Sunday, August 12, 2012

பிறந்த தேதி


கை நீட்டினாள் தேவதை
சிரித்தபடி

அவள் தாயிடம் கேட்டேன்
இவ பிறந்த தேதி
உனக்குத் தெரியுமா

அட போங்கைய்யா
என் பிறந்த நாளே
எனக்குத் தெரியாது

அவ அப்பன் யாருன்னும்
தெரியாது

இவளே நானே
தனியா பெத்தெடுத்தப்ப
மழை பெஞ்சுது
அது தெரியும்
என் வலிக்கு ஒத்தடமா
தூறிக்கிட்டிருந்தது

சிக்னல் விழ
என் வாகனத்தைத்
தாண்டிக்கொண்டு போய்
இடம் தேடி நிறுத்தி
திரும்பி வந்து பார்க்க
அவர்களைக் காணவில்லை

மழை தொடங்கி இருந்த்து

அப்போது அது
என் மேல் விழும்
அமிலமாகப் பட்டது

கிடைத்த வரிகள்

ஒதுங்கிய பிணத்துடன் 
கரைந்து மீந்து 
கிடைத்த வரிகள் 
நான் நீச்சல் 
கற்றுக் கொள்ளாதது 
என் தற்கொலைக்கு 
உதவியது

அனுபவ சித்தனின் குறிப்புகள்

950-

மெளனத்தில் 
புதைந்து போனாலும் 
இறந்து போவதில்லை 
வார்த்தைகள்

951-

எல்லோரும் 
திருடர்கள் 
அளவுகள்தான் 
வித்தியாசம்

952-

கனவில் 
திறந்து மூடும் 
சவப்பெட்டி 
ஒரு முறை 
கிள்ளிப் பார்த்து 
புரண்டு படுத்தேன்

953-

வனம் வந்த 
கனவால் 
புல் கொள்ளும் 
பெருமிதம்

954-

புள்ளியை உரித்தேன்
நகம் 
ருசியறிய

955-

அழகான 
இந்த வரியைக் 
கிளறிப் பார்க்காதீர்கள்
அழகற்று எதுவும் 
இதில் 
ஒளிந்திருக்கவில்லை

956-

கலைக்கும் நேரம்தான் 
எனக்கு 
வேஷம் போடுவதற்கும்




பாடு

பாட 
ஒன்றுமில்லை 

சரி 
ஒன்றுமில்லாததைப் 
பாடு

Sunday, August 05, 2012

கோடு


கேள்விக்குறியை 
நிமிர்த்திக் கோடாக்கினேன் 
எதற்கு இதை 
செய்தோம் என்று 
கேள்வி எழுந்தது 

Wednesday, August 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

944-
எடையற்ற 
உங்கள் மனிதாபிமானத்தை 
வைத்துக்கொண்டு 
என்ன செய்ய
தட்டில் 
காசு வைத்தால் 
தராசு நிமிரலாம்


945-
கண்ணீரால் 
வரையச் சொன்னால் 
புன்னகையை 
வரைந்து காட்டுங்கள்


946-
கணிதம் வழியே 
பயணப்படும் அன்பு 
கணக்குப் பார்த்து 
முடிந்துவிடும்


947-
பெரும் கொண்டாட்டங்களில்
சிறு கண்ண்ணீர்த் துளியை 
விரல் மட்டுமே 
கவனிக்கிறது

948-
புல்லிடம் 
நட்பைச் சொன்னேன்
உனக்கு ஒரு நாள் 
வனத்தின் கதைகளைச் 
சொல்கிறேன் என்றது

949-
குழந்தையின் ஆச்சர்யத்திற்குள் 
நுழைந்தேன்
பேருலகம் வரவேற்றது
















மொழி வனம்

மொழி வனத்தில் 
நான் தொலைந்த 
சிறு பூச்சி 
மொழி தொட்டு 
ஆனேன் நான் 
பட்டாம் பூச்சி

பேரம்

சவப்பெட்டிக்கு 
பேரம் பேசிக்கொண்டிருந்தேன் 
விலை மதிப்பற்ற
உங்கள் உயிரைக் 
கூவிக் குறைக்காதீர்கள் 
என்றான் விற்றவன்

Tuesday, July 24, 2012

சூதாட்டம்

மதுவோடு 
சூதாடிக் கொண்டிருந்தேன் 
போதையின் உச்சத்தில் 
என்னைப் போட்டுடைத்து 
போட்டியை 
முடித்துக்கொண்டது

