Wednesday, February 28, 2018

பாடப்போகிறேன்

மனம் பிசையும்
சொற்களை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறாய்
ஒரு துயரமான பாடலை
பாடப்போகிறேன்

Monday, February 26, 2018

வானத்திற்கு...

பொத்தான் மாற்றிப்போட்டு
கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன்
ஒரு பட்டம் வேணும் என்றான்

அந்த வானத்திற்கு
வாங்கிக்கொடுத்தேன்
கூடவே உணவையும்

Thursday, February 22, 2018

குழந்தையும் நானும்

குழந்தையும் நானும்
ஓர் உரையாடல்

உன் தொப்பிக்குள்
என்ன இருக்கிறது

குட்டி உலகம்

உங்கள் தொப்பிக்குள்
என்ன இருக்கிறது

குட்டி உலகத்துடன் பேச‌
கொஞ்சம் சொற்கள்

 

Tuesday, February 06, 2018

வழிப்போக்கன்

யாரும் கவனிக்காத
வழிப்போக்கனை
பாதை கவனித்து
அழைத்துப் போகிறது

யாரோ ஒருவன்

நள்ளிரவை
எழுப்பியபடியே
சாலையில்
யாரோ ஒருவன்
என் குரலில்
பாடிப்போகிறான்

Saturday, February 03, 2018

ஏதோ ஒரு கோணத்தில்

எல்லாக் கோணங்களிலும்
பொய்யாகத் தெரியும் என்னை
ஏதோ ஒரு கோணத்தில்
உண்மையாகப் பாக்கிறேன் என
நீங்கள் சொல்வது
கடைந்தெடுத்த பொய்

நினைவில் சொற்கள்

நினைவில் சொற்கள் 
சேர்ந்துவிட்டன 
மறதி வந்து 
களவாடுவதற்குள் 
எழுதிவிட வேண்டும் 


Wednesday, January 31, 2018

பறவையைப் போல‌

தண்டவாளங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை 
என்று அவன் எழுதிய வரியின் மேல் 
சத்தமிட்டுப்போகிறது ரயில் 
அவன் வேகமாகக் கீழிறங்கி 
ரயிலுக்குக் கையசைக்கிறான் 
மேலெழும்பிப்போகிறது காகிதம் 
பறவையைப் போல‌

       

Monday, January 29, 2018

இடையில்

பொய்களின் தொடர்ச்சியாக‌
எல்லோரும் தெரிகிறார்கள்

உண்மையின் நீட்சியாக‌
ஒருவரும் இல்லை என்றார்

நீங்கள் எந்த வரியில்
இருக்கிறீர்கள் என்றேன்

இரண்டு வரிகளுக்கும்
இடையில் என்றார்

Saturday, January 27, 2018

நினைவில்

துரிதமாக‌
சுயமைத்துனம்
செய்துகொள்பவனின்
நினைவில்
நிதானமாக‌
ஒரு பெண்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்

உயிர்த்தெழுவேன்

எழுத்தில்
புதைந்து கிடக்கிறேன்
நீங்கள் படிக்கும்போது
உயிர்த்தெழுவேன்

Friday, January 26, 2018

இந்த வரிகளில்

கையிலிருந்து
உருண்டுபோய்
கார் சக்கரத்தில்
நசுங்கிவிட்டது
புல்லாங்குழல்
நான் கேட்பதெல்லாம்
வலியை
கொஞ்சம் இசையை


நானும்

எல்லோரும் போய்விட்டார்கள்
தனிமையும் போய்விட்டது
நானும் போய்விடுவேனோ என்று
பதட்டமாக இருக்கிறது

     

Wednesday, December 27, 2017

ஒரு கணம்...

ஒரு நாளைக்கு
எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக்
கொல்வீர்கள் என்று
எழுதிய கை
ஒரு கணம்
பாம்பாகி மீண்டது
நான் நடுக்கம் கலைந்து
வரியின் அடியில் கிடந்த‌
பட்டாம்பூச்சிகளை எடுத்து
ஒவ்வொன்றாகப்
பறக்கவிட்டேன்

Sunday, December 03, 2017

எவ்வளவோ இருக்கிறது

மருத்துவமனை  வெளிப்புறத்தில்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும்

கண்ணீரைத் துடைக்காமல்
அவரையே பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கும்
பெரிய தூரமில்லை

அருகில் போய்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்கிறது


Tuesday, October 24, 2017

குழப்பம்

எந்தக் கண்ணாடியிலும்
என் முகம் தெரியவில்லை
குழப்பமாக நான் பார்க்கிறேன்
குழப்பமாகக் கடைக்காரர் பார்க்கிறார்
குழப்பமாகக் கண்ணாடி பார்க்கிறது

Tuesday, October 10, 2017

சிறைக்கம்பிகளின் வழியே

சிறைக்கம்பிகளின் வழியே
அப்பா நிலவைப் பார்ப்பார்
நினைவுகள் முடிந்து போக
நிலவு மறைந்து போகும்
நிலா இல்லாத இரவில்
அப்பா எதைப் பார்ப்பார்
கேட்கிறது குழந்தை
அம்மா பதில் சொன்னாள்
உன்னை


Friday, October 06, 2017

அழித்து விட்டேன்


வழிப்போக்கன் நான்
சாலை விசாரிப்புகள்
போதும் எனக்கு
*
விடுகதைப் போட்டுவிட்டுப்
போகிறது பட்டாம்பூச்சி
வழியில் தென்படும்
வேறு ஒரு பட்டாம்பூச்சியிடம்
விடை கேட்க வேண்டும்
*
கை அசைவை
கிளை அசைவு கவனிக்கிறது
இந்த வரி
மனதில் அசைகிறது
*
நனைந்து
நடக்கும்போது
மழையும்
உடன் வருகிறது
*
நிழல் கடந்து
போகிறேன்
நினைவுகளில்
இளைப்பாறிக்கொள்ளலாம்
*
இரண்டு கால்கள் உறங்க
எதிரே நடந்து போகிறார்
எட்டுக் கால்களுடன்
நின்று நகர்கிறேன்
*
பேருந்து
காலியாக இருக்கிறது
நடத்துநர்
ஏறச் சொல்கிறார்
நிரம்பி இருக்கிறேன் நான்
போகச் சொல்கிறேன்
*
பயணம்
சொல்லப்போவதை
எழுத
இருந்த எல்லாவற்றையும்
அழித்து விட்டேன்

Saturday, September 30, 2017

குழந்தையிடம் கேட்டேன்

ஒரு கையில் பூ 
ஒரு கையில் மிட்டாய்
எது வேண்டும் 
குழந்தையிடம் கேட்டேன் 
தலையில் பூவை 
வைக்கச்சொல்லிவிட்டு 
மிட்டாயை வாங்கிக்கொண்டு 
ஓடி விட்டது 

      

Thursday, September 28, 2017

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

உங்களை நினைத்தால்
சிரிப்பு சிரிப்பாய் வருகிறது

உண்மையில்
உங்களை நீங்கள் எடை போடலாம்

தைரியத்தில்
உங்களை எடை போடலாம்

நம்பிக்கையில்
உங்களை எடை போட்டுப் பார்க்கலாம்

அன்பில் கூட
அதைச் செய்யலாம்

நட்பில்
உறவில்
பகிர்தலில்
உபச்சரிப்பில் என
உங்களை நீங்கள்
எடை போட்டுப் பார்க்கலாம்

இதையெல்லாம் விட்டுவிட்டு
தராசில்தான்
என்னை நான் எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்று
நீங்கள் சொல்வதை நினைத்தால்

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது