Sunday, February 03, 2019

காற்றில் பறந்த கடிதம்

தற்கொலைக் கடிதம் எழுதிய அவன்
மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான்
சில பிழைகளைத் திருத்தினான்
அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான்
கடந்து வந்த ரணங்களை
எழுத்து கடத்தி இருப்பது குறித்து யோசித்தான்
இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற
பாதை வரைபடம் தன்னுள் அவனைப் பார்க்க வைத்தது
நாமா இப்படி எழுதி இருக்கிறோம் என ஆச்சர்யப்பட்டுப்
பேனாவை இறுக்கப்பிடித்தான்
சிந்திய மைத்துளிகள் பறப்பது போல் உணர்ந்தான்
உராய்வுகளுக்கு உயிரிழப்பா முடிவு என
அவன் எழுதாத ஒரு வரி வந்து
மூளையில் தட்டியது
இருத்தல் என்பது வாழ்ந்து தீர்ப்பதல்ல
வாழ்ந்து பார்ப்பது
அவனுள் எதிரொலித்தது
என்னைக் கொன்று போட
நான் யார்
இந்த ஒலி அவனைச் சுற்றி வந்தது
இப்படிக்கு இறக்கத்துடிக்கும் ஒருவன்
என்ற வரியை
மாற்றி எழுதினான்
ஏழாவது மாடியிலிருந்து
அந்தக் கடிதம்
பறவையைப் போல்
போய்க்கொண்டிருந்தது
இப்படிக்கு
வாழ விரும்பும் ஒருவன் என
அது முடிந்திருந்தது
அவன் படிகளில்
இறங்கிப்போய்க்கொண்டிருந்தான்

Monday, January 07, 2019

எதிரே யாருமில்லை

எதிரே யாருமில்லை
எதற்கு
இப்படி நடிக்கிறீர்கள்

கனவில்

வந்த கனவில்
விளக்குகள் மின்ன
மைக்குகள் நீட்டப்பட
பொல்லாத அரசியல்வாதி
உளறிக்கொட்ட
உடனே எழுந்துவிட்டார்


Saturday, January 05, 2019

காத்திருப்பு

இந்தக் காத்திருப்பில்
என்ன கற்றுக்கொண்டீர்கள்
மேலும்
காத்திருக்க வேண்டும் 
என்பதை

வீதியோர விளக்கு

புத்தகத்தில்
போய் வரும்
கண்களைப் போல
அசைந்தாடி 
இருளைப் படிக்கிறது
வீதியோர விளக்கு

Tuesday, January 01, 2019

பொம்மை விற்கும் சிறுமி

பொம்மை விற்கும் சிறுமியோடு
செல்பி எடுத்துக்கொண்டார்
புத்தாண்டு வாழ்த்து சொன்னார்
இனிப்பு தந்தார்
பூந்தி சிந்த 
நல்லா இருக்கு
எனச் சொல்லியபடியே
அடுத்த பொம்மை விற்க ஓடினாள் சிறுமி
- ராஜா சந்திரசேகர்

Tuesday, December 25, 2018

கடைசியில்

கடைசியில்
கண்ணாடிப்பெட்டியை
எடுத்துப்போனார்கள்
அதில் கொஞ்சம்
மரணம் ஒட்டி இருந்தது



குழந்தை யானை


கிளினர் பையனுக்குப்
பத்துபனிரெண்டு வயதிருக்கும் 
விசில் எழுப்பியபடி
குழந்தையைப் போல
லாரியைக் கழுவுகிறான்
விரல்களைச் சீப்பாக்கி
தலையைக் கோதிக்கொள்கிறான்
லாரி அவன் நீரில்
மூழ்கி எழுகிறது
புதிதாய் லாரியை மீட்டெடுத்து
அதற்கு ஒரு முத்தம் வைக்கிறான்
அவன் உதட்டில்
உயிர் அசைகிறது
எட்டும் மட்டும் கை நீட்டி அணைக்கிறான்
குழந்தை யானை என்று
அதற்கு வைத்த பெயரை
ஒரு முறை சொல்லிக்கொள்கிறான்
தொலைவில் போய் நின்று
குளித்துமுடித்த லாரியைப் பார்க்கிறான்
நாளை அந்த லாரியை
ஓட்டப்போகும் டிரைவர் போல
உடல் நிமிர்த்தி
மிதந்து போவது போல்
அதை நோக்கி நடந்து போகிறான்

குங்குமம் இதழில்(28.12.2018) வெளியானது

Thursday, December 20, 2018

கண்ணாடிப் பெட்டி

கண்ணாடிப் பெட்டிக்குள்
இருக்கும் அப்பாவை
வரைகிறது குழந்தை
அசைவற்று இருக்கும் அப்பா
மீன் போல்
அசைந்து அசைந்து நீந்துவார்
என்ற நம்பிக்கையில்
பிறகு அதற்குள்
நீர் ஊற்றுகிறது
- ராஜா சந்திரசேகர்

Tuesday, December 04, 2018

இன்னும்...


