Sunday, March 23, 2025

மலை ஏறி இறங்குபவர்

மலை ஏறி இறங்கும்

ஒருவரை எனக்குத் தெரியும்

 

ஏறக்குறைய

என் வயது இருப்பார்

 

எனக்கு நடக்கவே

சிரமமாக இருக்கிறது

நீங்கள் எப்படி

இத்தனை மலைகள்

ஏறி இறங்குகிறீர்கள் என்றேன்

 

கண்கள் மலைபோல் விரியச் சொன்னார்

 

கால்களின் பாய்ச்சல்

ஏறி இறங்க வைக்கிறது

மலை வழிக்காட்சிகள்

களைப்பைப் போக்கும் மருந்துகள் என்றார்

 

பிறகு பல காலம் அவரைப்

பார்க்கவில்லை

 

ஒருநாள்

காணக்கிடைந்தார்

 

வயோதிகம் ஒட்டடைப்போல்

அவர் மேல் படிந்து கிடந்தது

 

மலை ஏறி இறங்குவது

குறைந்துவிட்டது என்றார்

 

தேநீர் அருந்தினோம்

உரையாடலுக்குத் தேநீரும்

தேநீருக்கு உரையாடலும் என

நீண்டது

 

கடைசியாக ஒரே ஒருமுறை

மலை ஏறுவேன்

இறங்கமாட்டேன்

குதித்துவிடுவேன்

எனச் சொல்லியபடியே

போய்விட்டார்

 

அதுதான் நான் அவரை

கடைசியாகப் பார்த்தது


அதன் பிறகு பார்க்கவில்லை

 

அவர் சொல்லிப்போனது

அடிக்கடி நினைவில் வந்து

துயரம் தரும்

உடல் நடுங்கும்

 

அவரை இன்னொரு முறை

பார்க்க வேண்டும்

என்று அப்போது தோன்றும்

 

 

 

 

Thursday, March 13, 2025

சிறுமி

 புறப்படப் போகிறது பேருந்து

பேருந்தில் தன் பிறந்த நாள் சாக்லெட் கொடுக்கிறாள் சிறுமி

வாய் திறந்த டப்பாவிலிருந்து

ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்கின்றனர்

கொஞ்சம் பூவை எடுத்து

சிறுமியின் தலையில் வைத்து

வாழ்த்துகிறாள்

ஜன்னலோர இருக்கையில்

அமர்ந்திருக்கும் பூக்காரம்மா

அன்பின் நறுமணம்

பரவுகிறது பேருந்தில்

முன்னேறிய சிறுமி

ஒரு சாக்லெட்டைப் பிரித்து எடுத்து

ஓட்டுநருக்கு ஊட்டுகிறாள்

பாப்பா இவ்வளவு சாக்லெட் வாங்க

காசு இருந்துதா

யாரு வாங்கிக்கொடுத்தா

எங்க அப்பாதான்

எனச்சொல்லி ஓட்டுநரைக்

கட்டிப் பிடிக்கிறாள்

அவர் கண்களைத் துடைத்துக்கொள்கிறார்

வண்டிய எடுங்கப்பா நேரமாகுது

சிறுமி ஆணையிட

நடத்துநர் விசில் அடித்து

அதை ஆமோதிக்க

ஒரு இளவரசியின்

பிறந்த நாள் ஊற்சாகத்தைச் சுமந்துகொண்டு

புறப்படுகிறது பேருந்து



Sunday, January 19, 2025

மெழுகுவத்தி அணையும் வரை...

