Thursday, October 21, 2021

கதை

 குழந்தை பசியைச் சொல்கிறது

அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்

குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது

அம்மா வேறொரு கதை சொல்கிறாள்

புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது

இன்னொரு கத சொல்லும்மா

பயணி

 “நீங்கள்”

“பயணி”

“நீங்கள்”

“நானும் பயணி”

“எங்கு போகிறீர்கள்”

“இலக்கு நிர்ணயம் எதுவுமில்லை

போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்கள்”

“நானும் அப்படித்தான்”

“எங்கிருந்து வருகிறீர்கள்”

“என்னிடமிருந்து”

“நல்ல பதில்...நீங்கள்”

“தாயின் கருவறையிலிருந்து”

“இதுவும் நல்ல பதில்தான்”

“நாம் சேர்ந்து போகலாமா”

“மன்னிக்கவும்

 “வேண்டாம் என்கிறீர்களா”

“மறுபடியும் மன்னிக்கவும்”

“தனிமையும் பயணமும்

சரியான துணை...சரிதானே...”

“மிகச்சரி”

“நன்றி உங்கள் பதில்களுக்கு

வேறு எங்காவது

மறுபடி நாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்து

அப்போது இதே கேள்வியைக் கேட்டால்

ஒத்துக்கொள்வீர்களா”

 “அந்தத் தருணத்தில்

வரப்போகும் பதிலை

இந்தத் தருணத்தில்

சொல்லும் சக்தி

எனக்குக் கிடையாது”

“பார்க்கலாம்”

“பார்க்கலாம்”

“சந்திப்போம்”

“சந்திப்போம்”

“நன்றி”

“நன்றி”

 


 

Tuesday, October 19, 2021

சதுரங்க ஆட்டக்காரர்

பலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன்

தலை குனிந்தேஇருக்கும்

சதுரங்க ஆட்டத்தில்

கவனம் குவிந்திருக்கும்

காய்நகர்த்தலில்

கண் இருக்கும்

ஒருநாள் அவர் அருகில்போய்

மெல்லக் கேட்டேன்

அய்யா தனியேதான்

செஸ் ஆடுவீர்களா

புன்னகைத்தார்

பிறகு சிரிப்புக்கு மாறினார்

என்னோடு முப்பத்தி இரண்டு

தோழர்கள் இருக்கிறார்கள் என்றார்

செக் எனச் சொல்லிவிட்டு

எதிரில் இல்லாதவரைப் பார்த்தார்

வெற்றியைத் தனதாக்கினார்

உங்களோடு நான் ஆடலாமா என்றேன்

வாங்க முப்பத்து மூன்றாவது

தோழரே என்றார்

Wednesday, August 18, 2021

பதிலின்றி...

 தற்கொலை செய்துகொண்டவர்

வாழவேண்டியவர் என்றார்

வாழவேண்டியவர்களை

தற்கொலை செய்துகொள்வதிலிருந்து

பாதுகாக்கிறோமா என்றேன்

போய்விட்டார்

பதிலின்றி

Friday, August 13, 2021

கடைசிவரை

 கடைசிவரை

அம்மாவுக்கு

வாஷிங் மெஷின்

வாய்க்கவே இல்லை

கைகளால் அலசி

அடித்துத் துவைத்து

துணிகளை

அடுக்கிவைத்து

குறைசொல் எதையும்

கொட்டாமல்

புன்னகை மாறா

முகத்தோடே

போய்ச்சேர்ந்தாள்

 


Wednesday, August 11, 2021

அமுதா எனும் தேவதை

 சொர்க்கத்திலிருந்து தங்கை அமுதா போன் செய்தாள்

அண்ணா எப்பிடி இருக்க

கொரோனா எப்படி இருக்கு

எல்லாரும் நல்லா இருக்காங்களா

நல்லவேளை அம்மா அப்பா எதுவும் சிரமப்படாம

என்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க

பாண்டிச்சேரிக்குப் போனால் தன் மகள்களைப்

பார்த்துவரச் சொன்னாள்

அவர்கிட்டயும் அடிக்கடிப் பேசு என்றாள்

அந்த வயிற்றுக்கட்டி ஆப்பரேஷன் சரியாகச் செய்திருந்தால்

கேன்சரிலிருந்து தப்பித்திருப்பேன்

உங்களோடு இருந்திருப்பேன் என்றாள்

மகள்கள் கல்யாணங்களைப் பார்க்காமல் போய்விட்டதைச்

சொல்லி அழுதாள்

பேசிக்கொண்டே போனாள்

நான் புரண்டுபடுத்தேன்

ஈரமான தலையணையைத் தள்ளிவைத்துவிட்டு

கையைத் தலைக்கு வைத்துக்கொண்டேன்

விடிந்தவுடன்

சர்வீசுக்குக் கொடுத்த போனை

வாங்கிவர வேண்டும்

 

