Monday, April 30, 2018

நன்றி

கற்றுத்தரும் தருணங்களுக்கு நன்றி 
பெற்றுத்தரும் தருணங்களுக்கு நன்றி
பெருமை சேர்க்கும் தருணங்களுக்கு நன்றி
அன்பான தருணங்களுக்கு நன்றி
அழைத்துச்செல்லும் தருணங்களுக்கு நன்றி
இயல்பான தருணங்களுக்கு நன்றி
இணைந்துகொள்ளும் தருணங்களுக்கு நன்றி
உயர்வானத் தருணங்களுக்கு நன்றி
உவப்பான தருணங்களுக்கு நன்றி
பிரார்த்தனைத் தருணங்களுக்கு நன்றி
பிரியமான தருணங்களுக்கு நன்றி
புன்னகையின் தருணங்களுக்கு நன்றி
புதிதாக்கும் தருணங்களுக்கு நன்றி
புரிய வைக்கும் தருணங்களுக்கு நன்றி
தனிமையான தருணங்களுக்கு நன்றி
தங்கிப்போகும் தருணங்களுக்கு நன்றி
நெகிழ்வானத் தருணங்களுக்கு நன்றி
நட்பின் தருணங்களுக்கு நன்றி
நாளின் தருணங்களுக்கு நன்றி
நன்றி சொல்ல வைக்கும் தருணங்களுக்கு நன்றி

Wednesday, April 25, 2018

பனி நள்ளிரவு கனவு

பனி பெய்கிறது
நள்ளிரவு பார்க்கிறது
கனவு நடுங்குகிறது

Monday, April 23, 2018

பக்கங்கள்

எல்லாப் பக்கங்களிலும்
பறந்துகொண்டிருந்தது
பட்டாம்பூச்சி

கையிலிருப்பது
வனமா
புத்தகமா

 


Monday, April 16, 2018

போ

அவகாசம் கேள்
தள்ளிப் போடு
காலம் கடத்து
கத்திப் பேசு
குழப்பு
மயக்கம் கொள்
மந்தமாக இரு
அடிமைகளை உன் பாட்டுக்கு ஆட விடு
விக்கல் வருது பார்
நீயே நீர் குடி
விவசாயிகளின் தற்கொலைப்பட்டியலைப் பிரி
உரக்கப்படி
உடல் அதிர்வு இருக்கட்டும்
கண்ணீர் விடு
கள்ள மெளனம் விடாதே
மேடை அபகரி
வேடங்கள் போடு
நடி
உளறு
உணர்ச்சிவசப்படு
உன் வசதிக்கு வளை
அழுத்தம் கொடு
வீக்கம் மறை
ஊடக வெளிச்சத்தில் உருகு
வசனங்களை மாற்றிக்கொண்டே இரு
விடாமல் அரசியல் செய்
மக்கள் மனதிலிருந்து அழிந்து போ

ஜூனியர் விகடன்(8.4.2018) இதழில் வெளியானது. 

Saturday, April 07, 2018

இரண்டிலும்

ஆழ்ந்த மௌனத்தில்
தியானம் இருந்தது

ஆழ்ந்த தியானத்தில்
மௌனம் இருந்தது

இரண்டிலும்
நானில்லை

Sunday, March 18, 2018

நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்

இந்தக் கவிதையை
எழுதும் போது
நான் இறந்துகொண்டிருக்கிறேன்


இந்தக் கவிதையை
படிக்கும் போது
நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்

அப்பா சொல்லுவார்

அப்பா சொல்லுவார்
உன் எழுத்தில்
ஈரம் இருக்கிறது

நான் சொல்லுவேன்
அது நீங்கள் தந்தது

துளிக்கண்ணீரைத்
துடைத்துக்கொண்டு
மெளனத்துள் மூழ்கிப் போவோம்

Tuesday, March 13, 2018

கைதி எண் 616

சிறைக்கம்பிகளுக்கு
அருகில் போய்
கம்பியைத் தட்டிப்பார்த்து
ஒரு துண்டு வெட்டியெடுத்து
துளைகளிட்டு
புல்லாங்குழலாக்கி
வாசிக்கத் தொடங்கினான்

      

Monday, March 05, 2018

முடியாத கதை

அம்மா குழந்தைக்கு
கதை சொன்னபோது
முதல் குண்டு வெடித்தது

கதை பாதியிலிருந்தபோது
இரண்டாவது குண்டு வெடித்தது

அவர்களோடு
முடியாத கதையும் இறந்து கிடந்தது


Sunday, March 04, 2018

ரயில்

எல்லோரும்
அவரவர் உலகத்தில்

புல்லாங்குழல்
வாசிக்கும் சிறுவன்

கேட்டபடி
போகும் ரயில் 

Wednesday, February 28, 2018

பாடப்போகிறேன்

மனம் பிசையும்
சொற்களை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறாய்
ஒரு துயரமான பாடலை
பாடப்போகிறேன்

Monday, February 26, 2018

வானத்திற்கு...

பொத்தான் மாற்றிப்போட்டு
கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன்
ஒரு பட்டம் வேணும் என்றான்

அந்த வானத்திற்கு
வாங்கிக்கொடுத்தேன்
கூடவே உணவையும்

Thursday, February 22, 2018

குழந்தையும் நானும்

குழந்தையும் நானும்
ஓர் உரையாடல்

உன் தொப்பிக்குள்
என்ன இருக்கிறது

குட்டி உலகம்

உங்கள் தொப்பிக்குள்
என்ன இருக்கிறது

குட்டி உலகத்துடன் பேச‌
கொஞ்சம் சொற்கள்

 

Tuesday, February 06, 2018

வழிப்போக்கன்

யாரும் கவனிக்காத
வழிப்போக்கனை
பாதை கவனித்து
அழைத்துப் போகிறது

யாரோ ஒருவன்

நள்ளிரவை
எழுப்பியபடியே
சாலையில்
யாரோ ஒருவன்
என் குரலில்
பாடிப்போகிறான்

Saturday, February 03, 2018

ஏதோ ஒரு கோணத்தில்

எல்லாக் கோணங்களிலும்
பொய்யாகத் தெரியும் என்னை
ஏதோ ஒரு கோணத்தில்
உண்மையாகப் பாக்கிறேன் என
நீங்கள் சொல்வது
கடைந்தெடுத்த பொய்

நினைவில் சொற்கள்

நினைவில் சொற்கள் 
சேர்ந்துவிட்டன 
மறதி வந்து 
களவாடுவதற்குள் 
எழுதிவிட வேண்டும் 


Wednesday, January 31, 2018

பறவையைப் போல‌

தண்டவாளங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை 
என்று அவன் எழுதிய வரியின் மேல் 
சத்தமிட்டுப்போகிறது ரயில் 
அவன் வேகமாகக் கீழிறங்கி 
ரயிலுக்குக் கையசைக்கிறான் 
மேலெழும்பிப்போகிறது காகிதம் 
பறவையைப் போல‌

       

Monday, January 29, 2018

இடையில்

பொய்களின் தொடர்ச்சியாக‌
எல்லோரும் தெரிகிறார்கள்

உண்மையின் நீட்சியாக‌
ஒருவரும் இல்லை என்றார்

நீங்கள் எந்த வரியில்
இருக்கிறீர்கள் என்றேன்

இரண்டு வரிகளுக்கும்
இடையில் என்றார்

Saturday, January 27, 2018

நினைவில்

துரிதமாக‌
சுயமைத்துனம்
செய்துகொள்பவனின்
நினைவில்
நிதானமாக‌
ஒரு பெண்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்