Powered by Blogger.

ஒரு பகல் நேரத்தில்

Wednesday, January 29, 2014

1-

முழு கடலையும்
மறைக்கிறான்
சுண்டல் விற்கும் சிறுவன்

2-

நதி கண்களில்
வழிகிறது
மணல் லாரிகளில்
நீந்துகின்றன மீனகள்

3-

எனது காட்சி
இன்னும் வரவில்லை
திரை இறக்குபவனை
பதட்டத்துடன் பார்க்கிறேன்

4-

இது ஒரிஜினல் ரத்த்த்தில்
வரைந்த ஓவியம்
இதற்கு ரத்தம் தந்தவர்
பக்கத்தில்
இறந்து கிடக்கிறார் பாருங்கள்
அவரை அடக்கம் செய்யவாவது
இந்த ஓவியத்தை
நீங்கள் வாங்கித்தான்
ஆக வேண்டும்

5-

காட்சிகள் இல்லாத
ஒரு பகல் நேரத்தில்
மிகத்தனியே
குலுங்கி குலுங்கி அழுகிறான்
சர்க்கஸ் கோமாளி
தன் கைகளைத் தட்டியபடி

6-

நூலகம்
பசி மறக்க
புத்தகம்

7-

பாலின் ஏடென
படிந்து கிடக்கிறது மெளனம்
நீக்கி
பருகப் பார்க்கிறேன்
உள் உறைந்த சொற்களை


பார்க்கிறது

சொல்லில் நீந்திய 
மீனை எடுத்து 
வாக்கியத்தில் போட்டேன் 
அது நீந்தி நீந்தி 
மொழியின் பரப்புக்குப் 
போகப் பார்க்கிறது

விடுதலை அடைந்தேன்

Thursday, January 23, 2014

தற்கொலை செய்து கொள்ள 
கயிறை வரைந்தேன் 
கயிறை அழித்து 
விடுதலை அடைந்தேன்

கதை சொன்ன போது

Monday, January 20, 2014

கனவு விழித்தபடி 
கதை சொன்ன போது 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன் 
கனவு உறங்கியபடி 
கதை சொன்ன போது 
நான் விழித்துக்கொண்டிருந்தேன் 

நீளம்

வாக்கியத்தின் நீளத்திற்கு 
போய் வருகிறது ஊஞ்சல் 
ஒவ்வொரு முறை 
போய் வரும் போதும் 
புது புது வாக்கியங்களை 
உருவாக்கிக் கொள்கிறது 

உங்களுக்குத் தெரிகிறதா

Sunday, January 19, 2014

1-
அன்பின் சுடர் அசைகிறது
என்று எழுதிய வரியை
நீங்கள் உடனே
அழித்து விடலாம்
உங்களால் ஊதி
அணைக்க முடியாது
2-
வெறும் கண்களை வரைந்து 
கடவுள் பிறந்து விட்டார் 
என்கிறாள் மான்யா
ஒரு கணப் பார்வையில் 
இமைகள் அசைவது 
அவளுக்குத் தெரிகிறது 
எனக்குத் தெரிகிறது 
உங்களுக்குத் தெரிகிறதா 
3-
நெடிதுயர்ந்து
நிற்கிறது மலை
உச்சியில்
என் முகச்சாயல் உள்ள
ஒருவன் நிற்கிறான்
பறவையின் பிரமிப்புடன்
அவனை அடைய வேண்டும்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
4-
குழந்தை போலிருந்த அவனை
பைத்தியக்காரன் எனச்சொல்லி
கைவிலங்கிட்டு
அழைத்துச் சென்றார்கள்
அவன் சத்தம்போட்டு
சிரித்தபடி சொன்னான்
விலங்குக்கு வெளியே
அவர்கள் பத்திரமாக
இருக்கிறார்கள்
உள்ளே நான்
சுதந்திரமாக இருக்கிறேன்
5-
வழிகாட்டி பலகை
காற்றில் ஆடி ஆடி
திசைகளை
மாற்றிக்கொண்டிருக்கிறது
பயணி நடக்கிறான்
பாடலை முணுமுணுத்தபடி
கண்களால்
வழிகளைத் தொட்டபடி
6-
பெரிதாகப் பேசுகிறீர்களே
கடலின் சேறு
ஒட்டியதுண்டா
உங்கள் மனதில்
7-
பொய்களில்
மறைத்து வைத்திருக்கும்
கத்திகளில்
உண்மையான வன்மம்
இருக்கிறது
8-
வெட்டப்பட்ட கனவிலிருந்து
கசியும் குருதியைத்
துடைக்கிறான் அவன்
இரவின் விரல்களிலும்
துளிகள் ஒட்டிக்கொண்டு
உதிர்ந்து விடாமல்
பேசுகின்றன
வலியின் கதைகளை
9-
உங்கள் மேல்தான்
ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
காற்றென
ஏதேனும்
தொந்திரவு நிகழுமெனில்
மாறுவேன்
பாம்பென
10-
என்னிடம்
மிச்சமிருப்பதும்
நான்தான்