 மெழுகுவத்தி 

அணையும் வரை

காத்திருந்து

இருளுக்கு

நன்றி சொல்லிவிட்டுப்

போக வேண்டும் என்றார்


நானும் வரவா என்றேன்


ஆழமாகப் பார்த்தார்

பிறகு கேட்டார்

எதற்கு


உங்கள் எண்ணம் பாய்ச்சும்

வெளிச்சத்தில்

என் இருளைப்

போக்கிக்கொண்டே

வரவேண்டும் என்றேன்


எதுவும் பேசாமல் 

அவர் முன்னால் போகப்

பின் தொடர்ந்தேன்

Friday, November 29, 2024

சுவரில் ஆடும் நிழல்

மழை நின்றபாடில்லை
மனதிலும் மின்னல் வெட்டியது
குற்ற உணர்வுகள் மேலெழும்பி வந்தன
மின்விசிறியை நிறுத்தினான்
புழுக்கம் குறைந்தபாடில்லை
இளைப்பாறும் தனிமை
இப்போது பாரமாகத் தெரிந்தது
அது பயத்தின் கதவுகளைத்
திறந்துவிட்டது
அங்குமிங்கும் நடந்தான்
கேள்விகளை
அமைதிப்படுத்த வேண்டும்.
தன்னைத் துன்புறுத்தாத நிம்மதி
அவனுக்குத் தேவைப்பட்டது
அது விடுபடல்
விடுதலை
அல்லது அதுபோல்
மின்விசிறியிலிருந்து
ஒரு ஓவியம் கசிந்து தொங்குவதுபோல்
அவன் நிழல்
சுவரில் ஆடிக்கொண்டிருந்தது

Friday, September 27, 2024

செல்ஃபி


மழையில் நனைந்து போகிறவரை
காரில் அமர்ந்திருப்பவர்
படம் எடுக்கிறார்
நனையும் முதுமை என்று
தலைப்பிட்டு
அதை இன்ஸ்டாகிராமில் போடுகிறார்
மனம் எதையோ
குத்திக் கேட்க
நனைந்து போகிறவர்
அருகில்போய்
காரை நிறுத்துகிறார்
அவரை ஏறிக்கொள்ளச்சொல்கிறார்
கார் நனைந்துவிடும் என்று
அவர் தயக்கம் காட்டுகிறார்
இதழ்கள் விரிய
ஏற்கனவே கார் நனைந்துகொண்டுதான்
இருக்கிறது எனச்சொல்லி
அவரை ஏறவைக்கிறார்
கார் வைப்பரின் சத்தம்
மழையின் இசைபோல் கேட்கிறது
பெரியவர் வீடு நெருங்குகிறது
அவரை இறக்கிவிடும்போது
அவர் கண்களில் இருக்கும்
துளிகளைப் பார்க்கிறார்
பெரியவர் நன்றி சொல்கிறார்
கைகளைப்பற்றி அதைப்பெற்றுக்கொள்கிறார்
அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்
பெரியவர் வேகமாய் வீடு நோக்கிப்போக
சற்றுமுன் போட்ட
போஸ்ட்டை டெலிட் செய்கிறார்
புதிய படத்தைப்போட்டு
அதற்கு ஒரு தலைப்பிடுகிறார்
மழையும் நட்பும்

Sunday, September 22, 2024

சித்திரம்

 மனதில்

தங்கிப்போயிருந்த

சித்திரத்தை

மறதி

கொஞ்சம் கொஞ்சமாய்

அழித்துக்கொண்டே வர

தப்பித்த

எஞ்சிய கோடுகளை

நினைவுகள் சேர்த்து

வேறொரு

சித்திரமாக்கப் பார்க்கிறது

 

Tuesday, September 17, 2024

தெரியுமா உங்களுக்கு

நீங்கள் ஓட நினைத்த தூரத்தை

அவர்கள் ஓடி முடித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் வரைய நினைத்த ஓவியத்தை

அவர்கள் வரைந்து பார்த்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு


நீங்கள் எழுத நினைத்த கதையை

அவர்கள் எழுதிப் பிரசுரித்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் களைப்பில்

இளைப்பாறிய நேரத்தில்

அவர்கள் முனைப்பில்

வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் உறக்கத்தில்

இழந்த வாய்ப்புகளை

அவர்கள் விழிப்பில் வென்றுவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு

 

நீங்கள் காலம் கைகொடுக்கும் என்று

காத்திருந்த நேரத்தில்

அவர்கள் காலத்தோடு கைகோர்த்து

விரைந்துவிட்டார்கள்

தெரியுமா உங்களுக்கு