 

Wednesday, June 30, 2021

எழுதுவீர்களா

“நீங்கள் எழுதுவீர்களா ’’

“கிறுக்குவேன்’’

“ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்’’

“உடைந்த கனவை

ஒவ்வொரு கனவாக

அடுக்கிவைக்கிறேன்’’

 

“இது கிறுக்கல் அல்ல

அழகாக எழுதி இருக்கிறீர்கள்’’

“நீங்கள் ஒன்றைச் சொல்லுங்கள்’’

“உடைந்த கனவுகள் அல்ல

ஒவ்வொன்றும்

பிரிந்த கனவுகள்’’

 

“ஆஹா இது நான் சொன்னதைவிட

அழகாக இருக்கிறதே

ஆக நாம் இருவரும்

எழுதுபவர்கள்

 சரிதானே’’

 

சிரிக்கிறார்கள்

 

 

Thursday, June 17, 2021

கோமாளியும் குறுஞ்செய்தியும்

குறுஞ்செய்தி அடித்துக்கொண்டிருந்தான் கோமாளி

சர்க்கஸ் ஷோ முடித்துவந்த களைப்பு

கண்களில் ஆரம்பித்து

உடல் முழுதும் பரவி இருந்தது

அவனுக்குப் பின்கதைகள் பல உண்டு

சர்க்கஸ் பார்க்கவந்து

அவனை அநாதையாக

விட்டுப்போய்விட்ட பெற்றோர்

இங்கேயே எடுபிடியாகி

வளர்ந்து

சிரிக்கவைக்கும் சாதுர்யத்தால்

கோமாளியானது

குள்ளமாகக் குழந்தை பிறந்துவிடுமோ

என்ற பயத்துடன்

ஓடிப்போன மனைவி

பிறகு ரிங்மாஸ்டரும்

இல்லாமல்போனது

அடிக்கடி வரும் கால்வலி

வலி மறைக்க

சிரிப்பில் சேர்க்கு ஒலிகள்

சர்க்கஸ்சில் வெடிப்பும் சிரிப்புமாக இருப்பவன்

உள்ளே வந்தால்

மெளனத்தில் முடங்கிவிடுவான்

“நீளமான குறுஞ்செய்தியா”

“ஆமாம்”

“என்ன எழுதுகிறாய்

“யாருக்கு அனுப்பப்போகிறாய்”

சொன்னான்

“படித்து உள்வாங்கும்

ஒரு ஜீவனுக்கு

யாரென்று தெரியவில்லை

கடவுளின் எண் கிடைத்தால்

அவருக்கு அனுப்பிவைக்கலாம்”

Tuesday, June 08, 2021

இரவின் உரையாடல்

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

அவள் பதட்டப்பட்டு

விலகிவிட்டாள்

 

அடியேய்

சும்மா சொல்லிப்பார்த்தேன்

பயந்துவிட்டாய்

புன்னகைத்தபடிச் சொன்னான்

 

அவளும் சொல்லிப்பார்த்தாள்

 

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

பார் என்

தற்கொலையை

கொலையாக்கிவிட்டாய்

சிரித்தபடிச் சொன்னான்

 

 

 

 


Sunday, February 07, 2021

வாசம்

 கண்கள் ஒளிர

இசையழகு கெடாமல் பாடுவாள் தங்கை

அவளிடம் பாடல் வாசம்

 

விட்டுக்கொடுக்காதவர் அப்பா

அவரிடம் கண்டிப்பு வாசம்

 

மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்

அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்

 

குனிந்த தலை நிமிராமல்

நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்

செல்போன் வாசம்

 

டீவித்தொடர்களிலிருந்து

வெளிவராத பாட்டிக்கு

கதைகளின் வாசம்

 

வாலாட்டிக்கொண்டே

சுற்றி வருவான் அன்பு

அவனை நாயென்று சொல்லக்கூடாது

அவனுக்கு நன்றிதான் வாசம்

 

காலநேரத்திற்கு ஏற்றார்போல்

மாறும் வாசம் வீட்டிற்குண்டு

 

அம்மாவிற்கு

அதைத்தானே கேட்கிறீர்கள்

 

எப்போதும் மாறாத

சமையலறை வாசம்

 

Thursday, September 03, 2020

பொய் சொல்கிறோம்

நாங்கள் பொய் சொல்கிறோம் நாங்கள் தொடர்ந்து பொய்களைச் சொல்கிறோம் நாங்கள் பொய்களைத்தான் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும் அப்படியே அதைக் கேளுங்கள் அதில் உண்மை கலந்து வரலாம் என்று ஒருபோதும் நினைத்துக்கொண்டிருக்காதீர்கள்


