Friday, July 20, 2018

இருத்தல்

எப்படி எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பதை
அவன் பட்டியலிட்டான்
கயிற்றில் தொங்கலாம்
.தண்டவாளங்களின் நடுவில் நடந்து போய்
ரயில் மோதிச் சிதறலாம்
விஷமாத்திரைகள் விழுங்கலாம்
கை நரம்புகள் அறுத்து மரணம் வடிய முடியலாம்
மலை மீதிருந்து குதிக்கலாம்
கடல் இறங்கிக் கரை மிதக்கலாம்
உண்ணா நோன்பிருந்து மரணம் புசித்துப் போகலாம்
உடலில் எண்ணெய் ஊற்றித் தீக்குச்சி உரசிப் பற்றவைத்துக்கொள்ளலாம்
இப்படி வரிசைப்படுத்தினான்
ஒருகணம் வாழ்ந்துப் பார்த்துவிட வேண்டும் என
பொறிதட்ட வரிசை இப்படி மாறியது
கயிற்றில் குழந்தைப் போல் கொடிகளைக் கட்டி
வீட்டை அலங்கரித்தான்
போகும் ரயிலுக்குக் கை அசைத்துவிட்டு
தண்டவாளத்தை முத்தமிட்டான்
விஷமாத்திரைகள் என்று தாளில் எழுதி
ரப்பரால் அழித்து ஊதித்தள்ளினான்
ஒரு கையில் பறவையும் மறு கையில் வானமுமாக
பச்சைக்குத்திக்கொண்டான்
மலை மீது ஏறிக் காட்சிகள் பார்த்துக் கண்களுக்குள் சேமித்தான்
வானத்துக்கும் அவனுக்கும் இடையில் போன பறவையை
எட்டிப் பிடிக்கப் பார்த்தான்
நீச்சல் கற்றுக்கொண்டு நீந்தி நீந்திக் கடலோடு உரையாடினான்
அலைகளோடு அலையானான்
எல்லா இடங்களிலும் எல்லா வகை உணவுகளையும்
ரசித்து ருசித்துச் சாப்பிட்டான்
எண்ணெய் ஊற்றித் தீக்குச்சி உரசி அழகான விளக்கேற்றி
எழுத அருகில் சில தாள்களை வைத்தான்
அசையும் சுடரின் தாளலயத்துக்கேற்ப
இருத்தல் பற்றி எழுதத் தொடங்கினான்


-குங்குமம்(20.7.2018)இதழில் வெளியானது.-

Thursday, July 19, 2018

ஓடி ஓடி

ஓடி ஓடி
என்னைப் பிடித்தேன்
பிறகு விடுவித்தேன்
ஓடிப்போகட்டும் என்று
 
 

Tuesday, July 17, 2018

யோசனைக்கூடம்

கேள்விகள் கேட்டால்
அடைக்கிறீர்கள்
பதில்கள் சொல்லாமல்
தவிர்க்கிறீர்கள்
அவர்களுக்கு
அது சிறையல்ல
யோசனைக்கூடம்
மேலும் கேள்விகளோடு
வருவார்கள்
உங்களைக் கிழிக்க

Saturday, July 14, 2018

இடையில்

பிடிபடாத மெளனம்
பிடிபடும் சொற்கள்
இடையில் இருக்கிறது
எழுத வேண்டிய கதை