Wednesday, June 29, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

555-

எழுத வைக்கும்
வரியை
எப்படி எழுத

556-

தனிமை கிழித்த
உடலைத் தைக்கிறேன்
தனிமை கொன்று

557-

தேதிகளைக் கிழிக்கும் குழந்தை
காலத்தின் மறுமுனை போய்
திரும்பி வருகிறது

558-

எனது தற்கொலை
வெளியேற்றும் மரணம்
ஒருபோதும் வழங்கப்போவதில்லை
எனக்கு மன்னிப்பை

559-

பல்லாயிரம்
சொற்களைக் கொன்றேன்
எனினும் அடங்கவில்லை
என் பசி

Tuesday, June 21, 2011

ரொட்டி

உங்களில்
அதிக பசி உள்ளவர்கள்
இந்த ரொட்டியை
எடுத்துக்கொள்ளலாம்

ரொட்டி அப்படியே இருக்க
பசித்தவர்கள்
இறந்து கிடந்தார்கள்

Sunday, June 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

544-

பதுங்கிக்கொள்ள
பழகுகிறேன்
பாய்வது
தானாய் வரும்

545-

உங்கள் மந்திரத்தில்
சிலை உயிர் பெற்றது
மந்திரம் பொய் என்று
உங்களை அழித்தது

546-

நான் எண்களால்
கட்டப்பட்ட மாளிகை
என் பெயர் பூஜ்யம்

547-

இங்கு என்னைப் பற்றிய
எந்த குறிப்புகளும் இல்லை

நீங்கள் எதிர்பார்த்து வந்து
ஏமாந்து போகாதீர்கள்

அல்லது

எதிர்பார்த்து வந்ததை
குறிப்புகளாக
எழுதி வைத்துவிட்டுப்
போய்விடாதீர்கள்

548-

எறும்பு இளைப்பாறும்
இந்த தாளில்
எதுவும் எழுத
விரும்பவில்லை

549-

கேள்வியில்
நுழை
பதிலில்
வெளியேறு

550-

சுமக்க எதுவுமில்லை
என்பதே கனக்கிறது
சுமையாய்

551-

கனவின் குறிப்புகளை
காட்டியவர்களுக்கு
அனுமதி வழங்கப்பட்டது

கனவாகவே இருந்தவர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டது

552-

குழந்தையின் கையால்
தொடுகிறேன்
பஞ்சுபோல்
அசைகிறது மலை

553-

ஒற்றனைப்போல் வந்து
நண்பனைப்போல்
வெளியேறுகிறீர்கள்

நண்பனைப் போல் வரவேற்று
ஒற்றனைபோல்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

554-

தியானத்தில்
எறிந்த கல்
போகிறது
ஆழம் நோக்கி
தியானிக்க

Friday, June 17, 2011

சொல்

சிறகை போல்
பறந்தது இலை

இலையைப்போல்
பறந்தது சிறகு

இரண்டையும் போல்
பறந்தது சொல்

Thursday, June 16, 2011

நீ...நான்...

உன் கத்தியின் வசீகரத்தில்
நான் மயங்கிவிடும்போது
நீ குத்திவிட நினைக்கிறாய்

உன் குரூரத்தின் கண்கள்
மூடிவிடும்போது
நான் தப்பிவிட நினைக்கிறேன்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

536-

நான் பலநூறு ஆண்டு
பழமையான மரம்
வெட்டவா போகிறாய்

பதிலில்லை

விழுந்துகொண்டிருந்தது
பல நூறு ஆண்டுகளோடு
இப்போதைய கணங்களும்

537-

மூச்சு முட்டி
இறந்துபோனது
ஜன்னலற்ற வீடு

538-

எப்போதும் போல்
இந்த கண்ணீர் சுடவில்லை
எரித்தது

539-

பசி
கனவள்ளித் தின்னும்
இரவு

540-

கண்ணீரால் பேசிக்கொண்டோம்
புன்னகை ஒளிந்தபடி
பார்த்திருக்க

541-

துள்ளி மேலெழும்பி வந்து
சொல்லிவிட்டுப்போனது
நான் கடலைத் திறக்கும் மீன்

542-

மையமற்ற நிலைக்கு
போவாயா என்றேன்

எனக்கு வடிவச் சிக்கலை ஏற்படுத்தி
நீ உட்கார்ந்து
வேடிக்கைப் பார்க்க போகிறாயா என்று
கேட்டபடியே
ஓடியது வட்டம்

