Powered by Blogger.

ராஜா சந்திரசேகர் கவிதைகள்

பிடுங்குதல்

Saturday, September 21, 2019

பிடுங்கு
மெல்ல பிடுங்கு
தெரியாமல் பிடுங்கு
தெரிந்தால் சிரி
கள்ளச்சிரிப்பு
கனக்கச்சிதம்
இசை நரம்புகளை
வருடுவது போல்
முதுகை தடவியபடியே
பிடுங்கு
பிடுங்கியவற்றை
கார்ப்பரேட்டுகளிடம் கொடு
அங்கும் சிரி
அவர்கள் மர்மச் சிரிப்பும்
உன் கள்ளச் சிரிப்பும்
இணையட்டும்
இது போல்
விடாமல் செய்
விதவிதமாய் பிடுங்கு
பிடுங்கிப் பிடுங்கி
கார்ப்பரேட்டுகளை
வளர்க்கப்பார்
எம் மண்ணில்
பிடுங்க எவ்வளவோ இருக்கிறது
ஏமாற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்
வேரோடு பிடுங்கும் போது
புனித கண்ணீர் சிந்து
நடக்கட்டும்
ரகசிய சூதாட்டம்
கார்ப்பரேட்டுகளோடு
கேம் விளையாடு
சேக்ரட் கேம்
சத்யமேவ ஜெயதே


மாபெரும் ரப்பர்

Monday, July 01, 2019

மாபெரும் ரப்பரால்
என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன்
அழித்துக்கொண்டிருப்பேன்
மாபெரும் ரப்பர்
சிறிய
மிகச் சிறிய
அதனினும் சிறிய
ரப்பராவதற்குள்
இது நிகழ்ந்து விட வேண்டும்

இல்லாது போன கவிதை

Sunday, June 30, 2019

மலையுச்சிக்குப் போய்
தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு
அவன் குதித்துவிட்டான்

ஏறி வந்து
மலை மலரைப்
புகைப்படம் எடுக்கும்
புகைப்படக்காரரின்
கைகளில் போய்
அமர்கிறது
அந்தக் காகிதம்

இதழ் போல்
அதை எடுத்து
எழுதி இருப்பதைப்
படித்துவிட்டு
படபடப்புடன்
தன் உயிரைத் தேடுவது போல்
ஓடி ஓடித் தேடுகிறார்
இல்லாது போன கவிதையை


நான் வாசித்த வரிகள்

Friday, June 07, 2019

கனவிலும்
மரம் வளர்ப்போம்.
கனவுகளை
வளர வைப்போம்.

காது கொடுத்து
மரத்திடம் கேளுங்கள்
பிரபஞ்சத்தின் துடிப்பை.

முதலில்
உன் மனதிலுள்ள
கோடரியைத்
தூக்கி எறி
பின் கையிலுள்ள
கோடரி
தானே விழும்

மரங்கள்
நிமிர்ந்து நிற்கும் வாக்கியங்கள்
இதில் நாம்
இயற்கையைப் படிக்கலாம்

விதை இருந்த
உள்ளங்கையை மூடினேன்
நான் மரமானேன்.

கடவுள் அவன் கனவில் வந்து கேட்டார்
நீ வசிக்க சிறிய இடம் போதுமா
அவன் சொன்னான்
இல்லை பெரிய இடம் வேண்டும்
என்னோடு மரங்களும் வசிக்க.

(நான் வாசித்த வரிகள் -உலக சுற்றுச்சூழல் தினம் – 5.6.2019 -TREE TRUST உயிர் வாழ ஒரு மரம்.
மரம் சூழலியல் நடுவம்&நாற்றங்கால் துவக்க விழா-கோவை)

கேள்விகள்

Friday, April 05, 2019


எத்தனை எத்தனை கோடிகள்?
ஆயிரமாயிரம் கேள்விகள்?

எங்கிருந்து வருகிறது?
எப்படிக் கிடைக்கிறது?

பதில் சொல்ல வேண்டியவர்கள்
சொல்லாமல் போகக் கூடாது.

கேள்வி கேட்க வேண்டியவர்கள்
கேட்காமல் விடக்கூடாது.

பாறை விழுங்கிய உளி

Tuesday, March 26, 2019


பாறை விழுங்கிய உளி
சிலையின்
தொண்டைக்குள் போய்
சிக்கிக்கொண்டது
2-
மழையில் சந்தித்தோம்
சொற்கள் நனைய
பேசிக்கொண்டிருந்தோம்
3-
நினைவு
துயரத்தை
அள்ளி எடுத்து
மனதுக்கு
ஊட்டப்பார்க்கிறது
4-
காமம்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது
காதல்
திறக்கலாமா வேண்டாமா என யோசிக்கிறது
5-
என் சொற்களை
உன் மெளனம்
தாய்மையுடன்
தடவும்போது
சுரக்கின்றன
அன்பின் பாடல்கள்

தண்டவாளங்களுக்கிடையில்

நடந்து போகிறவனை
விரட்டி வருகிறது ரயில்
இந்த வரிக்கு
அடுத்த வரியை
நீங்கள் எழுத விரும்பினால்
அவனைக் காப்பாற்றிவிடுங்கள்
இல்லையெனில்
இந்தத் தாளை
கிழித்து விடுங்கள்
நீங்கள் என்ன
எழுத நினைத்தீர்கள்
என்று மட்டும்
கேட்டுவிடாதீர்கள்                

காற்றில் பறந்த கடிதம்

Sunday, February 03, 2019

தற்கொலைக் கடிதம் எழுதிய அவன்
மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான்
சில பிழைகளைத் திருத்தினான்
அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான்
கடந்து வந்த ரணங்களை
எழுத்து கடத்தி இருப்பது குறித்து யோசித்தான்
இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற
பாதை வரைபடம் தன்னுள் அவனைப் பார்க்க வைத்தது
நாமா இப்படி எழுதி இருக்கிறோம் என ஆச்சர்யப்பட்டுப்
பேனாவை இறுக்கப்பிடித்தான்
சிந்திய மைத்துளிகள் பறப்பது போல் உணர்ந்தான்
உராய்வுகளுக்கு உயிரிழப்பா முடிவு என
அவன் எழுதாத ஒரு வரி வந்து
மூளையில் தட்டியது
இருத்தல் என்பது வாழ்ந்து தீர்ப்பதல்ல
வாழ்ந்து பார்ப்பது
அவனுள் எதிரொலித்தது
என்னைக் கொன்று போட
நான் யார்
இந்த ஒலி அவனைச் சுற்றி வந்தது
இப்படிக்கு இறக்கத்துடிக்கும் ஒருவன்
என்ற வரியை
மாற்றி எழுதினான்
ஏழாவது மாடியிலிருந்து
அந்தக் கடிதம்
பறவையைப் போல்
போய்க்கொண்டிருந்தது
இப்படிக்கு
வாழ விரும்பும் ஒருவன் என
அது முடிந்திருந்தது
அவன் படிகளில்
இறங்கிப்போய்க்கொண்டிருந்தான்
 
அமேசானில் மின்னூல்கள்Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்