Powered by Blogger.

நம்பிக்கை

Friday, November 25, 2011

பூவு வாடிப்போறதுக்குள்ள
வித்துடுவிங்களாப் பாட்டி

வாங்கிட்டுப் போறவங்களுக்கும்
வாடித்தானப்பா போவும்

வியாபாரத்துல சேதாரத்த
முதல்லயே
பாக்கக்கூடாது தம்பி

கட்டிக் கொடுக்கிறாள் பாட்டி
வாடாத நம்பிக்கைகளுடன்

அதே வரி

மருத்துவமனைக்கு வெளியே
காப்பியோ டீயோ
வாங்கிய மூதாட்டி
வாகனங்கள் பார்த்து
மூச்சிறைக்கக் கடந்து
புலம்பியபடியேப் போகிறாள்
புள்ளப் பொழைச்சிக்கணும்

அவசர கதியில்
ஒரு கணம் நின்று
பிரார்த்தனைச் செய்யத்
தோன்றுகிறது

இழுக்கும் வேகத்தில்
நிற்காமல்
உச்சரித்து ஓடுகிறது மனம்
அதே வரியை
புள்ளப் பொழைச்சிக்கணும்

கல்

Wednesday, November 23, 2011

உங்கள் மீது
எறிய சேர்த்த கல்
குவிந்து கிடக்கிறது

அதனுள்ளே
என்னுயிர்
புதைந்து கிடக்கிறது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Tuesday, November 22, 2011

749-

என்ன மிச்சமிருக்கிறது
என்ற கேள்வியே
மிச்சமிருக்கிறது

750-

வாழ்க்கையின் உயரம்
அளவிட முடியாதது
மரணத்தின் நீளம்
சவப்பெட்டி
அளவே கொண்டது

751-

கண்ணாடிப் பெட்டிக்குள்
இறந்தவரின் முகமும்
மரணத்தின் முகங்களும்

752-

உள்ளிருந்தது
எழுத்தின்
உள்ளிருந்தது

753-

நிர்வாணத்தில்
அழகாய்
ஆதி உலகம்

754-

உன் கனவைத்
தின்றேன்
ஆப்பிள் சுவை

பட்டாம் பூச்சியே

Sunday, November 20, 2011

பட்டாம் பூச்சியே
உன் பெயரைச்
சொல்லிச் செல்

காற்று

அனுபவ சித்தனின் குறிப்புகள்

742-

ஊனம் அழி
ஞானம் அறி

743-

மனதில் சேறு
உதட்டில்
சந்தனப் புன்னகை

744-

மிதக்கிறேன்
மேகத்தைப்
பிய்த்துப் போட்டபடி

745-

இறந்து கிடக்கிறேன்
என் உயிரின்
மேல்

746-

தயக்கம்
ஒருவித
சுய மரணம்

747-

பயணங்களைத்
தின்றபடி ஓடுகிறது
என் குதிரை

748-

கிள்ளி எறிந்த சொல்
வலி சொல்ல
எப்படி மொழி பெற்றது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Friday, November 18, 2011

736-

என் பெயரின் பின்னால்
ஒளிந்திருக்கும்
குற்றங்களின் பெயர்கள்

737-

மன்னிப்பிலிருந்து
மறுபடியும்
தவறுக்குள்
நுழைந்துவிட்டேன்

738-

அவனுள்
அணைந்து போகாத நெருப்பு
எரிந்துகொண்டிருந்தது

அவன்
அணைக்க விரும்பினாலும்
தன்னை அணைத்துக்கொள்ள
விரும்பாத
நெருப்பு அது

739-

நான் போய்தான்
தீரவேண்டும்
நீங்கள் துண்டு துண்டாக
வெட்டினாலும்
மரணமாகவாவது

740-

நமது வேடங்கள்
தீர்மானிக்கப்பட்டு விட்டன
ஒப்பனைக்குத்தான்
நேரம் பிடிக்கிறது

741-

கையெட்டும் தூரத்தில்
வைத்துவிட்ட நினைவைத்
தேடுகிறேன்
எங்கெங்கோ அலைந்து
என்னையே மறந்து

*மகளின் கட்டளைகள்

Sunday, November 13, 2011

விடுமுறைக்கு
ஊருக்கு வந்த மகள்
அப்பாவை போனில் கூப்பிட்டு
உரக்கச் சொன்னாள்

அப்பா நான் வர்ற வரைக்கும்
மீன் தொட்டி மீன்கள
கவனமாப் பாத்துக்குங்க
அதுங்ககிட்ட
அடிக்கடி பேச்சுக்குடுங்க

