Tuesday, September 04, 2007

இருள்பை

திரும்பிய இரவில்
இருளைக் கத்தரித்து
ஒரு பை செய்தேன்
ஒவ்வொரு பயமாய்
அதில் போட்டு வந்தேன்
வழி நெடுகிலும்
வீட்டை அடையும்வேளை
எதிர்படும் யாரிடமாவது
பையை மாற்றிவிடத் திட்டம்
என் நீளமான விசிலுடன்
சேர்ந்திருந்தன
வேறு சில குரல்களும்
ஒன்றை ஒன்று தின்ன
ஆரம்பித்த பயங்கள்
இல்லாமல் போயின
இருள்பை பிய்ந்து
இரவோடு போனது
கதவு திறந்து
கூப்பிட்டது வீடு
விசிலில் இணைந்திருந்தது
பாடலின் பல்லவி

1 comment:

  1. //கதவு திறந்து
    கூப்பிட்டது வீடு
    விசிலில் இணைந்திருந்தது
    பாடலின் பல்லவி //

    புன்னகை தந்தது கவிதையின் கடைசி சில வரிகள்

    ReplyDelete