Sunday, January 27, 2013

பறவையின் கண்கள்

பறவையின் கோணத்திலிருந்து பார்க்க 
மலை கீழே இருக்கிறது 
என் கோணத்திலிருந்து பார்க்க 
மலை மேலே இருக்கிறது
என்றாலும் எனக்குண்டு
பறவையின் கண்கள் 

Saturday, January 26, 2013

எங்கிருந்து

எங்கிருந்து
கேள்விகளை எடுக்கிறீர்கள்
பதில்களிலிருந்து

எங்கிருந்து
பதில்களை  எடுக்கிறீர்கள்
கேள்விகளிலிருந்து

Sunday, January 20, 2013

கடலின் காது

   அலையிடம் கேட்டேன் 
நான் பேசுவதை
   கடலிடம் சொல்வாயா 

என் அறியாமையை 
நனைத்த அலை 
சொன்னது

நான் கடலின் காது 
நீ பேசுவது 
கேட்டுக் கொண்டுதான் இருக்கும்

ஒரே வரி

ஒரே வரியைப் 
படித்துக் கொண்டிருக்கிறேன்
அது வேறு வேறு வரிகளாக 
நீண்டு கொண்டிருக்க 
படிப்பது முடிந்தபாடில்லை 

Saturday, January 19, 2013

குழந்தையின் பூந்தோட்டம்


குழந்தை வரைந்தாள் 
பூந்தோட்டம் 

அசலாய் 
அப்படியே 

பட்டாம்பூச்சி வந்து 
ஏமார்ந்து போகும்படி 

உற்று கவனித்தால் 
வாசனை நாசி தட்டும்

வண்ணம் விதைத்து 
வளர்ந்த தோட்டம்

அவளிடம் மெல்லக் கேட்டேன்

உன் தோட்டத்திற்கு 
இரவு காவலிருக்கலாமா

கண்கள் மலரச் சொன்னாள் 

உங்களை வரைந்து வேண்டுமானல் 
காவலுக்கு வைக்கலாம் 
அப்படியே முடியாது




பெருமிதத்தில்


குளிரைப் போர்த்திக்கொண்டு
உறங்கும் பாட்டி 
அதிகாலையில் 
இறந்திருக்கக்கூடும் என்ற 
வரியோடு 
நடுக்கத்துடன் 
தெரு முனை அடைகிறேன் 
கைகளுக்குள் 
குழந்தையைப் போல 
தேநீரைப் பற்றிக் கொண்டு
ஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டி
என் வரிகளையும் எமனையும் 
எட்டி உதைத்த பெருமிதத்தில்


Monday, January 14, 2013

கனவில் பெய்த மழை

கனவில் பெய்த மழை 
கல்லறையை நனைத்தது 
கல்லறையில் 
உறங்கிய நான் 
புரண்டு படுத்தேன்

மீன்

தூண்டிலைத் தூக்கி 
எறிகிறேன்
நடந்து வந்து 
நன்றி சொல்லிவிட்டுப் 
போகிறது ஒரு மீன்

Thursday, January 10, 2013

மரக்குதிரை

மேஜை மேலிருக்கும் 
மரக்குதிரை 
நாளும் தன் இடங்களை 
மாற்றிக் கொண்டே இருக்கிறது

ஓட்டத்தின் 
குளம்படிச் சத்தம் 
வீடு முழுதும் 
எதிரொலித்து 
வெளியேயும் பறக்கிறது

மறுபடியும் 
அது மேஜை வந்து 
சேரும் போது 
மரமாக 
மாற்றி விட வேண்டும்

Tuesday, January 08, 2013

அசைவு

பால்கனியில் 
கம்பிகளுக்கிடையே
சிறைப்பட்டச் சித்திரம் போல்
அமர்ந்திருக்கும் பெரியவர் 
தன் கையசைவின் வழியே 
என்னோடு நடந்து வருகிறார் 
அசைவு மறையும் வரை 
அதை உணர முடிகிறது

Sunday, January 06, 2013

ரகசியம்

என் ரகசியம் 
அறிந்த நீ 

வேறு யாரிடமும் 
சொல்லி விடுவாயா 

உன்னை நான் 
கொன்று விடுவேனா 

பயமாக இருக்கிறது 
எனக்கு

மழை


எல்லா மழையும்
என் மழைதான் என்கிறான்
குட்டிப்பையன்
சத்தமாக

பெய்யாத மழையும்
என் மழைதான் என்கிறாள்
குட்டிப்பெண்
சந்தோஷமாக

Saturday, January 05, 2013

கடல்

நேற்று விட்டு வந்த என்னைத் 
தாலாட்டிக் கொண்டிருந்தது 
இன்று பார்த்த கடல்

அசைவு

வானத்தின் கீழே 
சிறு பறவையாகி மறைகிறது 
உன் கைக்குட்டை அசைவு