Saturday, August 29, 2020

நான் இருந்தேன்

எழுதுவதற்கு முன்பு எழுதியது இருந்ததா நான் இருந்தேன்

அவன் வழிப்போக்கன்

அவன் வழிப்போக்கன்
பாதைகள்
அவனுக்குப் பரிமாறும்
யாரிடமும் எதையும்
கேட்கமாட்டான்
இயற்கையிடம்
கேட்டுப் பெறுவான்
முரண்படுபவர்களோடு
மோதமாட்டான்
தனிமையோடு உரையாடுவான்

அவன் வழிப்போக்கன்
மழையில் நனைந்து
தூறலில்
தலைதுவட்டிக்கொள்வான்
அவன் அடிக்கடி சொல்வது
என் நிறங்கள்
வானவில்லிடம் இருக்கின்றன‌
அவன் மெளனத்தைக்
காற்று கேட்கும்
பின் அதைப் பாடலாக‌
அவனுக்குத் திருப்பித்தரும்

அவன் வழிப்போக்கன்
அவன் காலணிகள்
அணிவதில்லை
வெறுங்கால் உணரும்
பூமியின் பாசம் என‌
அடிக்கடி சொல்லுவான்
பிரார்த்தனையின் சொற்கள்
அவனிடம் இருக்கும்
அது கண்ணீராக‌
விழி நிறைக்கும்

அவன் வழிப்போக்கன்
ஆழ்ந்த உறக்கத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் பாதை
அவன் கனவில் வரும்
எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவான்

அவன் வழிப்போக்கன்
மலைகளுக்கு கையசைப்பான்
பறவைகளை வழி அனுப்புவான்
நீர் கண்டால்
குழந்தைபோல‌
அள்ளி அள்ளிக்
குடிப்பான்

அவன் வழிப்போக்கன்
உங்களை
என்னை
தன்னை
கடந்துபோய்க்கொண்டிருக்கும்
அவன் வழிப்போக்கன்

(ஜி.எம்.குமாருக்கு)



Thursday, August 27, 2020

திசை

திசை
அறியா கதை
பிரபஞ்சம்
வழிகாட்டும்


Sunday, August 23, 2020

உதவி

இந்தத் தருணத்தில்

யாராரிடமெல்லாம்

உதவி கேட்கலாம்

மிகுந்த யோசனையுடன

ஒரு பட்டியல்

தயார் செய்தேன்

வரிசை

பெரிதாக வரவில்லை

படித்துப் பார்த்தேன்

கடைசியில்

என் பெயரும் இருந்தது


Saturday, August 22, 2020

அழுகை

எனக்குத் தெரியாமல்
அழுதிருக்கிறேன்
உங்களுக்குத் தெரியாமல்
மறைத்திருக்கிறேன்

Saturday, July 11, 2020

என்ன காரணம்

என்ன காரணம்
பேசாமல் இருக்கிறீர்கள்
என்ன காரணம்
கேட்காமல் இருக்கிறீர்கள்
என்ன காரணம்
பார்வையாளனாகவே இருக்கிறீர்கள்
என்ன காரணம்
பங்கெடுக்காமல் இருக்கிறீர்கள்
என்ன காரணம்
தயக்கத்தை விட மறுக்கிறீர்கள்
என்ன காரணம்
ஒதுங்கிப் போகிறீர்கள்
என்ன காரணம்
மயங்கிச் சாய்கிறீர்கள்
என்ன காரணம்
வளைந்து நடக்கிறீர்கள்
என்ன காரணம்
சத்தம் இழக்கிறீர்கள்
என்ன காரணம்
சொற்களை விழுங்குகிறீர்கள்
என்ன காரணம்
ஒளிந்து மறைகிறீர்கள்
என்ன காரணம்
பாய யோசிக்கிறீர்கள்
என்ன காரணம்
தைரியம் தொலைக்கிறீர்கள்
என்ன காரணம்
கதவை அடைக்கிறீர்கள்
என்ன காரணம்
கனவை விரட்டுகிறீர்கள்
என்ன காரணம்
இப்படி இருக்கிறீர்கள்


Wednesday, July 08, 2020

எப்படி உங்களால்...

கண்களில்
அவ்வளவு
கள்ளத்தனத்தை
வைத்துக்கொண்டு
எப்படி உங்களால்
கருணையோடு
பேச முடிகிறது

மிதந்து வந்த பாறை

மிதந்து வந்த
பாறையை
முத்தமிட்டேன்
இறகாகி
வருடிப்போனது

    - ராஜா சந்திரசேகர்

Saturday, July 04, 2020

அம்மாவின் மோதிர விரல்

கடைசி வரை
அம்மாவின்
மோதிர விரல்
வெறும் விரலாகவே
இருந்தது

   - ராஜா சந்திரசேகர்