பிரார்த்தனை

ஆலயமணி அடிக்கும் 
பெரியவருக்கு பெரிதாய் 
என்னப் பிரார்த்தனை 
இருந்துவிடப் போகிறது 
தினம் மணி அடிக்கும் 
சக்தி தா 
என்பது தவிர

Monday, July 23, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

941-
விழித்துக் கொள்ளும் எழுத்து 
என்னைத் 
தூங்க விடுவதில்லை


942-
முடிவாக 
என்ன சொல்கிறீர்கள்
முடிக்கச் சொல்கிறேன்


943-
பட்டாம்பூச்சி 
பறந்த தடத்தில் 
நடந்து போனேன்






கோமாளி

கோமாளி வேஷமே 
எனக்குப் பொருந்துகிறது
உள்ளிருக்கும் 
நாயகன் வண்ணம் 
அதைக் கலைக்கிறது

எதுவுமில்லை

என் எழுத்தில் 
எதுவுமில்லை 
இழுத்துச் செல்லும் 
இந்த எறும்புக்கு 
ஏதாவது கிடைக்கலாம் 
பசியாற 
உரையாட

Sunday, July 22, 2012

தொப்பி

உங்கள் தொப்பிக்குள் 
நீங்கள் இருக்கிறீர்களா 
குழந்தைக் கேட்டது 
அங்கிங்கு 
அலைந்த நான் 
உடனே ஓடிவந்து 
சேர்ந்து 
ஆமாம் என்றேன் 
தொப்பியைச் சரிசெய்தபடி

Wednesday, July 18, 2012

பிரார்த்தனை

கண் மூடிப் பிரார்த்தனை
செய்தாள் குழந்தை 

என்ன வேண்டுகிறாய் 
என்றேன் 

நனைந்து ஆட
மழை வேண்டுமென்று 

உடனே தூறியது

வியந்து பார்க்க
குதித்தபடியேச் சொன்னாள்

என் பிரார்த்தனை
கடவுளுக்குப்
போய்ச் சேரும் முன்
மழைக்கு கேட்டுவிட்டது
உடனே வந்துவிட்டது

மிதத்தல்

நினைவில் மிதந்த 
மீனை எடுத்து 
வெளியில் போட்டேன் 
பறந்து போயிற்று

Monday, July 16, 2012

தொலைந்த கடவுள்

தொலைந்த கடவுளை 
கண்டுபிடித்து 
உங்களை யாரிடம் 
ஒப்படைக்க வேண்டும் என்றேன் 

நான் உன்னை 
அடையவே வந்தேன் 
நீ என்னைத்
தொலைத்து விட்டாய் என்று 
சொல்லியபடியே 
மறைந்து போனார்

அனுபவ சித்தனின் குறிப்புகள்

934-

நள்ளிரவைப் 
பிளக்கும் முயற்ச்சியில் 
இன்றும்  போயிற்று
தூக்கம்


935-

விரிந்ததை 
விவரிப்பதில்லை
எந்த பூவும
ரசி

936-

சாப்பிட்டு நாளாகிறது என்று 
பசி வலியோடு 
கெஞ்சுபவன் வரியிலும்
இருக்கிறது வயிறு 

937-

அறிவு கனிந்த 
சபையில் நான்
பழம் பொறுக்குபவன்

938-

வண்ணங்களை 
சேர்த்தாயிற்று
ஓவியனை 
சேமிக்க வேண்டும்

939-

இன்னும் கொஞ்சம்
தூங்க வேண்டும்
விழிப்பிடம்
சொல்லி வைக்கிறேன்


940-


யுத்தம் பழகி வைத்திருப்பவர்கள் 
இருக்குமிடத்தை எல்லாம் 
போர்க்களமாக்கி விடுகின்றனர்









Saturday, July 14, 2012

வழி


நுழைவாயில் 
அடைக்கப்பட்டு விட்டது 
எப்படி உள்ளே வந்தீர்கள் 

சாவி துவாரத்தின் 
வழியாக 

முனையில்

நாக்கின் முனையில் 
மேய்ந்த தேளை 
தள்ளிக் கொன்றேன் 
வார்த்தைகள் 
நஞ்சிறங்கி 
நலம் பெற்றன