543-

கண நேர
கண் மூடல்
பெரும் தூக்கம்

Tuesday, June 14, 2011

மலை உச்சியில்

இந்த மலை உச்சியில் இருக்கும்
என்னை நீங்கள்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனாகப்
பார்க்கிறீர்கள்

நான்
தற்கொலை செய்துகொள்ளப்போகிறவனைத்
தடுக்க வந்தவனாகப்
பார்க்கிறேன்

அந்த பறவை
விரைவில் மேலெழும்பி
பறக்கப்போகும் பறவையாக
என்னைப் பார்த்துச் செல்கிறது

Monday, June 13, 2011

தாலாட்டுதல்

எல்லோரும் தூங்கிவிட
விழித்திருக்கும் குழந்தையை
தாலாட்டியபடியே
ஓடுகிறது ரயில்

வெறும் காகிதம்

இதில் விலாசமில்லை
வெறும் காகிதம்

இதை வைத்துக்கொண்டு
எப்படி போவது

காகிதத்தில்
கோடுகளை வரையுங்கள்
பாதைகள் கிடைக்கும்

பாதைகளில்
காதுகளை வையுங்கள்
விலாசங்கள் கிடைக்கும்

Sunday, June 12, 2011

விடைபெறும்போது

விடைபெறும்போது
ஒரு சின்ன புன்னகையை
விட்டுச் செல்லுங்கள்

கை குலுக்குங்கள்

தங்கிப்போன தருணங்களைப்
பகிர்ந்துகொள்ளுங்கள்

விடைபெறும்போது
பால்கனிச் செடி பிடித்திருக்கிறது
என்று சொல்லுங்கள்

குழந்தையின் கிறுக்கல்களை
ஓவியமாகக் கண்டெடுங்கள்

குறைவான சர்க்கரை இருந்தும்
காப்பி குறித்த சுவையை
சுவையாக சொல்லுங்கள்

விடைபெறும்போது

பிறந்த நாளை குறிப்பிட்டு
என் வாழ்த்துக்கள் வரும் என்று
உற்சாகப்படுத்துங்கள்

டீவியின் மேலிருக்கும்
பொம்மையை ரசியுங்கள்

அதன் கண்கள் வழியே
உங்களைப் பாருங்கள்

முதியவர்கள் இருப்பார்கள் எனில்
அவர்கள் வயதுக்குள்
போய் வாருங்கள்

விடைபெறும்போது
நாய்க்குட்டியைத்
தடவிக்கொடுக்க
மறக்காதீர்கள்

அது குரைக்குமெனில்
வீட்டின் பாதுகாப்பு கவசம்
எனப் பாராட்டுங்கள்

நகை இல்லாத
கழுத்தைப் பார்த்து
துயரப்படுவதை தவிருங்கள்

மீன் தொட்டி மீன்களிடம்
கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்

வாங்கிச் செல்லும் பொருளில்
உங்கள் பிரியத்தை
குறித்துவையுங்கள்

விடை பெறும்போது
தூசி படிந்த கணங்களை
அசைபோடுங்கள்

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை
பொதுவான அலைவரிசையில்
பேசுங்கள்

முக்கியமாக
விடைபெறும்போது
நீங்கள் முழுதாய்
விடைபெற்றுவிடாமல்
நினைவுகளின் நீட்சியாய்
லயமாய்
அங்கு சுற்றிவரும்படி
இருக்கப் பாருங்கள்

(19.06.2011,கல்கி இதழில் வெளியானது)

