Wednesday, August 31, 2011

ஆதி முதல்

ஆதி முதல்
இன்று வரை
நாம் நிறையவே
கற்றுக் கொண்டோம்

சாதாரணத்தை
அசாதாரணமாக மாற்ற
கற்றுக் கொண்டோம்

உதாரணமாய்
ஒன்றைச் சொல்லலாம்

கயிறைத்
தூக்குக் கயிறாக்கக்
கற்றுக் கொண்டோம்






Sunday, August 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

629-

நீர்க் கோடு வரைந்தேன்
மறைந்தது நீர்
இருந்தது கோடு

630-

திசைப் பார்த்து
பறக்காது
புகை








நண்பன்

ஒரு நண்பனைப் போல்
பார்த்து நடக்கிறேன்
என் நிழலை

அதோடு
பேசியும் செல்கிறேன்
யாரும் பார்க்காத போது

Saturday, August 20, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

619-

இயலாமையை மறைக்க
திரைகள் இடுகிறோம்
திரைகளின்
ஓட்டைகள் வழியே
இயலாமையைப் பார்க்கிறோம்

620-

கடிகாரத்தின் பெண்டுலத்தில்
ஆடுகிறது
காலம்

621-

சிரித்து விடுங்கள்
அழுகையின் பக்கத்தில்
நமக்கென்ன வேலை

622-

அசைவற்று இருப்பதிலும்
இருக்கிறது
அசைவு

623-

யாரும் சொல்லாததை
நான் சொல்லவில்லை

எல்லோரும் சொல்லி விட்டதால்
நான் சொல்லாமலில்லை

624-

நட
கால்கள் செய்யும்
வழி

625-

உள்ளிருக்கும் மிருகங்களை
எழுப்பி விடுகிறது
காமம்

626-

நான்
தேநீர்
இந்தத் தருணம்
வேறென்ன வேண்டும்

627-

மொழியில் தொலைந்தேன்
கண்டெடுத்துத் திரும்புவேன்
எனக்கான வார்த்தைகளோடு

628-

வேறு வழியில்லை
வென்றாக வேண்டும்





Thursday, August 18, 2011

பார்த்தேன்

முதல் மின்னலில்
உன்னைப் பார்த்தேன்

இரண்டாம் மின்னலில்
உன் கண்களைப் பார்த்தேன்

மூன்றாம் மின்னலில்
உன் கண்ணீரைப் பார்த்தேன்

நான்காம் மின்னலில்
உன்னைக் காணவில்லை

ஐந்தாம் மின்னலில்
இருளைப் பார்த்தேன்

வெறும் இருளையேப் பார்த்தேன்

வெளியேற்றுதல்

தள்ளித் தள்ளி
உங்களுக்குள்ளிருக்கும்
குழந்தையை
வெளியேற்றுகிறீர்கள்

பின் அது
சைத்தானுக்குரிய
இடமாகி விடுகிறது

வளர்தல்

சொல்லிடம் அனுமதி கேட்டு
தங்க வந்த முள்
நாளாக நாளாக
சொல்லைக் குத்த ஆரம்பித்தது

நன்றி இழந்த முள்
ஒரு நாள்
முனையையும் இழந்தது

பின் இறந்தது

முள்ளை
அடக்கம் செய்துவிட்டு
அதன் மேல்
பூவை வைத்த சொல்
வானம் பார்த்தது

அப்போது பெய்த
மழையின் துளி
வசிக்கிறது சொல்லில்

வளர்கிறது சொல்
கவிதையில்

Tuesday, August 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

614-

முறிந்து போன `
புன்னகை
ஒட்டப் பார்க்கிறது
கண்ணீர்

615-

இருளில்
நெய்த வழியில் நடந்தேன்
இருளின்
துணைகொண்டு

616-

என்ன செய்ய
அபத்தமான வரிகளுக்கிடையில்
அகப்பட்டுக் கொள்கிறோம்
சில நேரம்

617-

போதும் என்று
சொல்லக் கற்றுக்கொள்
வானம் சொன்னது

சொல்லிப் பார்த்தேன்

வானத்தின் விசாலம்
போதும் என்ற வார்த்தைக்குள்
வந்திருந்தது

618-

இரண்டாவது நாக்காலும்
பேசுவேன்
சில நேரம்
அது தெரியாது
உங்களுக்கும்
முதல் நாக்குக்கும்