(குங்குமம் பொங்கல் சிறப்பிதழில்-(20.01.2014) வெளியான கவிதைகள்)


இருளின் வண்ணம்

Tuesday, January 14, 2014

இரவை அழகாக 
வரைந்து காட்டுகிறது கனவு 
அதற்கு இந்த 
இருளின் வண்ணம் 
இன்னும் பொருந்துகிறது

அழுவதை நிறுத்து

Monday, January 13, 2014

வலியை வரையும்
வண்ணமா கண்ணீர்
அழுவதை நிறுத்து
உன் முகம்
சித்திரமானது போதும் 

தவளைகள் சத்தம்

தவளைகள் சத்தம் 
இரவின் மேல் 
சொற்களை அடுக்குகிறது 

சொற்கள் 
ஒரு  கனவாகி 
சிறகு விரித்து 
பறந்து வந்து 
மனதில் அமர்ந்து 
இளைப்பாறுகிறது 

உணர்ந்தபடி 
உறங்கிக் கொண்டிருக்கிறேன் 

விடிய இன்னும் 
நேரமிருக்கிறது 

என்ன செய்ய

Sunday, January 12, 2014

பாரமாகவே உணர்கிறேன் 
என்ன செய்ய 

முதலில் 
மனதில் சுமந்து செல்லும் 
சவப்பெட்டியை 
இறக்கி வையுங்கள்

ஏன் கொன்றீர்கள்

Thursday, January 09, 2014

அதுவாக
அமைதியாக
போய்க் கொண்டிருந்தது
அதை ஏன் கொன்றீர்கள்

என்ன கேள்வி இது
விஷப்பாம்பு
விட்டால் கடித்து விடும்
பிறகு மரணம்தான்

அவ்வளவு பயமா
உங்களுக்கு

ஆமாம்

அப்படி என்றால்
முதலில் நீங்கள்
உங்கள் பயத்தைதான்
கொன்றிருக்க வேண்டும்

பாம்பை அல்ல

சித்திரத்திலிருந்து

பழுதடைந்த சித்திரத்திலிருந்து 
கோடுகள் உதிர்கின்றன 
எந்தக் கோட்டிற்கும் 
வரைந்தவரின் பெயர் 
நினைவில் இல்லை

எல்லோரும்

Saturday, January 04, 2014

உடையவில்லை 
மிதந்து கொண்டிருக்கிறது 
நீர்க்குமிழி 
பார்க்கும் எல்லோரும் 
உடைந்து கொண்டிருக்கிறார்கள் 

புள்ளியில்

Friday, January 03, 2014

நீ கவனம்
குவித்த புள்ளியில்
மௌனம் பூத்திருந்தது
பறித்துக்கொண்டு
திரும்பி விட்டேன் 

ஒரு மழை நாளில்

ஒரு மழை நாளில்
அழுவது
இதமாக இருக்கிறது.
அது மழை போலவே
நிம்மதி தருவதாகவும்
இருக்கிறது.

மற்றவர்

பொய் பேச வராது
அதனால்
அமைதியாகி விடுவேன்
என்றார் ஒருவர்

என் அமைதி
அப்படி அல்ல
அதுதான் பொய்கள்
தயாரித்து கொடுக்கும்
பின் பேசுவேன்
என்றார் மற்றவர் 

தேநீர் வேளை

Thursday, January 02, 2014

தேநீர் வேளையில்
கண்ணீரின் அகதி நான் 
என்ற வரி வந்தது 
தேநீரும் 
உப்புக் கரித்தது
போலிருந்தது

ஆழ்மனதில்

ஆழ்மனதில் 
குத்தி இருந்த 
முள் ஒன்றை 
எடுத்து விட்டேன் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
குருதியைத்தான் 
நிறுத்த முடியவில்லை 
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்