008

பார்த்தபடி படிக்கட்டுகள்

லிப்ட் வாய்க்கப் பெறாத
மூன்றாவது மாடி

மூச்சு இறைப்பதைப்
பார்த்தபடி படிக்கட்டுகள்

காலெடுத்து வைக்க
முடியும் அப்பார்ட்மெண்ட்

இருந்து பார்த்து
ஊருக்குப் போய்விட்டார் அப்பா

அவர் விட்டுச் சென்ற
வார்த்தைகளில்
விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்
பரவிக் கிடக்கும்
எங்கள் கிராமம்

Wednesday, June 18, 2008

பொம்மைகள்

குழந்தை உடைத்த
பொம்மையிலிருந்து
குழந்தைக்கு கிடைத்தன
மூன்று பொம்மைகள்

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

கூர்காவின் கடிதம்

ஒருவன் கடிதம் படிக்க
மற்றவன் கேட்க
இசைக் கச்சேரி போலிருந்தது
கூர்காக்களின் மொழி

கேட்டுக் கொண்டே வந்தவன்
குழந்தையை கைகளில்
கொஞ்சுவது போல்
பாவனை செய்து
ஆட ஆரம்பித்து சிரித்தான்

தான் அப்பா ஆனதாக
மார் தட்டி
சத்தம் போட்டான்

ஓடிப்போய்
மிட்டாய் வாங்கி வந்து
எனக்கும் தந்ததில்
நினைத்தது சரி என்று
தெரிந்தது

தூர உணர்வுகளை
கொட்டிக் கொண்டிருந்தது
கடிதம்

என் நடை முடிந்து
வருகையில்
போயிருந்தான்
கடிதம் படித்தவன்

கடிதத்தின் எழுத்துக்களில்
விளையாடியபடியே இருந்தன
அமர்ந்திருந்த
கூர்காவின் கணகள்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)