Tuesday, September 04, 2007

இருள்பை

திரும்பிய இரவில்
இருளைக் கத்தரித்து
ஒரு பை செய்தேன்
ஒவ்வொரு பயமாய்
அதில் போட்டு வந்தேன்
வழி நெடுகிலும்
வீட்டை அடையும்வேளை
எதிர்படும் யாரிடமாவது
பையை மாற்றிவிடத் திட்டம்
என் நீளமான விசிலுடன்
சேர்ந்திருந்தன
வேறு சில குரல்களும்
ஒன்றை ஒன்று தின்ன
ஆரம்பித்த பயங்கள்
இல்லாமல் போயின
இருள்பை பிய்ந்து
இரவோடு போனது
கதவு திறந்து
கூப்பிட்டது வீடு
விசிலில் இணைந்திருந்தது
பாடலின் பல்லவி

Wednesday, August 22, 2007

உடைந்த இசைத்தட்டு
சுழலுகிறது காற்றில்
வலி மறந்து

Tuesday, August 21, 2007

எண்களின் வலை

கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று

Sunday, August 19, 2007

இழந்த மரம்

அவசரமாய் காகிதம் கிழித்து
காது குடைந்தபடிப் பார்த்தேன்
நான் கிழித்திருந்தது
மகள் வரைந்த மரத்தை
என்னால் தன் மரம்
செத்துப்போனதாக
அழுது புரண்டாள்
நிறுத்த முடியவில்லை
கையிலிருந்த காகிதத்தில்
பிய்ந்துபோன கிளை
கிளையை விட்டு
வெளியேறிய பறவைகள்
அவளோடு சேர்ந்து
சண்டைக்கு வந்தன
கிளை விரிந்து காடானது
காட்டின் சத்தம்
காதை உடைத்தது
நேரமாயிற்று அடங்க
குழந்தையின் அழுகையும்
காட்டின் கோபமும்

Saturday, August 04, 2007

தூறலைப்பிடிக்கும் சிறுமி

கை நீட்டி
தூறலைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுமி
கண்ணில் மின்னல் பொங்கச் சொன்னாள்
இந்தத் தூறலை வைத்து
மழையை வளர்க்கப்போகிறேன்
விரலிடுக்கில் துளிகள் நழுவ
முகம் சாய்த்துக்
கை குவித்தாள்
பள்ளி விட்டு வந்த
ஒரு நாளில்
சிறுமியிடம் கேட்டேன்
எந்த அளவிற்கு
மழை வளர்ந்திருக்கிறது என்று
தன் புத்தகப் பையில்
சில குட்டி மேகங்களைச் சேர்த்து
வைத்திருப்பதாகப் பூரித்தாள்
நனைய மழை வேண்டுமா
பார்த்தபடி கேட்டாள்
அப்போது எட்டிப்பார்த்த
வானவில் துண்டு சிரித்து
மறைந்து போனது

( செப்டம்பர் 2007 'புதிய பார்வை' இதழில் வெளியானது)

Saturday, July 21, 2007

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்

உன்னைத் துப்பாக்கியால் விசாரிக்கப்போகிறேன்
என்றது குரல்
துப்பாக்கி பிடித்த கரம் தெரிந்தது
மங்கலான வெளிச்சத்தில் அசைந்தது
உயிர் மீது வைக்கப்பட்ட குறி என்பதால்
பயம் சகதியாகி உள்ளிறக்கியது
தொடங்கியது விசாரணை
உன்னை சுடுவதில் தவறில்லை
நீ நாட்களை சோம்பேறித்தனத்துடன் துவக்குகிறாய்
காலைச் சூரியனைப் பார்த்ததில்லை
சுயநலத்தின் வலை
உன் நகர்வுகளைப் பின்னுகிறது
துப்பாக்கியின் கோபம் கூடியது
நேற்று கூட
காசு கேட்ட ஒரு சிறுமியை
உற்றுப்பார்த்துப் போடும் போது
கையை அழுத்திப்பிடித்தாய்
பூவை
நிலவை
நாய்க்குட்டியை
நீ ரசித்ததில்லை
இன்னும் விசாரணையை
நீட்ட விரும்பவில்லை
தீர்ப்பைத் தரப்போகிறேன்
சொன்ன துப்பாக்கி வெடித்தது
அதிர்ச்சியில் உறைந்து எழுந்தேன்
வலி
ரத்தம்
மரணம்
எதுவுமில்லை
இரவைத் துளைத்திருந்தன
துப்பாக்கியின் தோட்டாக்கள்

Wednesday, July 18, 2007

சந்திப்பு

ஒரு ரயில் பயணத்தில்
சந்திக்க நேரிட்டது
கணக்கு ஆசிரியரை

பள்ளி நாட்களுக்குள்
போய் வந்தோம்

இப்போதும்
என்னால் உணரமுடிந்தது
அவர் பிரம்பின் வலியை

வாழ்க்கையை
சரியான கணக்கில்
வைத்திருக்கிறாயா என்றார்

ஆமாம் என்றேன்

கண் மூடி
தலை அசைத்து
ரயில் சத்தத்தை ரசித்தார்

என் நிறுத்தம் வர
விடை பெற்றேன்

கண்ணாடியை சரிசெய்து
மீண்டும் ஒரு முறை
என்னைப் பார்த்து சிரித்தார்
பள்ளி நாட்களில்
சிரித்தே பார்த்திராத
கணக்கு ஆசிரியர்