Wednesday, August 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

613-

நைந்து கிழிந்து போயிருந்தது துணி

இதை அணியவும் முடியாது
இது எதற்கும் பயன்படாது என்றேன்

எதுவும் எதற்கும் பயன்படும்
எனச் சொல்லியபடியே
வந்த அனுபவ சித்தன்
அதை மேலும் கிழித்து
ஒரு மெல்லிய திரியாக்கி
விளக்கேற்றிக் காட்டினான்

அசைந்த சுடரில்
காணமல் போயிருந்தன
நைந்து கிழிந்த இருள்கள்

நழுவுதல்

வண்ணங்களிலிருந்து
நழுவி விடும் ஓவியத்தை
யார் வரையப் போகிறார்கள்

Tuesday, August 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

609-

சொல் திறக்கும்
மொழி

610-

இரவை
மடித்தபடி நடந்தேன்
பகல் வந்தது

பகலை
விரித்தபடி நடந்தேன்
இரவு வந்தது

611-

கடைசி வரை
அழவில்லை
செய்த உறுதியின்
அடியிலிருந்தது
மறைக்கப்பட்ட கண்ணீர்

612-

மரணம் போதும்
எனக்கு
வாழ்வதற்கு

என்று

அரை நிர்வாணமாகி
காந்தியானேன்

என்று மனம் நிர்வாணமாக
முழு காந்தியாவேன்

நீந்தும் வார்த்தைகள்

படுக்கை அறை
மீன் தொட்டியானது

மீன்களோடு
நீந்தத் தொடங்கினேன்
உறக்கம் கலையாமல்

கடித்து எழுப்பின மீன்கள்
காதருகே வந்த ஒன்று சொன்னது

நீந்தியபடியே தூங்கு
தூங்கியபடியே நீந்தாதே

உடன் எழ
மீன் தொட்டி மறைய

காதில் நீந்தியபடி
இருந்தன வார்த்தைகள்

இன்னும் சொல்லியபடி

Sunday, August 07, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

600-

பாய்வது போல்
பாவனை செய்யுங்கள்
பாயாதீர்கள்

601-

எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது
என்பவர்களுக்கு
எல்லாவற்றிற்கும்
நேரம் இருக்கிறது

602-

தூங்குவது நொடிகள்தான்
ஆனாலும்
மணிகளாக
பாவிக்க முடியும்

603-

நல்ல நாள்
கடவுள் கையொப்பம்
இட்ட தாள்

604-

அழகாய் தெரிவதில்லை
நின்றிருக்கும்
குதிரைகள்

605-

மிதக்கும்போதெல்லாம்
விழுந்து போகின்றன
பாரங்கள்

606-

எந்த வெளிச்சமும்
வெளிச்சத்திற்கு வராமல்
இருப்பதில்லை

607-

நின்று போயிற்று வலி
நின்றபாடில்லை
வலியின் அதிர்வுகள்

608-

இலையின் ஓரத்தில்
இருக்கட்டும்
கொஞ்சம் பசி

Saturday, August 06, 2011

அடையாளம்

உங்கள் வார்த்தைகள்
உங்களை அடையாளம் காட்டின

பிறகு
அதை தவறு எனச் சொல்லி
உங்கள் மொழியால்
அழிக்கப் பார்க்கிறீர்கள்

Friday, August 05, 2011

தெரியும்

அடுத்த அத்தியாயத்தில்
உன்னைக் கொல்லப் போகிறேன்
கதாபாத்திரத்திடம் சொன்னேன்

கோபம் ஏறி
கத்தியது

எனக்குத் தெரியும்
ஒரு பிணம்
என் கதையை
எழுதிக்கொண்டிருக்கிறது என்று

வசித்தல்

ஒரு சிறு வரிக்குள்
அகப்பட்டுக்கொண்டேன்
வெளிவரத் தெரியாமல்

பிறகு வசிக்கப்
பழகிக் கொண்டேன்
புத்தகத்தில்

வலிகள்

ஒரு பெரிய வலியை
ஒரு சிறிய வலியிடம்
சொன்னேன்

சிறிய வலி
காணமல் போயிருந்தது

பெரிய வலி
குறைந்திருந்தது

Wednesday, August 03, 2011

உடைத்தல்

சிறையில்
முன்பின்
நடந்து நடந்து
தன் பயணத்தை
தூரமாக்கி விடுபவன்
சிறை வடிவங்களை
உடைத்து விடுகிறான்

Tuesday, August 02, 2011

விசாரித்தல்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு
ஊருக்குப் போய்
எல்லோரையும்
விசாரித்துவிட்டு வந்தேன்
ஊரை விசாரிக்காமல்
வந்து விட்டேன்