பால்கனிச் செடிக்குத்
தண்ணி ஊத்துங்க

படிக்கட்டு பக்கம்
வர்ற அணிலுக்கு
தானியம் போடுங்க

மாடியில வந்து
உட்கார்ற காக்காவுக்கு
சோறு வைங்க
பாக்காம விட்றாதிங்க

நாய்க்குட்டிய
வாக்கிங் கூட்டிட்டுப் போங்க
கொஞ்சம் தூரமாப்பா
சின்னதா சுத்திட்டு வரவேணாம்

அப்புறம் ஜன்னலோரத்துல
வந்து உட்கார்ற புறா
அதுவா பறந்து போயிடும்
விரட்டி விட்றாதிங்க

என் டேபிள் மேல
ஒரு யானை
வரைஞ்சி வச்சிருக்கேன்
அத எடுத்து
பத்திரமா உள்ள வைங்க
யானைக்கு ஒரு பேரும்
யோசிச்சு வைங்க

எல்லாவற்றையும்
பொறுமையாகக்
கேட்டுக்கொண்ட அப்பா
மெல்ல
மகளின் வனத்திற்கு
காவலாளியாக
மாறத் தொடங்கினார்

*கல்கி இதழில் (20.11.2011) வெளியான கவிதை

அவர்கள்

Monday, November 07, 2011

யார் யாரையோ
புனிதர்களாக்கி விட்டோம்
அவர்கள் தங்களைக்
கடவுளாக்கிக் கொண்டார்கள்

போய்க் கேள்

கோபப்பட்டு
என்ன ஆகப்போகிறது என்று
ஒதுங்கிப்போகும் நண்பனே
கேள்
கோபப்படாமலும்
ஒன்றும் ஆகப்போவதில்லை
போய்க் கேள்

திரும்பவில்லை

Friday, November 04, 2011

எல்லோரும்
அவரவர் இடத்திற்குத்
திரும்பி விட்டார்கள்
கடவுள் மட்டும் இன்னும்
கோயிலுக்குத்
திரும்பவில்லை

யாரோ தொலைத்த குழந்தை

யாரோ தொலைத்த குழந்தை
என்னிடம் கிடைத்த
கொஞ்ச நேரத்தில்
அன்பாகி இருந்தது

கதை கேட்டது
கைதட்டிச் சிரித்தது
பலூன் உடைத்தது
பெயர் சொன்னது
கட்டிப் பிடித்துக் கொண்டது
என்னையும்
குழந்தையாக்கியது

தொலைத்தவர்களை
கண்டுபிடித்து
குழந்தையைத் தர
நிம்மதியும் சந்தோஷமும் சேர
கையெடுத்துக் கும்பிட்டுப் போயினர்

மறுபடி
குழந்தை தொலைந்து போனது
என்னிடமிருந்து

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Thursday, November 03, 2011

733-

உடல் நடுங்க
பார்க்கிறது யானை
மதம் பிடித்த பாகனை

734-

அனுமதி பெற்று
உள்ளே வரவும்

அனுமதி பெறாமல்
வெளியேறினேன்

735-

அடித்து திருத்தி
எழுதிய கடிதம்

அடித்தலில்
போயிருந்தன உண்மைகள்

திருத்தலில்
மேலெழுப்பின பொய்கள்

வினாடிகள்

புணர்தலின் நிமித்தம்
ஒரு பெண்ணோடு
பேச விரும்புகிறவனின் நட்பு
விந்துக்கான வினாடிகளோடு
முடிந்து விடுகிறது

யாருக்கும் தெரியாமல்

Tuesday, November 01, 2011

விளை நிலங்களில் எல்லாம்
கட்டிடம் முளைப்பதைப்
பார்த்த விவசாயி
கலங்கிப் போனான்

யாருமற்றப் பயிரைப் போல
வாடிப் போனான்

கட்டிடங்கள்
நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்ட
சவப்பெட்டிகளாக
அவனுக்குத் தோன்றின

பேச்சற்று எல்லோரும்
வேடிக்கைப் பார்ப்பது ஏன்

எதுவும் கேட்காமல்
போவது ஏன் என

ஆயிரம் கேள்விகள் கேட்டு
தனக்குள் அறுந்து போனான்

இளைஞர் சந்ததிக்கு
எச்சரிக்கை கடிதமும்

கையாலாக சமூகத்திற்கு
கண்டனக் கடிதமும்
ஒன்றாய் எழுதி வைத்துவிட்டு
தூக்கில் தொங்கினான்

அதிகாலை பிஞ்சு ஒளியில்
உண்மை போல ஆடியது
அவன் உடல்

யாருக்கும் தெரியாமல்
அவன் கடிதம்
களவாடப்பட்டது

அவன் மரணம்
புதைக்கப்பட்டது
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்