Wednesday, June 08, 2011

பூவிடம்

பறித்துக்கொள்ளலாமா என்று
செடியிடம்
அனுமதி கேட்டேன்

பறிக்கலாமா என்று
பூவிடம்
கேட்க மறந்துவிட்டேன்

Sunday, June 05, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

531-

எழுப்பிவிட்டு
நள்ளிரவின் மேல்
தாவிப்போகிறது கனவு

532-

பிடிபடாமல்
பிடிக்க முடியாமல்
வந்து வந்து
போகின்றன வரிகள்

533-

பெய்துமுடித்துவிட்டது மழை
வடிந்துகொண்டிருக்கும் மழைதான்
முடியக்காணோம்

534-

தாளில் ஏறிய எறும்பு
இழுத்துப் போகிறது
எழுத்துக்களை

535-

நாக்கின் நுனியில்
பெளர்ணமி மரம்
வார்த்தைகளுக்கு
ஒளி பாய்ச்சும்

Wednesday, June 01, 2011

கண்களில் ஆடிய ஜூவாலை

மெழுகுவத்தி வெளிச்சத்தில்
எப்போதும் குடிக்கும் பழக்கம்
நண்பனுக்கு

அவன்
நான்
மெழுகுவத்தி

அல்லது

அவன்
மெழுகுவத்தி

இந்த அட்டவணையில்
நிகழ்வு இருக்கும்

உட்கொள்ளும் துளிகளுக்கேற்ப
சொற்களை நடனமிடச் செய்வான்

அப்போது
நானும் மெழுகுவத்தியும்
கேட்கும் காதுகளாவோம்

அவன் பேச்சிலிருந்து
குதிக்கும் தவளைகள்
சத்தமிட்டு தாண்டிப்போகும்
இருளில் மறையும்

பேசும்போது
அவனை அறியாமல்
வரும் கண்ணீர்த்துளி

அதை மெழுகுவத்தியின்
உருகும் துளியோடு
கலந்து பார்ப்பான்

எந்த வாளினால்
உலகை அறுத்தாலும்
அது மீண்டும்
ஒன்று சேரும்
அன்பை வழங்கும் என்று
அபூர்வமாக ஏதாவது சொல்வான்

ஒவ்வொரு காயத்திலும்
தத்துவத்தை தடவினால்
வலிக்கவே வலிக்காது என்பான்

போதை அவனை
செல்லமாகத் தாலாட்டும்

அந்த ஊஞ்சலின்
அசைவுக்கேற்ப ஆடுவான்

சில நேரங்களில்
எல்லாம் துண்டிக்கப்பட்ட
அமைதி நிலவும்

அது பயத்தைத் தரும்

அப்போது மெழுகுவத்தி
சொட்டுவது மட்டும் கேட்கும்
பார் இது பேசுகிறது என்பான்

மெழுகுவத்தி
கோப்பையில் நிலவைப்போல
அசைந்தாடுகையில்
குடிக்காமல் கவனிப்பான்

எல்லாவற்றிலும்
நம்மை நட்டுவைத்து
சுயநலத் தோப்பாகிப்போனோம்

இந்த அவனது வாசகம்
எனக்கு மிகவும்
பிடித்த ஒன்று

ஒரு நாள் கேட்டேன்
மெழுகுவத்தி அணைந்துபோனால்
என்ன செய்வாய்

சிரித்தான்
சத்தமிட்டான்
அமைதியானான்
சொன்னான்

நான் ஏற்றும் மெழுகுவத்திகள்
அணைவதே இல்லை
எல்லாம் எனக்குள்
எரிந்துகொண்டிருக்கின்றன

அப்போது
அவன் கண்களில்
ஆடிய ஜூவாலை
என்னை கவனிக்கவைத்தது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

525-

குழந்தையின் மழலைக்குள்
குதிக்கிறது
அருவியின் பேரிசையும்
அமைதியின் கருணையும்

526-

கிடைக்கும்
ஏதாவது கிடைக்கும்
இரண்டிற்குமிடையில்
கிடைக்கப்போவதை
நினைத்தபடி

527-

நான் தருணங்களில்
தொலைபவன்
காலம் கண்டெடுக்கும்

528-

குத்திக் கிழித்து
ரத்தம் வரவழித்தது
எது என்று பார்த்தேன்

முனை முறிந்த
கனவு

529-

புவியீர்ப்பு விசைக்குள்
வராமல் மிதந்தபடி
எறிந்த பந்து

530-

எங்கிருந்து
தொடங்குவது
கேள்வியிலிருந்து