Saturday, August 29, 2020

அவன் வழிப்போக்கன்

அவன் வழிப்போக்கன்
பாதைகள்
அவனுக்குப் பரிமாறும்
யாரிடமும் எதையும்
கேட்கமாட்டான்
இயற்கையிடம்
கேட்டுப் பெறுவான்
முரண்படுபவர்களோடு
மோதமாட்டான்
தனிமையோடு உரையாடுவான்

அவன் வழிப்போக்கன்
மழையில் நனைந்து
தூறலில்
தலைதுவட்டிக்கொள்வான்
அவன் அடிக்கடி சொல்வது
என் நிறங்கள்
வானவில்லிடம் இருக்கின்றன‌
அவன் மெளனத்தைக்
காற்று கேட்கும்
பின் அதைப் பாடலாக‌
அவனுக்குத் திருப்பித்தரும்

அவன் வழிப்போக்கன்
அவன் காலணிகள்
அணிவதில்லை
வெறுங்கால் உணரும்
பூமியின் பாசம் என‌
அடிக்கடி சொல்லுவான்
பிரார்த்தனையின் சொற்கள்
அவனிடம் இருக்கும்
அது கண்ணீராக‌
விழி நிறைக்கும்

அவன் வழிப்போக்கன்
ஆழ்ந்த உறக்கத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் பாதை
அவன் கனவில் வரும்
எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவான்

அவன் வழிப்போக்கன்
மலைகளுக்கு கையசைப்பான்
பறவைகளை வழி அனுப்புவான்
நீர் கண்டால்
குழந்தைபோல‌
அள்ளி அள்ளிக்
குடிப்பான்

அவன் வழிப்போக்கன்
உங்களை
என்னை
தன்னை
கடந்துபோய்க்கொண்டிருக்கும்
அவன் வழிப்போக்கன்

(ஜி.எம்.குமாருக்கு)



No comments:

Post a Comment