Friday, August 31, 2012

சொன்னேன்

உண்மையைக் காப்பாற்ற
பொய் சொன்னேன் 
பொய்யைக் காப்பாற்ற 
உண்மை சொன்னேன் 
என்னைக் காப்பாற்ற 
இரண்டையும் சொன்னேன்

Thursday, August 30, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்


957-

கால்கள் சக்கரம்
உடல் வாகனம்

958-

விரிந்து கிடக்கும் 
வெள்ளைத்தாளில் 
எங்கே எழுத்து 
தேடுகிறேன்

959-

பசியும் தேட 
நானும் தேட 
பசிக்குக் கிடைத்தது 
எனக்குக் கிடைக்கலாம்         

960-

இந்த வலியின் மேல் 
வேறொரு வலியைப் 
பூசுகிறேன்
ஆறிவிடும் 
என்ற நம்பிக்கையில்

961-

நான் ஒற்றைச் செங்கல்
ஆனாலும் 
சுவரின் கனவுகள் 
எனக்குண்டு

962-

மரக்குதிரை 
போன தூரம் 
அதன் மனதுக்குள் 
ரொம்ப நீளம்

963-

வலை அறுத்துக் 
கடல் திரும்பும் மீன் 
என்ற வரியுடன் 
நீந்தும் மீன் 
தூரமாகிறது 
கொலை வலைத் தாண்டி

964-

என் வரைபடத்தை 
பொய்யால் எழுத 
பூரணமாச்சு
மெய்யால் எழுத 
பிய்ந்து போச்சு






Monday, August 27, 2012

மூன்று பேர்

என்னைக் கொல்லும்படி 
மூன்று பேரிடம் 
சொல்லி வைத்தேன் 

துப்பாக்கி சரியில்லை 
முடியாது என்று 
சொல்லிவிட்டார் ஒருவர் 

போலீஸில் அகப்பட்டால் 
என் வாழ்க்கைப் போய்விடும் என்று 
விலகிக் கொண்டார் 
இன்னொருவர்

எனக்கிட்ட 
தற்கொலைக் கட்டளையை 
நிறைவேற்றாமல் உள்ளேன் 
நான் மூன்றாவதாக

சரி போகட்டும் என்று 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

Sunday, August 26, 2012

மழையை வரைதல்

மழையை 
வரையச் சொன்னேன் 
சுற்றிக் கிடக்கும் 
வண்ணப் பென்சில்களை 
தொடாமல் 
சொன்னாள் குழந்தை 
மழையை வரைய 
மழை வேண்டும்

Friday, August 24, 2012

நானும்

இருள் இசைக்கிறது 
ஒளி கேட்கிறது 
நானும்

பிரார்த்தனை


எப்போதோ 
இறந்து போன 
பட்டாம் பூச்சி 
நீண்ட நேரமாகப் 
பார்த்துக் கொண்டிருக்கிறேன் 
இப்போதாவது 
பறந்து போய் விடு என்ற 
பிரார்த்தனையுடன்

பார்த்தல்


இமை மூடி
மெளனம் பார்த்தேன்
என்று இமைத் திறந்து
மெளனம் பார்க்கும்

Sunday, August 19, 2012

எதை


துரத்திப் போன என்னைத் 
துரத்தி வந்த கேள்வி 
நிறுத்தியது
எதைத் துரத்தி ஓடுகிறாய் 

Saturday, August 18, 2012

மீதி உயிர்

தாயின் புடவையில் 
தற்கொலை 
செய்து கொண்ட மகன் 

என் மகனைக் கொன்னது 
நான்தான் 
நான்தான் 

நைந்துபோன 
புடவையோடு 
சண்டை போட்டபடி 
கண்ணீரில்
மீதி உயியைச் 
சிந்திக் கொண்டிருக்கும் தாய் 

Friday, August 17, 2012

போகிறேன்

ஒற்றைக் காலில் நின்று 
தவம் செய்வாயா 

அது தவமல்ல 
சித்திரவதை 
விடுங்கள் 
நான் போகிறேன் 
கிடைப்பது போதும்

முதல் வார்த்தை

விடியும் வரை 
எழுதிக் கொண்டிருந்தேன் 
விடிந்த பின் 
கிழித்துப் போட்டேன்
பல நூறு 
விடியல்கள் பார்த்துப்
பல்லாயிரம் 
பக்கங்கள் தாண்டி 
எழுதக் கிடைக்கலாம் 
அழிக்கவே முடியாத 
முதல் வார்த்தை

