Powered by Blogger.

பசி

Wednesday, April 29, 2020


அங்கிருந்த எல்லோருக்கும் பசித்தது
அதில் பழைய பசியும் புதிய பசியும்
சேர்ந்து கொண்டது
இட்டு நிரப்ப வேண்டிய பள்ளம் போல்
இருந்தது வயிறு
ஆளாளுக்கு ஒரு கதைச் சொல்லி
பசியை மறக்கப்பார்த்தனர்
குழந்தைப் பறவைகளுக்கு
தானியம் போட்டு
நட்பாக்கிக்கொண்ட கதையைச் சொன்னது
ஒரு தம்பி பிறை நிலவுக்கு
கதைச் சொன்னபோது
அது பௌர்ணமியாகி விட்டதைச் சொன்னான்
அப்பா வனத்திற்குப் போய்
பழங்களைப் பறித்து வந்த கதையைச் சொன்னார்
அம்மாவிற்குக் கதை ஏதும் தோன்றவில்லை
எல்லோரையும் மிரள மிரள பார்த்தாள்
சோறுதான் எனக்குக் கதை
யாராவது அத நிறையப் போடுங்க
கூட்டத்திலிருந்து கேட்டது ஒரு குரல்

கண்ட நாள் இன்று

Monday, April 27, 2020


கிளையிலிருந்து
பறித்துத் தருவது போல்
பையிலிருந்து
பழங்களை எடுத்து
மூதாட்டிக்குத் தருகிறார்
கனிந்தக்
கருணைச் சித்திரத்தைக்
கண்ட நாள் இன்று

-          ராஜா சந்திரசேகர்

அப்பாவும் குழந்தையும்

Friday, April 17, 2020

இருப்பது ஒரு பழம்
மூன்று பேர்
சாப்பிட முடியுமா
உரித்தபடியே
அப்பா கேட்டார்
இருக்கிறது ஆறு சுளை
ஆறு பேர் சாப்பிடலாம்
குழந்தை சொன்னது
- ராஜா சந்திரசேகர்

அரைநொடியில்

Wednesday, April 15, 2020

ஆசுவாசமாக அழுதபின்
அரைநொடியில்
துடைத்துக்கொண்டேன்
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்
   

இசைத்தட்டின் மேல்...

Saturday, April 11, 2020


நான் இப்போது
சுழலும்
இசைத்தட்டின் மேல்
விழுந்திருக்கும் இறகு
நீங்கள் எனக்கு
எந்த ராகத்தின்
பெயரையும் வைக்கலாம்

என்ன செய்யலாம்

Saturday, April 04, 2020

உடைந்த மனதை
வைத்துக்கொண்டு
என்ன செய்யலாம்

மேலும் உடையாமல்
பார்த்துக்கொள்ளலாம்


நடந்து நடந்து

Friday, April 03, 2020

நடந்து நடந்து
மரணத்தை அடைந்தான்
என்ற வரியை
எளிதாக
எழுதிவிட முடிகிறது
கடந்து வர முடியவில்லை

காத்திருப்பு

Monday, March 30, 2020

காத்திருப்பை
வலியுடன் சொல்லலாம்
நம்பிக்கையுடன் சொல்லலாம்
காத்திருப்புடனும் சொல்லலாம்

நடந்து கொண்டிருக்கிறார்கள்

Sunday, March 29, 2020


அவர்கள் பசிக்கு
இருந்ததென்னவோ
சிறிய ரொட்டிதான்
அதுவும்
மறைத்து வைக்கப்பட்டிருந்தது

விளிம்பு நிலை மனிதர்கள்
நடந்துகொண்டிருக்கிறார்கள்
வினாக்களின் மீது

மனிதம் செத்து
நாளாயிற்று
சுதந்திர இந்தியா
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறது

செருப்புத் தேய
நடந்தவர்கள்
வாழ்க்கைத் தேய
நடக்கிறார்கள்

பிறந்ததிலிருந்தே
நடந்து கொண்டிருக்கிறார்கள்
பயணம்
முடிந்தபாடில்லை

யாருக்காகவோ

Friday, March 27, 2020


யாரோ யாருக்காகவோ
பிரார்த்தனை செய்கிறார்கள்
அதில் நாம்
சொற்களாக இருக்கிறோம்
  

குரல்கள்

Monday, March 16, 2020

கிடைத்ததிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றவரும் கிடைக்காததிலிருந்து எல்லாம் கிடைத்தது என்றவரும் ஒரே அலைவரிசையின் இரண்டு குரல்கள்

பிறகு

Thursday, February 13, 2020


செத்துத் தொல
சொன்ன வாக்கியத்திலேயே தொங்கினான்
ரோஷக்காரப் பயல்
பிறகு
 பேனிலிருந்து இறக்கினார்கள்

பதில்

துரத்தி வருகிறது கேள்வி
பயத்தைக் காட்ட
நின்று
தைரியத்தைக் காட்டுங்கள்
போய்விடும்
அதுதான்
அதற்குப் பதில்

நான் இருக்கிறேன்

இந்தக் காத்திருப்பில்
விஷேசம் எதுவுமில்லை
நான் இருக்கிறேன்
என்பதைத் தவிர

வந்து போனது

Tuesday, January 14, 2020

கோமாளி வேஷத்தைக்
கலைத்தபோது
யாருக்கும் தெரியாத
சிரிப்பு
அவன் உதட்டில்
வந்து போனது

அருகில்

உள்ளங்கை தேன்
விற்பனைக்கு
என்றிருந்தது
அருகில் போய் பார்க்க
துண்டிக்கப்பட்ட
கை இருந்தது

அசைந்துகொடு

Wednesday, January 01, 2020


நகர்ந்து போ

நாளைத்
திற

விட்ட இடத்திலிருந்து
படி

புத்தகங்களில்
தொலை

வேரிலிருந்து
வேருக்குப்
போவது போல்
எழுது

குழந்தை வரைந்த
மேகத்தில் நனை

அலைகளோடு
கடலாகு

ஆனந்தமாய் அழு

இசை போல்
இயங்கு

தா

கருணை வழிய
பார்

கடந்து கடந்து
கண்டெடு

காயப்படு

காலத்திடம்
மருந்து கேள்

போ

நீரெனப்
போ

அவ்வப்போது
சற்றே
அசைந்து\கொடு 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்