Thursday, July 12, 2007

வெயில் பட
சுவரில் ஓவியம்
சிலந்தி வலை
சிரித்த குழந்தை
எச்சிலில்
கடவுள் நதி

Saturday, July 07, 2007

லாந்தர் விளக்கில்
மின்சாரம் கண்டுபிடித்தவரைப்
படிக்கும் சிறுமி

Saturday, February 17, 2007

வெற்றுத்தாள்

வரைந்த ஓவியத்தின்
சில பகுதிகளைத்
திருத்த
அழித்தேன்

ஓவியத்தை புதுபிக்க
எடுத்துக்கொண்ட முயற்சியில்
அழித்ததே அதிகமானது

தின்று முடித்தது ரப்பர்
மொத்த கோடுகளையும்

வெற்றுத்தாளில்
பரவி இருந்தது
நிசப்தம்

பாரம் இறங்கிய
பரவசத்தில்
படபடத்தது தாள்
காற்றில்

Monday, January 22, 2007

புகைப்படம்

புன்னகைக்கச் சொல்லி
எடுத்தவரின் புன்னகையும்
இருக்கிறது புகைப்படத்தில்

Tuesday, January 09, 2007

மனம் தயாரித்த கதை

மனம் தயாரித்த
கதைக்குள் போனேன்
வரவேற்றப் பெரியவர்
பூச்செண்டு கொடுத்தார்
ஏதோ ஒரு பக்கத்தில்
சின்னப்புன்னகை
குழந்தைகள் தம்
கால்பந்து விளையாட்டைப்
பார்க்க வைத்தனர்
கதைக்குள் நிறைய
சந்திப்புகள்
மரணம் பற்றிச் சொன்னது
உடைந்த பனித்துளி
கை நீட்டிய இடமெல்லாம்
பழங்களும் பூக்களும்
ஒரு அத்தியாயத்தில் அருவி
முழுதும் நனைத்தது
கையில் சிக்கிய மீன்கள்
விரலை விட்டு வெளியேறின
கதையின் சில வார்த்தைகள்
மீன்களின் கண்களில்
முடியாத கதையில்
எங்கிருக்கிறேன் என்று
தெரியவில்லை
உள்ளே வந்த குரல்
இழுத்துப்போட்டது
மீன் கொழம்ப கொஞ்சம்
பையனுக்கும் வைங்க

மழையில்

கையிருக்கும் முகவரி
கரைகிறது மழையில்
கால் வழி ஓடும் நதியில்
சொல்லிச்செல்கின்றன மீன்கள்
புதுப்புது விலாசங்களை

Tuesday, January 02, 2007

நூலகத்தை எடுத்துப்போகும் பெண்

தாளலயத்துடன்
ஆடும் ஊஞ்சலைப்போல
அங்குமிங்கும் போய்
வாயில் கவ்வி இருக்கும்
பென்சிலால்
குறிப்புகள் எடுத்து
புத்தகங்கள்
மாறி மாறி வைத்து
கிடைக்கும்
இடம் அமர்ந்து
ஜன்னல் ஒளி ரசித்து
முகத்தின் முத்துக்கள் துடைத்து
கண்களை
எழுத்துக்குள் குவித்து
சொற்களை சுவாசித்து
கடிகாரம் பார்த்து
வேகம் கூட்டி
இன்னும் புத்தகம் தேடி
நடையுடன் ஓடி
ஒரு கணத்தையும்
சேதமாக்காமல்
நூலகத்தையே தனக்குள்
கொண்டுபோகிறாள்
ஒரு பெண்
அவளைபடித்துக் கொண்டிருக்கும் நான்
கை இருக்கும் புத்தகத்துக்கு
எப்படி திரும்ப

Tuesday, December 19, 2006

ஆகாரம்

சுட்டு வீழ்த்திய
பறவையின் வாயிலிருந்தது
குஞ்சுக்கான ஆகாரம்

கதை

தட்டச்சில் கதை
பாதியில் இருக்கிறது
ஆஸ்ட்ரேயில் அணையாத சிகிரெட்

ஒரு பூ

நீண்ட நூலகம்
அதன் அமைதியின் மீது விழுகிறது
கதையிலிருந்து ஒரு பூ

Tuesday, December 12, 2006

துளி

ஒரு கண்ணீர் துளியுடன்
பேச ஆசைப்பட்டேன்
வெளிவந்து
உலகம் பார்த்த பரவசத்தில்
மறைந்து போனது

அரங்கம்

அரங்கம் நிரம்பிவிட்டது
டிக்கெட் கிடைத்த நீ உள்ளே
இல்லாத நான் வெளியே
எனது காட்சி தொடங்குகிறது
கம்பிமேல் நடக்கும்
சிறுமியைப் பார்ப்பதிலிருந்து