அழுகை

குழந்தைக்கான
சவப்பெட்டியில்
சவப்பெட்டியின்
ரகசிய அழுகையும்

Tuesday, August 14, 2012

கிடைத்த வரிகள்


ஒதுங்கிய பிணத்துடன்
கரைந்து மீந்து
கிடைத்த வரிகள்
நான் நீச்சல்
கற்றுக் கொள்ளாதது
என் தற்கொலைக்கு
உதவியது

ஒற்றைத் துளி

நண்பனின் 
இறந்த நாளின்று 
ஒற்றைத் துளி 
கண்ணீராய் வந்து 
என்னைப் பார்த்துவிட்டு 
மறைந்து போனான்

Sunday, August 12, 2012

பிறந்த தேதி


கை நீட்டினாள் தேவதை
சிரித்தபடி

அவள் தாயிடம் கேட்டேன்
இவ பிறந்த தேதி
உனக்குத் தெரியுமா

அட போங்கைய்யா
என் பிறந்த நாளே
எனக்குத் தெரியாது

அவ அப்பன் யாருன்னும்
தெரியாது

இவளே நானே
தனியா பெத்தெடுத்தப்ப
மழை பெஞ்சுது
அது தெரியும்
என் வலிக்கு ஒத்தடமா
தூறிக்கிட்டிருந்தது

சிக்னல் விழ
என் வாகனத்தைத்
தாண்டிக்கொண்டு போய்
இடம் தேடி நிறுத்தி
திரும்பி வந்து பார்க்க
அவர்களைக் காணவில்லை

மழை தொடங்கி இருந்த்து

அப்போது அது
என் மேல் விழும்
அமிலமாகப் பட்டது

கிடைத்த வரிகள்

ஒதுங்கிய பிணத்துடன் 
கரைந்து மீந்து 
கிடைத்த வரிகள் 
நான் நீச்சல் 
கற்றுக் கொள்ளாதது 
என் தற்கொலைக்கு 
உதவியது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

950-

மெளனத்தில் 
புதைந்து போனாலும் 
இறந்து போவதில்லை 
வார்த்தைகள்

951-

எல்லோரும் 
திருடர்கள் 
அளவுகள்தான் 
வித்தியாசம்

952-

கனவில் 
திறந்து மூடும் 
சவப்பெட்டி 
ஒரு முறை 
கிள்ளிப் பார்த்து 
புரண்டு படுத்தேன்

953-

வனம் வந்த 
கனவால் 
புல் கொள்ளும் 
பெருமிதம்

954-

புள்ளியை உரித்தேன்
நகம் 
ருசியறிய

955-

அழகான 
இந்த வரியைக் 
கிளறிப் பார்க்காதீர்கள்
அழகற்று எதுவும் 
இதில் 
ஒளிந்திருக்கவில்லை

956-

கலைக்கும் நேரம்தான் 
எனக்கு 
வேஷம் போடுவதற்கும்




பாடு

பாட 
ஒன்றுமில்லை 

சரி 
ஒன்றுமில்லாததைப் 
பாடு

Sunday, August 05, 2012

கோடு


கேள்விக்குறியை 
நிமிர்த்திக் கோடாக்கினேன் 
எதற்கு இதை 
செய்தோம் என்று 
கேள்வி எழுந்தது 

Wednesday, August 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

944-
எடையற்ற 
உங்கள் மனிதாபிமானத்தை 
வைத்துக்கொண்டு 
என்ன செய்ய
தட்டில் 
காசு வைத்தால் 
தராசு நிமிரலாம்


945-
கண்ணீரால் 
வரையச் சொன்னால் 
புன்னகையை 
வரைந்து காட்டுங்கள்


946-
கணிதம் வழியே 
பயணப்படும் அன்பு 
கணக்குப் பார்த்து 
முடிந்துவிடும்


947-
பெரும் கொண்டாட்டங்களில்
சிறு கண்ண்ணீர்த் துளியை 
விரல் மட்டுமே 
கவனிக்கிறது

948-
புல்லிடம் 
நட்பைச் சொன்னேன்
உனக்கு ஒரு நாள் 
வனத்தின் கதைகளைச் 
சொல்கிறேன் என்றது

949-
குழந்தையின் ஆச்சர்யத்திற்குள் 
நுழைந்தேன்
பேருலகம் வரவேற்றது
















மொழி வனம்

மொழி வனத்தில் 
நான் தொலைந்த 
சிறு பூச்சி 
மொழி தொட்டு 
ஆனேன் நான் 
பட்டாம் பூச்சி

பேரம்

சவப்பெட்டிக்கு 
பேரம் பேசிக்கொண்டிருந்தேன் 
விலை மதிப்பற்ற
உங்கள் உயிரைக் 
கூவிக் குறைக்காதீர்கள் 
என்றான் விற்றவன்