இன்னும் சிலரில்
நானுண்டு
மற்றும் பலரில்
என் பெயருண்டு

Wednesday, November 28, 2018

முடியாதவள் கதை

ரயில் போகும்போதெல்லாம்
ஆடு மேய்க்கும் பெண்
தன் கண்களைப் பிடுங்கி
ரயிலுக்குள் எறிகிறாள்
அது ஊர்சுற்றிப் பார்த்துவிட்டு
அவளிடம் திரும்புகிறது

Friday, November 09, 2018

பிளாட்பாரப் பாட்டி


நெடுநாள் பார்க்கும்
பிளாட்பாரப் பாட்டியிடம்
ஒரு நாள் கேட்டேன்
ஏதாவது ஒரு ரயிலில் ஏறி
ஏதாவது ஒரு இடத்திற்குப் போய்
இறங்கி இருக்கலாமே
கண்கள் துடைத்து
சிரித்தபடிச் சொன்னாள்
அப்படித்தான் தம்பி
இங்க வந்து சேர்ந்தேன்

Monday, November 05, 2018

காத்திருப்பில்

இந்தக் காத்திருப்பில்
நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்
மேலும்
காத்திருக்க
அனுமதிக்கப்படுகிறீர்கள்

     

Saturday, November 03, 2018

ரொட்டி

குழந்தை
ரொட்டி வரைந்தபின்
எல்லோரும்
பங்கு பிரித்துச் சாப்பிட்டார்கள்
தயங்கி தயங்கி
கடைசியில் இருந்தவன் சொன்னான்
கொஞ்சம் பெரிய ரொட்டியாக
வரைந்திருக்கலாம்

Saturday, October 13, 2018

முடிந்துவிட்டது

கண்ணீரைக்
கொண்டுவந்த மழை
நின்றுவிட்டது
புன்னகையைக்
கொண்டுவந்த கண்ணீர்
முடிந்துவிட்டது

 

Thursday, October 11, 2018

குழந்தையும் கடலும்


அள்ளும் குழந்தையின்
கைக்குள்
மொத்தக் கடலும்
வரப்பார்க்கிறது

வரிகள்

முதல் வரி
உன் கண்களில் இருந்தது
மீதி வரிகள்
புன்னகையில் இருந்தன
கடைசி வரியை
கண்ணீரிலிருந்து
எடுத்துக்கொண்டேன்
   

Friday, October 05, 2018

மற்றும் நான்

நிசப்த இரவு
நீண்ட இருள்
அதிர்ந்து அணையும்
மின்மினிப்பூச்சி
ரகசிய விளக்குகள்
விழுந்து அசையும்
சித்திர நிழல்
புணர்ந்த நாய்கள்
தைரியம் இழுத்து
பயம்விடும் சுவாசம்
வீதி திரும்ப
மரண வாடை
காய்ந்த பூக்கள்
அறுந்த நினைவுகள்
கோடாய் நெளியும் முதியவர்
தேங்கிய நீர்
சுற்றும் பூச்சிகள்
வலிகளோடு போர்
காற்றை உடைக்கும்
துயரப்பாடல்
கால் தாண்டும் தவளை
குவிந்த குப்பையில்
முடிந்த ஆணுறை
சுய விசாரணை
வியர்வை நாற்றம்
ஓடும்
நடக்கும்
மற்றும்
நகரும் நான்

Wednesday, August 29, 2018

பொய்கள்

பழைய பொய்களைச்
சொல்கிறோம்

பழைய பொய்கள்
தயாரித்துத் தரும்
புதிய பொய்களைச்
சொல்கிறோம்

   

Saturday, August 04, 2018

வாய்மையை மென்று உண்


மக்களை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்
விருந்து உண்பது போல் அதைச் செய்

அவர்கள் கோபத்தில் நியாயமுண்டு
கோபத்திற்குக் கைது செய்
நியாயங்கள் நீர்த்துப் போகட்டும்

கட்டளைகளுக்கு ஆடு
புனிதர் வேடம் போடு
கருணை வசனம் பேசு

பெரிதாய்ப் பெறு
சொன்னபடி காய் நகர்த்து

முளையிலேயே கிள்ளி எறி
மலையாக வளர விடாதே

பதட்டம் வடிய வேண்டாம்
கொதிநிலை குறையாமல் பார்த்துக்கொள்
வேறு எதையும் சிந்திக்க விடாதே
குழப்பம் குறையக்கூடாது

போதை தள்ளாட்டம் இருக்கட்டும்
அப்போதுதான் நாம் விழாமல் இருப்போம்

பொய்களால் வண்ணம் பூசு
நம்பிக்கை வானவில் நீங்கள்
எனச்சொல்லி நம்ப வை

பேசுவதை நிறுத்தாதே
அவர்களைப் பேச விடாதே

யார் என்ன சொன்னால் என்ன
கேட்பது போல் நடி

வழிகள் கண்டுபிடி
வரவுகள் வரட்டும்
எம் மனசு வெள்ளை மனசு என்று
இரக்க மொழி பேசு

ஊடக வெளிச்சம் பாயும் போது
உள்ளிருள் காட்டாதே
சுற்றி வளைத்துப் பேசு
புன்னகையால் கடந்து விடு

ஒப்பந்தம் செய்
பணபந்தம் சேர்
குளோசப்பில் கண்ணீர் முகங்களும்
கதறலும் வரும் போது
சேனல் மாற்று

வாய்மையை மென்று உண்
வாய்மையே வெல்லும் என்று சொல்