Sunday, January 19, 2014

உங்களுக்குத் தெரிகிறதா

1-
அன்பின் சுடர் அசைகிறது
என்று எழுதிய வரியை
நீங்கள் உடனே
அழித்து விடலாம்
உங்களால் ஊதி
அணைக்க முடியாது
2-
வெறும் கண்களை வரைந்து 
கடவுள் பிறந்து விட்டார் 
என்கிறாள் மான்யா
ஒரு கணப் பார்வையில் 
இமைகள் அசைவது 
அவளுக்குத் தெரிகிறது 
எனக்குத் தெரிகிறது 
உங்களுக்குத் தெரிகிறதா 
3-
நெடிதுயர்ந்து
நிற்கிறது மலை
உச்சியில்
என் முகச்சாயல் உள்ள
ஒருவன் நிற்கிறான்
பறவையின் பிரமிப்புடன்
அவனை அடைய வேண்டும்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
4-
குழந்தை போலிருந்த அவனை
பைத்தியக்காரன் எனச்சொல்லி
கைவிலங்கிட்டு
அழைத்துச் சென்றார்கள்
அவன் சத்தம்போட்டு
சிரித்தபடி சொன்னான்
விலங்குக்கு வெளியே
அவர்கள் பத்திரமாக
இருக்கிறார்கள்
உள்ளே நான்
சுதந்திரமாக இருக்கிறேன்
5-
வழிகாட்டி பலகை
காற்றில் ஆடி ஆடி
திசைகளை
மாற்றிக்கொண்டிருக்கிறது
பயணி நடக்கிறான்
பாடலை முணுமுணுத்தபடி
கண்களால்
வழிகளைத் தொட்டபடி
6-
பெரிதாகப் பேசுகிறீர்களே
கடலின் சேறு
ஒட்டியதுண்டா
உங்கள் மனதில்
7-
பொய்களில்
மறைத்து வைத்திருக்கும்
கத்திகளில்
உண்மையான வன்மம்
இருக்கிறது
8-
வெட்டப்பட்ட கனவிலிருந்து
கசியும் குருதியைத்
துடைக்கிறான் அவன்
இரவின் விரல்களிலும்
துளிகள் ஒட்டிக்கொண்டு
உதிர்ந்து விடாமல்
பேசுகின்றன
வலியின் கதைகளை
9-
உங்கள் மேல்தான்
ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
காற்றென
ஏதேனும்
தொந்திரவு நிகழுமெனில்
மாறுவேன்
பாம்பென
10-
என்னிடம்
மிச்சமிருப்பதும்
நான்தான்

(குங்குமம் பொங்கல் சிறப்பிதழில்-(20.01.2014) வெளியான கவிதைகள்)


1 comment:

  1. அனைத்தும் அருமை ஐயா... குங்குமம் பொங்கல் சிறப்பிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete