Monday, December 29, 2014

எனக்கும்

இறந்து போன 
தாயின் மடியிலேயே 
நீணட நேரமாக 
அழுது கொண்டிருக்கிறது குழந்தை 
யாராவது போய் 
குழந்தையைத் தூக்குங்கள் 
அப்படியே வந்து 
எழுதிய எனக்கும் 
ஆறுதல் சொல்லுங்கள்

Thursday, December 25, 2014

ஒற்றை வரி

எழுதிய ஒற்றை வரியை 
ஊதி 
நூலாக்கி விட்டேன் 
இந்த முனையை 
நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன் 
எதிர் முனை 
வானத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது

Wednesday, December 24, 2014

ஏழு நிமிடங்கள்

ஏழு நிமிடங்கள் 
அந்தக் கயிறுடன் 
அவன் பேசிக் கொண்டிருந்தான் 

எட்டு 
ஒன்பது 
பத்து 

இந்த நிமிடத்தில் 
அந்தக் கயிறு பற்றிய தகவலை 
உங்களுக்குச் சொல்ல வேண்டியது 
அவசியமாகிறது 

அது 
தற்கொலைக் கயிறு 

Sunday, December 21, 2014

பழைய நண்பர்

பார்க்காமல் போகிறார் 
பழைய நண்பர்
அவர் கால்களில் இருப்பது 
தவிர்க்க நினைத்த வேகமா 
எதையோ தேடிய ஓட்டமா 
தெரியவில்லை
நின்றிருக்கிறேன்
நினைவின் வடுவைத்
தடவியபடி

Saturday, December 20, 2014

அவருடன்

கைத்தட்டிக் கூப்பிட்டவர்
அவரை என்றார்
உங்கள் கைத்தட்டலில்
என் பெயர் இருந்ததால்
திரும்பி விட்டேன் என்றேன்
சிரித்தபடி கடந்து போனார்
அவருடன் 

குரூரத்தின் குருதி

நீங்கள் சுட்டப் பறவை 
என் கையில் 
விழுந்திருக்கிறது 
வழிகிறது 
பறவையின் குருதி 
என்று என்னால் எளிதாக 
சொல்ல முடியவில்லை 
உங்கள் குரூரத்தின் குருதி 
என்று சொல்லாமல் 
இருக்கவும் முடியவில்லை

Tuesday, December 16, 2014

எப்போதும் போல்

துயரம் போல் 
பெய்கிறது மழை
என்றவரும் 
சந்தோஷம் போல் 
பெய்கிறது மழை 
என்றவரும் 
எதிரெதிர் மாடியிலிருந்து 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
எப்போதும் போல்
பெய்து கொண்டிருந்தது மழை

Saturday, December 13, 2014

உங்களால் முடியுமா

கைகோர்த்து வந்தவன் 
உன் கழுத்தை 
நெரிக்கப் போகிறேன் என்றான் 

உங்களால் முடியுமா 
என்றேன் 

என் பிரேதத்தைத் தாண்டி 
இன்னொருவன் கைகோர்த்தபடி 
போய்க்கொண்டிருந்தான் 

Thursday, December 11, 2014

குழந்தைச் சொன்னக் கதை

அப்பா சொன்னக் கதையில்
பாகன் யானையுடன்
நகரில் திரிந்து கொண்டிருந்தான்
குழந்தைச் சொன்னக் கதையில்
பாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்
யானைக் காட்டிற்குப் போய் விட்டது

Wednesday, November 26, 2014

வனம்

தன் வனத்திற்கு 
வரச் சொல்கிறது 
வரைந்த பட்டாம்பூச்சி 
தன் அறைக்கு 
வரச் சொல்கிறாள் 
வரைந்த குழந்தை

Sunday, November 23, 2014

தண்டவாளம் பக்கத்தில்

அவளே கேள்விக் கேட்டு
அவளே பதிலும் சொன்னாள்

பட்டாம்பூச்சியின் மேல்
ரயில் மோதினால்
என்னாகும்

உயிர் பறந்துப் போகும்

மறுநாள் காலை
தண்டவாளம் பக்கத்தில்
அவள் சடலம் கிடந்தது

அவளைச் சுற்றி
பறந்துக் கொண்டிருந்தன
பட்டாம்பூச்சிகள்

Saturday, November 15, 2014

குட்டிப் பூனை

குட்டிப் பூனை 
உன்னைப் பார்க்க வந்துது 
நீ சத்தம் போட்டதால் 
ஓடிப் போனது 
கீழ்வீட்டுக் குழந்தையிடம் 
விளையாட்டாகச் சொன்னேன் 
பூனைக்காகக் காத்திருக்கிறாள் 
அமைதியாக

Thursday, November 13, 2014

ஒளி வட்டம்

தலைக்குப் பின்னால்
அடிக்கடித் திரும்பிப்
பார்த்துக் கொண்டார்
அவருக்குத் தெரிந்த
ஒளி வட்டம்
மற்றவர்களுக்குத் தெரியவில்லை

Wednesday, November 12, 2014

சொல்/வாக்கியம்

நிற்கும் போது நான் 
சொல் 
சொல்லிப் பாருங்கள் 
நடக்கும் போது நான் 
வாக்கியம் 
படித்துப் பாருங்கள்

மறந்துப் போய் விட்டது

காத்திருப்பது மட்டுமே
மனதில் உள்ளது
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

கதையில் எரிந்த மெழுகுவத்தி

கதையில் எரிந்த 
மெழுகுவத்தியை 
ஊதி அணைத்தேன் 
வார்த்தைகளில் வழிந்து 
பக்கங்களைப் 
படிக்க முடியாமல் 
செய்து விட்டது

Thursday, November 06, 2014

காயத்தின் நிழலில்

காயத்தின் நிழலில் 
வலி இளைப்பாறும் 
என்று எழுதிய வரியை 
மருந்தாக்கப் பார்க்கிறேன் 
ஆனாலும் 
வலிக்கவே செய்கிறது 

பைத்தியக்காரனின் பிரியம்

மழையில்
ஒரு தேநீர் கேட்டு
என்னைத் தொட்டு
முத்தமிட்ட
பைத்தியக்காரனின் பிரியம்
நெகிழச் செய்தது
ஆனாலும்
எல்லோரும் அவனை
விரட்டிய போது
பேசாமல்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

Saturday, November 01, 2014

யாரேனும் சொல்லுங்கள்

தற்கொலைக்கு ஓடுபவனை
எதற்குக் கொலை செய்ய
ஓடுகிறீர்கள்
என்ற வரியில் இருப்பவன்
என்ன ஆவான்
யாரேனும் சொல்லுங்கள்

Thursday, October 30, 2014

நான் பார்க்க வந்தவர்

தாமதமாகவே கிளம்பினேன்
நேரே
இடுகாடு வந்துவிட்டேன்
அங்கும் தாமதமாகிவிட்டது
மின் தகனச் சடங்கு
முடிந்திருந்தது
எல்லோரும் போயிருந்தார்கள்
தனியாய்
ஒற்றை ஆளாய்
நின்றிருந்தேன்
சார் யாரப் பாக்கணும்
நான் பார்க்க வந்தவர்
போய் விட்டார்
சொல்லிவிட்டு நடந்தேன்