விடைபெறும்போது
ஒரு சின்ன புன்னகையை
விட்டுச் செல்லுங்கள்
கை குலுக்குங்கள்
தங்கிப்போன தருணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்
விடைபெறும்போது
பால்கனிச் செடி பிடித்திருக்கிறது
என்று சொல்லுங்கள்
குழந்தையின் கிறுக்கல்களை
ஓவியமாகக் கண்டெடுங்கள்
குறைவான சர்க்கரை இருந்தும்
காப்பி குறித்த சுவையை
சுவையாக சொல்லுங்கள்
விடைபெறும்போது
பிறந்த நாளை குறிப்பிட்டு
என் வாழ்த்துக்கள் வரும் என்று
உற்சாகப்படுத்துங்கள்
டீவியின் மேலிருக்கும்
பொம்மையை ரசியுங்கள்
அதன் கண்கள் வழியே
உங்களைப் பாருங்கள்
முதியவர்கள் இருப்பார்கள் எனில்
அவர்கள் வயதுக்குள்
போய் வாருங்கள்
விடைபெறும்போது
நாய்க்குட்டியைத்
தடவிக்கொடுக்க
மறக்காதீர்கள்
அது குரைக்குமெனில்
வீட்டின் பாதுகாப்பு கவசம்
எனப் பாராட்டுங்கள்
நகை இல்லாத
கழுத்தைப் பார்த்து
துயரப்படுவதை தவிருங்கள்
மீன் தொட்டி மீன்களிடம்
கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்
வாங்கிச் செல்லும் பொருளில்
உங்கள் பிரியத்தை
குறித்துவையுங்கள்
விடை பெறும்போது
தூசி படிந்த கணங்களை
அசைபோடுங்கள்
ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை
பொதுவான அலைவரிசையில்
பேசுங்கள்
முக்கியமாக
விடைபெறும்போது
நீங்கள் முழுதாய்
விடைபெற்றுவிடாமல்
நினைவுகளின் நீட்சியாய்
லயமாய்
அங்கு சுற்றிவரும்படி
இருக்கப் பாருங்கள்
(19.06.2011,கல்கி இதழில் வெளியானது)
remba remba pidichurukku....
ReplyDelete:)
ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாய் சென்று திரும்பும்போது மீண்டும் மீண்டும் அந்த விருந்தாளி வர மாட்டார்களா என்று ஏங்க வைக்கிறது உங்கள் கவிதை.
ReplyDelete